மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை: மனைவி பூங்கொடி

முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை:  மனைவி பூங்கொடி

ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள அணுக்கழிவு மையக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் முகிலன் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே அவரை கைது செய்துள்ளனர் என முகிலனின் மனைவி பூங்கொடி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன சமூகச் செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் இருப்பதாக வந்த தகவலையடுத்து, அவரை ஆந்திர காவல் துறையின் உதவியுடன் சிபிசிஐடி போலீசார் தமிழகம் கொண்டுவந்தனர். சென்னை எழும்பூரிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து நேற்று (ஜூலை 7) அவரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தன்னை யாரோ கடத்திச் சென்று துன்புறுத்தினர் என முகிலன் கூறியிருக்கிறார். தொடர்ந்து கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்திருந்த பாலியல் புகாரின் பேரில் முகிலனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

முகிலனைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரது மனைவி பூங்கொடி, “வரும் 10ஆம் தேதி அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளாமல் தடுக்கவே திட்டமிட்டு எனது கணவரை கைது செய்துள்ளனர். அவரை கடத்திச் சென்று சித்ரவதைகள் செய்து கொண்டுவந்து விட்டுவிட்டதாகச் சொல்கிறார். இவ்வளவு நாட்களாக எங்கு வைத்திருந்தனர் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. ஓர் இடத்தில் அடைத்து வைத்து பயங்கர மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். அடைத்து வைத்திருந்தவர்களே திருப்பதி ரயில் நிலையத்தில் விட்டுவிட்டிருக்கிறார்கள்” என்றார்.

“ஐசியுவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு முகிலனின் உடல்நிலை உள்ளது. அவருக்குச் சரியாக சாப்பாடு கூட போடவில்லை. 30 நாட்களாவது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றால்தான் பழைய நிலைக்குத் திரும்புவார்” என்றவரிடம் முகிலன் மீதான பாலியல் புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “அதனை திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட பொய் வழக்காகவே கருதுகிறேன். மற்றவர்கள் கூறினால் அது பொய்யாகிவிடும் என்பதால் அவருடன் இணைந்து செயல்பட்டவரையே புகார் அளிக்க வைத்துள்ளனர். திசை திருப்புவதற்காகப் பொய்யான வழக்கு போட்டுள்ளனர்” என்று பதிலளித்தார்.

மேலும், தனது கணவரைக் கடத்தியதாக புகார் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்த பூங்கொடி, “முகிலன் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் முன்பிருந்தபோது நடந்த போராட்டங்கள் குறித்து மட்டும்தான் பேசுகிறார். அவர் தெளிவான மனநிலையிலேயே இல்லை. என்னிடம் கூட அவர் சரியாகப் பேசவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon