மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜூலை 2019

திரை தரிசனம்: பாரிஸ், டெக்சாஸ்

திரை தரிசனம்: பாரிஸ், டெக்சாஸ்

தொலைந்து போனவர்கள் திரும்பி வரும்போது நம்மிடம் கொண்டுவரும் சேதி என்ன? முன்னறிவிப்பின்றி காணாமல் போனவர்கள் மீண்டும் தங்கள் இடத்திற்கு வரும்போது அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும். வலசை சென்ற டிராவிஸ் எனும் வனாந்திரப் பருந்து மீண்டும் இருப்பிடத்திற்கு வருகிறது. அது ஏற்படுத்தும் சலனமே பாரிஸ், டெக்சாஸ் (1984).

பறவைக் கோணத்தில் கேமரா ஒரு பரந்த, வெற்று நிலப்பரப்பில் பறந்துகொண்டிருக்கிறது. எந்த தாவரமும் இல்லாத அந்தப் பரப்பில், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் விநோதமான பாறை வடிவங்கள் நிறைந்துள்ளன. எறும்பு போல ஒரு மனிதனின் உருவம் நகர்ந்துகொண்டிருக்கிறது. பருந்தொன்று மரணம் போல அவனது வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறது. டிராவிஸ் முகம் நமக்குத் தெரிகிறது. கடந்து வந்த வறண்ட நிலப்பரப்பின் கதைகளைச் சுமந்த முகம். உள்ளொடுங்கிய கண்கள், உலகத்தைத் துறந்த ஒரு தவம். தன் குடுவையிலுள்ள கடைசி சொட்டு நீரைக் குடித்து விட்டு தண்ணீரைத் தேடி மோட்டல் ஒன்றுக்குச் செல்லும் டிராவிஸ் மயங்கிச் சரிகிறான்.

மருத்துவரிடம் அனுமதிக்கப்படும் டிராவிஸ் பைகளிலுள்ள துண்டுச் சீட்டை வைத்து லாஸ் ஏஞ்சல்ஸிலிருக்கும் அவனது தம்பியான வால்ட்டுக்கு அழைக்கிறார். அழைப்பை முதலில் நம்ப மறுக்கும் வால்ட், டெக்சாஸில் இருக்கும் டிராவிஸை நோக்கி உடனடியாக விரைகிறார். நான்கு ஆண்டுகள் எவ்வித தகவலும் இல்லாத அண்ணனின் இருப்பை அறிந்த பின் எவர் தான் விரையாமல் இருப்பார்? வருடங்களுக்குப் பின் இருவரும் சந்திக்கின்றனர். முதலில் மறுத்து, தம்பியின் பிடியிலிருந்து தப்பிக்கும் டிராவிஸ் பின் தன் மகனைப் பற்றி அறிந்தவுடன் அவனுடன் வர சம்மதிக்கிறான்.

லாஸ் ஏஞ்சல்ஸூக்கு விரைகிறார்கள். வருடங்களுக்குப் பின் டிராவிஸ் தன் ஏழு வயது மகன் ஹண்டரைப் பார்க்கிறான். இவ்வளவு வருடங்கள் மகன் ஹண்டரை தம்பியும் அவரது மனைவியும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள் என்பதை அறிகிறான். ஹண்டருக்கு டிராவிஸ் பற்றிய நினைவுகள் எதுவும் இல்லை. டிராவிஸ் அவனிடம் நெருங்க முயல ஹண்டர் விலகியே ஓடுகிறான். பள்ளிக்குச் செல்லும் மகனை எல்லா தந்தையும் போலவும் அழைத்துச் செல்ல வருவது போல டிராவிஸ் செய்யும் முயற்சிகள் வீணாகிறது. உடனடியாக சிறுவனின் மனம் தன் நிஜத் தந்தையை ஏற்க மறுக்கிறது.

ஒரு நாள் வால்ட், டிராவிஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்கு முன் எடுத்த வீடியோவை அனைவருக்கும் போட்டுக் காட்டுகிறான். ஹண்டர் தன் தந்தையுடன் அவன் வீடியோவில் இருப்பதைப் பார்த்து புரிந்து கொள்கிறான். மெல்ல மெல்ல டிராவிஸுடன் நெருக்கமாகிறான். அவனது தாய் ஜேன் அப்பாவைப் போலவே அவளும் காணாமல் போயிருக்கிறாள். அவளைப் பற்றிய தகவல்களை சேகரித்த டிராவிஸும் ஹண்டரும் தாயைத் தேடிப் பயணிக்கிறார்கள். சில பல முயற்சிகளுக்குப் பின், டிராவிஸ் ஓர் அதிர்ச்சிகரமான பணியிடத்தில் தன் மனைவியை கண்டுபிடிக்கிறான். பீப்-ஷோ கிளப் எனப்படும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி தொலைபேசியில் பேசும் பணியில் அவள் இருக்கிறாள். கண்ணாடிக் கூண்டுக்குள் ஜேனைப் பார்க்க முடியும். ஆனால், அவளால் வாடிக்கையாளர்களைப் பார்க்க முடியாது. முதல் நாள் மனைவியிடம் பேச முடியாமல் கிளம்பும் டிராவிஸ், மறுநாள் ஒரு ஹோட்டலில் மகனை விட்டு விட்டு மீண்டும் பீப்-கிளப்பிற்கு வருகிறான்.

நீண்ட வருடங்களுக்குப் பின், தன்னை அறிமுகப்படுத்தாமல் மனைவியிடம் டிராவிஸ் போனில் பேசுகிறான். சில நிமிடங்களுக்குப் பின், பேசுவது தன் கணவன் என அறிகிறாள் ஜேன். தன் கதையையும் அவள் கூறுகிறாள். தான் பேசும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் குரலிலும் அவனைக் காண்பதாக துயருறுகிறாள்.

ஹண்டர் தாயுடன் இருப்பதே சரியென்று கூறிவிட்டு, டிராவிஸ் அவர்களது மகன் தங்கியிருக்கும் ஓட்டல் அறை எண்ணை தெரிவித்துவிட்டு அங்கிருந்து நகர்கிறான். இரவு ஹோட்டல் அறைக்குச் செல்லும் ஜேன், தன் மகனுடன் இணைகிறாள். கார் பார்க்கிங்கிலிருந்து இதைப் பார்க்கும் டிராவிஸ், கனத்த மெளனத்துடன் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறான்.

விம் வெண்டர்ஸ் இயக்கியிருக்கும் இந்தப் படம் 1984ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருது பெற்ற படமாகும். திரைப்பட மாணவர்களாலும், ஆர்வலர்களாலும் இன்றும் கொண்டாடப்படும் படம் இது. மனைவியும் கணவனும் கண்ணாடி அறைக்குள் பேசும் காட்சியை தன் திரைமொழியால் காவியத் தன்மையுடன் படைத்திருப்பார் இயக்குநர். உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படம் ஆக்‌ஷன் படத்தைப் போலவே இமைக்காமல் நம்மை பார்க்க வைக்கும் சக்தி கொண்டது. ஆழம் நிறைந்த அதே நேரம் மீண்டும் மீண்டும் நம்மை உள்ளிழுக்கும் தவிர்க்க முடியாத படைப்பு பாரிஸ், டெக்சாஸ். திரை மொழியின் அனைத்து கூறுகளையும் எளிமையாகச் சாத்தியப்படுத்துவதற்கும் அறிந்துகொள்வதற்கும் இது ஒரு பாடமே.

மேலும் படிக்க

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

திங்கள் 8 ஜூலை 2019