மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

என்.ஆர். இளங்கோ மனு தாக்கல்: வைகோ விளக்கம்!

என்.ஆர். இளங்கோ மனு தாக்கல்: வைகோ விளக்கம்!

ராஜ்யசபா தேர்தலில் திமுகவின் நான்காவது வேட்பாளராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ இன்று (ஜூலை 8) காலை 11 மணிக்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவின் சண்முகம், வில்சன் ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர்.

இதில் வைகோவின் வேட்பு மனுவை நிராகரித்து அதன் மூலம் மீதி ஒரு இடத்தை காலியாக்கி, அதற்கு தனியாக தேர்தல் நடத்தி அதிமுக ஆதரவின் மூலம் தனது வேட்பாளரை நிறுத்தி ஜெயிக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக அறிந்து, இதை முதன் முதலில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் நேற்று வெளியிட்டோம். இதைத் தொடர்ந்து, பாஜகவின் இந்த திட்டத்துக்கு பதிலடி கொடுப்பதற்காக ஸ்டாலின் நான்காவது வேட்பாளரை களமிறக்கஇருக்கும் வியூகத்தையும் இன்று காலை மின்னம்பலத்தில் வெளியிட்டோம்.

அதன்படியே இன்று சரியாக காலை 11 மணிக்கு சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு வழக்கறிஞர்கள் புடை சூழ சென்றார் என்.ஆர். இளங்கோ. அங்கே ஸ்டாலினை சந்தித்தார். சிறிது நேர ஆலோசனைக்குப் பிறகு, ஸ்டாலின் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால் மூத்த வழக்கறிஞர்கள் முன்னிலையில் என்.ஆர். இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பால் வைகோவின் வேட்பு மனுவுக்கு சிக்கல் ஏற்பட்டால், மதிமுகவில் இருந்து ஒருவரை வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியதுதானே? ஏன் திமுக சார்பிலேயே இன்னொருவர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்? ஆகிய கேள்விகள் அரசியல் அரங்கில் எழுந்தன. இதன் மூலம் திமுக-மதிமுக கூட்டணி முறிந்ததா என்ற அளவுக்கு ஊடகங்களில் விவாதங்கள் சூடுபிடித்தன.

இதைவிட ஒருபடி மேலே போய், “ராஜ்யசபா தேர்தலில் நான்காம் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சிக்கிறார்” என்றும் சிலர் விவாதிக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் இன்று பகல் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக நிறுத்திய நான்காம் வேட்பாளர் பற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.

“மக்களவைத் தேர்தல் உடன்படிக்கை ஏற்பட்டபோதே எனக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இடையே ஓர் எழுதப்படாத ஒப்பந்தம் ஏற்பட்டது. ‘மாநிலங்களவைக்கு மதிமுக சார்பில் நீங்கள் செல்வதாக இருந்தால் மதிமுகவில் ஒரு மாநிலங்களவை இடம் தருகிறோம்’ என்று ஸ்டாலின் கூறினார். அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் பேச்சுவார்த்தை வேறு வகையில் திரும்பும் சூழலும் இருந்தது. மதிமுக தொண்டர்கள் நான் மாநிலங்களவைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பியதால், நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன்.

இந்த நிலையில்தான் என் மீது தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கின் தீர்ப்புக்கு முன்பே நான் அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்தேன். அப்போது , ‘இந்தத் தீர்ப்பால் நான் மாநிலங்களவைக்கு செல்வது தடுக்கப்படாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டால் மாற்று ஏற்பாடுகளை நீங்கள் செய்துகொள்வது நல்லது’ என்று நான் தான் ஸ்டாலினிடம் வற்புறுத்தினேன்.

அதன் அடிப்படையிலேயே திமுகவைச் சேர்ந்த என்.ஆர். இளங்கோ நான்காவது வேட்பாளராக இன்று வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பே இல்லை.

நாளை மனு பரிசீலனையின்போது நான் அங்கே போக முடியாது. காரணம் தேச துரோக வழக்கில் எனக்கு தண்டனை வழங்கிய மாண்புமிகு நீதிபதி சாந்தி அவர்களின் நீதிமன்றத்தில் நாளை காலை 10.30க்கு இன்னொரு வழக்குக்காக நான் ஆஜராக வேண்டும். எனவே என் சார்பில் மனு பரிசீலனையில் வழக்கறிஞர் தேவதாஸ் கலந்துகொள்வார். பரிசீலனையின் போது என் மனு ஏற்கப்படும். அப்படி ஏற்கப்பட்டால் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த என்.ஆர். இளங்கோ மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வார். இதுதான் ஏற்பாடு.

எனவே மதிமுக தொண்டர்களும், நான் மாநிலங்களவைக்கு செல்ல வேண்டும் என்று கட்சி கடந்து, சாதி, மதம் கடந்து விரும்பும் நண்பர்களும் தேவையற்ற விவாதங்களுக்கு இடம் அளிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார் வைகோ.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon