மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

ஒரே வாரத்தில் இரண்டு தங்கப் பதக்கம்!

ஒரே வாரத்தில் இரண்டு தங்கப் பதக்கம்!

போலந்தில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

போலந்து நாட்டில் ஜூலை 7ஆம் தேதி நடைபெற்ற குட்னோ சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் இளம் வீராங்கனை ஹிமா தாஸ் 23.97 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான விஸ்மயா 24.06 விநாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்த ஆண்டில் ஹிமா தாஸ் பங்கேற்கும் இரண்டாவது சர்வதேசப் போட்டி இதுவாகும். கடந்த சில மாதங்களாகவே முதுகுவலியால் அவதியுற்று போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ஹிமா மீண்டும் களத்தில் இறங்கிப் பதக்கங்களைக் குவித்து வருகிறார்.

முன்னதாக ஜூலை 2ஆம் தேதி போலந்து நாட்டில் நடைபெற்ற போஸ்னான் தடகளப் போட்டியில், 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் கலந்துகொண்டார். இப்போட்டியில் 23.65 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார் ஹிமா தாஸ். ஒரே வாரத்தில் இரண்டு தங்கப் பதக்கங்களை ஹிமா தாஸ் வென்றுள்ளார். சென்ற ஆண்டில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியின் 400 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியதோடு, புதிய தேசிய சாதனையையும் நிகழ்த்தினார். மேலும், தாம்ரேவில் நடைபெற்ற இளையோருக்கான சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற ஹிமா தாஸ் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்.

நேற்று நடைபெற்ற குட்னோ தடகளப் போட்டிகளில், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் முகமது அனாஸ் 21.18 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கம் வென்றார். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்தியாவின் எம்.பி.ஜாபிர் 50.21 விநாடிகளில் தங்கம் வென்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீரரான ஜித்தின் பால் 52.26 விநாடிகளில் ஓடி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்று பதக்கங்களையும் இந்திய வீராங்கனைகளே தட்டிச் சென்றுள்ளனர். சரிதாபென் (52.77 விநாடி) தங்கமும், சோனியா பைஸ்யா (53.73 விநாடி) வெள்ளியும், ஆர்.வித்யா (53.73 விநாடி) வெண்கலமும் வென்றுள்ளனர்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon