மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

10%: அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு!

10%: அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு!

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கொண்டுவரப்பட்ட 10 சதவிகித இடஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால் மருத்துவப் படிப்புக்கான இடங்களை 25 சதவிகிதம் அதிகரித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறது. ஆனால் இது சமூக நீதியை நீர்த்துப்போகச் செய்யும் செயல் என்று தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனையடுத்து, இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக் கட்சிக் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் கருத்துக்களைப் பெற்று அதன் பின்னரே முடிவெடுப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தின் 10 ஆவது அரங்கில் இன்று (ஜூலை 8) மாலை சரியாக 5.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், தமிழிசை, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 சதவிகித இடஒதுக்கீட்டைப் பொறுத்தரவை திமுக அதனை ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், “10 சதவிகிதம் இடஒதுக்கீடு சமூக நீதி கொள்கைக்கு எதிரானது. இது நீதிமன்றத்துக்கு சென்றால் செல்லாதது ஆகிவிடும்” என்று தெரிவித்திருந்தார். மேலும் இதுதொடர்பாக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான மசோதா மாநிலங்களவையில் வந்தபோது அதனை அதிமுக கடுமையாக எதிர்த்தது. விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், “பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது சட்டவிரோதமானது” என்று கூறி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டியிருந்தார். மேலும், “சாதி அடிப்படையில் மட்டும்தான் இடஒதுக்கீடு இருக்க வேண்டுமே தவிர தனிப்பட்ட நபருக்காக இருக்கக் கூடாது. இடஒதுக்கீட்டுக்கு பொருளாதார அடிப்படையில் இருக்கக் கூடாது” என்று வலியுறுத்தினார்.

10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை பின்வருமாறு காண்போம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

“சமூக நீதியின் கருவறை தமிழ்நாடுதான். பொருளாதார அடிப்படையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு பிரச்சனையில், போகிற போக்கில் சமூகநீதிக்கு வேட்டு வைத்து விட்டு செல்லும் வேலையை மோடி செய்து உள்ளார். இதன் விளைவுகளை அவர் சந்திப்பார். இதனை எதிர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமை. இதற்கு ஆதரவளிக்கும் கட்சிகள் சமூக நீதியை காக்க வேண்டும் என்ற நிலையை கடைபிடித்து மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.”

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

“இது சமூகநீதி மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை தகர்க்கும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழியில்லை.உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். எனவே, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.”

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

“உண்மையாகவே முற்பட்ட பிரிவினரின் பொருளாதார முன்னேற்றத்தில் பாஜக கவலைப்பட்டிருந்தால், அவர்களின் பொருளாதார தரத்தை உயர்த்த எத்தனையோ மாற்று வழிகளை பாஜக ஆட்சியிலிருந்த இந்த நான்கரை ஆண்டுகளில் செய்திருக்க முடியும். அதை விடுத்து, இப்படியொரு சட்டத் திருத்தத்தை தனது அரசியல் பலத்தை வைத்து நிறைவேற்றினால் கூட, அரசியல் சட்டம் அனுமதிக்காத இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கும்.

நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேறினாலும் கூட, மாநில அரசின் ஒப்புதலுக்காக இம்மசோதா தமிழக சட்டப்பேரவைக்கு வரும்போது, துணிச்சலோடு இம்மசோதாவை நிராகரித்து, இந்த விஷயத்திலாவது ஜெயலலிதாவின் கொள்கையை நிலைநிறுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு தயாராக இருக்க வேண்டும்.”

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர், முத்தரசன்

“உயர்ஜாதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது. இது தொடர்பாக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று, நாங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வோம்.”

விசிக தலைவர், திருமாவளவன்

“முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவது உண்மையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக ஏற்கனவே இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான சதித்திட்டம் ஆகும்.”

பாஜக தமிழகத் தலைவர், தமிழிசை

“பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பாஜக மக்களுக்கான திட்டத்தை செய்து வருகிறது. அரை நூற்றாண்டு காலமாக எதிர்பார்க்கப்பட்ட திட்டம் இது. பாஜக மக்களுக்கான திட்டங்களைத்தான் நிறைவேற்றிவருகிறது.”

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு!


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon