மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

கர்நாடகா அரசியல் நெருக்கடி: மேலும் ஒரு எம்.எல்.ஏ.விலகல்!

கர்நாடகா அரசியல் நெருக்கடி: மேலும் ஒரு எம்.எல்.ஏ.விலகல்!

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டணியில் உள்ள சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான நாகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகாவில் கூட்டணியில் இருந்த மஜத மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு நிலவி வந்ததைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அன்று காங்கிரஸைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள், மஜத கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் என 11 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சட்டமன்ற செயலாளரிடம் கடிதம் சமர்ப்பித்தனர். இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே அமெரிக்கா சென்றிருந்த அம்மாநில முதல்வர் குமாரசாமி நேற்று அவசரமாகக் கர்நாடகா திரும்பினார்.

அவர்களுடன், முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில் தங்கள் முடிவில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே இன்று காலை துணை முதல்வர் பரமேஸ்வரா, காங்கிரஸ் அமைச்சர்களுடன் தனது வீட்டில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்ததாகவும், பாஜக என்ன முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது தங்களுக்கு தெரியும் எனவும் தேவையெனில் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகத் தயார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே சுயேட்சை எம்.எல்.ஏ நாகேஷ், ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”குமாரசாமி தலைமையிலான அரசாங்கத்திற்கு நான் அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளேன். இந்த கடிதத்தின் மூலம் நான் அழைக்கப்பட்டால் பாஜகவுக்கு எனது ஆதரவை வழங்குவேன்” என்று தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வும் தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளதால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் ஆளுநர் அழைத்தால் ஆட்சி அமைக்கத் தயார் என அம்மாநில பாஜகவினர் தெரிவித்து வரும் நிலையில், ஆட்சியை கவிழ்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக பாஜகவைக் குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ், இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுத்துள்ளது.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon