மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

தொடங்கியது மருத்துவக் கலந்தாய்வு!

தொடங்கியது மருத்துவக் கலந்தாய்வு!

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு, அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இன்று (ஜூலை 8) தொடங்கியது.

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. ஜூன் 5 அன்று தேர்வு முடிவினை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டது. நீட் தேர்வில், இந்தாண்டு இந்திய அளவில் 56.50 சதவிகித மாணவர்களும், தமிழக அளவில் 48.57 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

ஜூன் 6ஆம் தேதி மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார். தற்போது, அரசு மருத்துவக் கல்லூரி ஒதுக்கீட்டுக்கு 3,968 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,070 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன. இதுபோல, தனியார் கல்லூரிகளில் 852 எம்.பி.பி.எஸ் இடங்களும், 690 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன.

முதல் நாளான இன்று (ஜூலை 8), மாற்றுத் திறனாளி மாணவர்கள், முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 558 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஜூலை 9) தொடங்கி அடுத்த ஐந்து நாட்கள் நடைபெறும்.

இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் தலைவர் செல்வராஜ் என்பவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், “இந்தாண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் முதல் கட்ட கலந்தாய்வு இன்று முதல் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். இதற்காக 60,997 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் தகுதியான விண்ணப்பங்கள் 57,004. இன்று விளையாட்டுத் துறை மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக கலந்தாய்வு நடைபெறுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon