மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

ஆணவக் கொலைகளுக்கு முடிவுதான் என்ன..?

ஆணவக் கொலைகளுக்கு முடிவுதான் என்ன..?

- கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி, சுந்தரரெட்டி தம்பதியர் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். தமிழ்க்கடவுள் முருகன்கூட இரு வேறு சாதியைச் சேர்ந்த பெண்களைத்தான் மணம் முடித்தார். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் சாதி, மதம் கடந்து மணவாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் வடமாநிலங்களைப் போல சாதி ஆணவப்படுகொலைகள் பரவி வருகிறது. குறிப்பாக இரட்டை ஆணவப்படுகொலை அதிகரித்துவருவதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது அண்மையில் தூத்துக்குடியில் நடந்த சோலைராஜ் - ஜோதி தம்பதியர் படுகொலை.

கடலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டையில் SC ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த முருகேசனும், MBC வன்னியர் வகுப்பைச் சேர்ந்த கண்ணகியும் 08.07.2003 அன்று விஷம் கொடுத்து, தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட இரட்டை ஆணவப்படுகொலை இப்போது தொடர்கதையாகிவிட்டது.

தொடரும் பட்டியல்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி புதுக்குடியிருப்பு சிவா - சவுமியா தம்பதியர் வாத்தியார்விளை பகுதியில் 19.05.2013 அன்று படுகொலை செய்யப்பட்டனர். சிவா BC பணிக்கர் வகுப்பைச் சேர்ந்தவர். சவுமியா BC நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழமருதூரில் 10.12.2014 அன்று அமிர்தவள்ளி - பழனியப்பன், 40 நாட்களே ஆன ஆண் குழந்தையோடு படுகொலை செய்யப்பட்டனர். அமிர்தவள்ளி SC தேவேந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர். பழனியப்பன் MBC வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர்.

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஓலக்குடி பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி - சரண்யா காதல் தம்பதியர் 16.04.2016 அன்று காணாமல் போனார்கள். 20.04.2016 அன்று சாத்தனூர் ஆத்துப்பாக்கம் பகுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினர். குருமூர்த்தி SC ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். சரண்யா MBC வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சூடுகொண்டபள்ளி நந்திஷ் - சுவாதி காதல் தம்பதியர் படுகொலை செய்யப்பட்டனர். நந்திஷ் உடல் 13.11.2018 அன்றும், சுவாதி உடல் 15.11.2018 அன்றும் கிடைத்தது. நந்திஷ் SC ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். சுவாதி MBC வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வெள்ளாங்குழியில் இசக்கிசங்கர் 20.11.2018 அன்று படுகொலை செய்யப்பட்டார், அவரது காதலி சத்தியபாமா 21.11.2018 அன்று மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இசக்கிசங்கர் BC கோனார் வகுப்பைச் சேர்ந்தவர். சத்தியபாமா MBC அகமுடையார் வகுப்பைச் சேர்ந்தவர்.

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன்ஓடை கனகராஜ் - வர்சினிப்பிரியா தம்பதி 25.06.2019 அன்று படுகொலை செய்யப்பட்டனர். வர்சினிப்பிரியா SC அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். கனகராஜ் MBC வலையர் வகுப்பைச் சேர்ந்தவர்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பெரியார்நகர் சோலைராஜ் - ஜோதி என்ற பேச்சியம்மாள் தம்பதி 04.07.2019 அன்று படுகொலை செய்யப்பட்டனர். சோலைராஜ் SC ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். ஜோதி SC தேவேந்திரர் வகுப்பைச் சேர்ந்தவர்.

உடுமலை சங்கர், தர்மபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ் மரணங்கள் தமிழகத்தில் ஆணவக்கொலைகள் குறித்த விவாதங்களை அதிகப்படுத்தின. அதே நேரம் சாதிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பும் நடந்தது.

ஆணவக்கொலைகளின் மூவகை

குடும்ப கெளரவம், சாதி கெளரவம் என்ற பெயரில், ஆணவப்படுகொலைகள் மூன்று விதமாக நடக்கின்றன. காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை கொலை செய்வது, பெண்ணின் கணவரைக் கொலை செய்வது, மூன்றாவதாக இருவரையும் கொலை செய்வது.

விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை ரஜினிலதா, மதுரை எஸ்.எஸ்.காலனி மாரிச்செல்வி, திருச்சியில் ஜெயா, சோமரசம்பேட்டை பிரியா, திருநெல்வேலி அருணாதேவி, சீவலப்பேரி கோமதி, மதுரை பூதிப்புரம் விமலா, ராமநாதபுரம் கதையான்ராசிபுரம் திவ்யா, குயவன்குடி வைதேகி, கலையூர் திருச்செல்வி, புதுக்கோட்டை கொத்தகப்பட்டி ராதிகா, நாகப்பட்டினம் வண்டல் சித்ரா, திண்டுக்கல் க.கலையமுத்தூர் ஸ்ரீபிரியா, சென்னை சிமெண்ட்ரி சாலை சதுரா, திருப்பூர் செல்வலட்சுமி, விழுப்புரம் மறவநத்தம் சுதா, மதுரை வீராளம்பட்டி சுகன்யா இப்படி பெற்றோர்களால் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பெண்கள் ஏராளம்.

திருவண்ணாமலை துறிஞ்சிக்குட்டைமேடு துரை, ஈரோடு பெரியார்நகர் இளங்கோ, அரச்சலூர் தமிழ்செல்வன், கன்னியாகுமரி இடலாகுடி ரமேஷ், மதுரை நிலக்கோட்டை சிவாஜி, தர்மபுரி வெற்றிவேல், சிவகங்கை கே.புதுக்குளம் சிவக்குமார், தஞ்சாவூர் சூரக்கோட்டை மாரிமுத்து இவர்கள் ஆணவப்படுகொலையில் உயிரிழந்த கணவர்கள் என்று பட்டியல் போட்டு சுட்டிக்காட்டுகிறது எவிடென்ஸ் மனித உரிமை அமைப்பு.

இந்த வகைப்பாட்டையெல்லாம் மீறி காதல் திருமணம் செய்து கொண்டதற்காக காதலர்களின் உறவினர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் விஸ்வநாதன் - காவேரி இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டதால், விஸ்வநாதனின் சகோதரி கல்பனா 13.05.2016 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

சட்டம் தடுக்குமா?

ஆணவப்படுகொலைகளைத் தடுக்க சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறைவாக இருக்கின்றன. எனவே, ஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்பது நீண்ட நாளைய கோரிக்கை. நிர்பயா படுகொலை செய்யப்பட்டபோது அமைக்கப்பட்ட வர்மா கமிஷன் கூட ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.

ஆணவப்படுகொலை வழக்குகளில் அரசு வழக்குரைஞர்களும், காவல் துறையினரும் போதிய அக்கறை செலுத்துவதில்லை. கட்சிகளும், இயக்கங்களும் வழக்குகளைக் கண்காணிப்பு செய்வது, சாட்சிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது மிகவும் குறைவு என்கிறார்கள் மதுரையிலுள்ள சமூகநீதி அமைப்பினர். ஆணவப்படுகொலை நடக்காமல் தடுத்திட காதல் திருமணம் செய்த தம்பதியருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது, அந்தக் குடும்பங்களுக்கு ஆலோசனைகள் கொடுப்பது, சாதிய அமைப்புகள் தலையிடாமல் தடுப்பது அரசு மற்றும் சமூக அமைப்புகளின் பொறுப்பு என்று சட்டத்தையும் சுட்டிக்காட்டுகிறது சமூகநீதி அமைப்பு.

கதைகள் மூலம் வாழும் சாதி

ஆணவப்படுகொலைகளைச் சட்டத்தின் மூலம் மட்டும் தடுத்துவிட முடியாது மக்களிடம் மனமாற்றங்கள் அவசியம் தேவை என்று நீதிமன்றங்கள் எடுத்துக்கூறுகின்றன. ஆனால், நமது சமூக அமைப்பில் சாதி வெறியும், வன்மமும் தொடர்ந்து ஊட்டப்படுகிறது. முத்துப்பட்டன், மதுரை வீரன், சின்னநாடான், காத்தவராயன் கதை, வெங்கலராசன் கதை, சின்னான் கதை, தடிவீரய்யன் கதை, தோட்டுக்காரி அம்மன் கதை, பூலங்கொண்டாளம்மன் கதை, வன்னியடி மறவன் கதை, அனந்தாயி கதை, ஐவர் ராசாக்கள் கதை, காணிச்சாவு கதை என்று வில்லிசைப் பாடல்கள், கணியான் கூத்து, தனிப்பாடல்கள் மூலம் சாதி மாறி திருமணம் செய்தவர்கள் கொல்லப்பட்ட கதை திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வருகிறது.

காதலை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்கள் சாதிதான் காதலுக்கு முதல் எதிரி என்று மக்கள் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்கின்றன. 1990களுக்குப் பிறகு வந்த பல திரைப்படங்கள் சுயசாதி பெருமை பேசி, சாதி வெறியைத் தூண்டும் வகையில்தான் எடுக்கப்படுகின்றன.

சமூக தளங்களிலும் சாதி

அரசியல்வாதிகள் சிலர் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள சுயசாதி பெருமை பேசிவருகிறார்கள். தேர்தல் அரசியலில் வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காக இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள். இளம் தலைமுறையின் கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் சார்ந்த வளர்ச்சிக்காக எந்த முன்னெடுப்பையும் செய்யாத, செய்ய இயலாத, தலைவர்கள் சாதியின் பெயரால் இயக்கமே நடத்துகிறார்கள்.

மேற்கு மாவட்டங்களில் காதல் திருமணம் செய்த தம்பதிகளைப் பிரித்திட தனியாக முகாம்கள் நடத்தி வருகின்றனர். கவுன்சலிங் கொடுப்பது, கட்டி வைத்து அடிப்பது, சித்திரவதை செய்வது என்று முகாம்களில் நடந்த கொடூரங்களை அங்கிருந்து தப்பிச்சென்று தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த நவீனா என்ற பெண் விவரித்துள்ளார். 11.07.2016 அன்று பெரியண்ணன் என்ற நாடார் சமுதாய இளைஞரை, கொங்கு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த நவீனா திருமணம் செய்து கொண்டதால் 05.08.2016 அன்று கடத்தப்பட்டு முகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக கூறியுள்ளார் நவீனா.

சமூக ஊடகங்களில் இயங்கும் சுயசாதி பெருமை பேசும் அமைப்புகள் கூலிப்படைகளோடும் தொடர்பில் இருக்கிறார்கள். இதற்கென படித்தவர்கள், தொழிலதிபர்களிடம் நிதி வசூலிப்பதை வெளிப்படையாகவே செய்கிறார்கள். இதனைத் தடுக்க வேண்டிய அரசும், அரசியல்வாதிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் கடந்துதான் காதல் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் சாதி, மதம் கடந்து ஒவ்வொரு ஆண்டும் ஐந்து முதல் பத்து விழுக்காடு வரையிலான திருமணங்கள் பதிவு செய்யப்படுவதாக பதிவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலப்புத் திருமணங்களுக்கு அரசின் ஆதரவு!

கலப்புத் திருமண உதவித்திட்டம் என்ற பெயரில் ரூ 25 ஆயிரம் நிதி, 4 கிராம் தங்கம், ரூ 50 ஆயிரம் நிதி, 4 கிராம் தங்கம் என்று இரண்டு திட்டங்கள் மூலம் தமிழக அரசு காதல் திருமணம் செய்த தம்பதியர்களுக்கு உதவுகிறது. ஆனால், விண்ணப்பித்த பயனாளிகளில் சராசரியாக 25 விழுக்காட்டினருக்கு மட்டுமே இந்த நிதி கிடைக்கிறது. வேலைவாய்ப்பில் சிறப்பு இடஒதுக்கீடு இருந்தாலும் நடப்பில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

மத்திய அரசின் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டத்தின் அடிப்படையில் 2013ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு சாதியில் திருமணம் செய்தவர்களுக்கு 2.5 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து திருமண சட்டம் 1995இன் படி பதிவு செய்ய வேண்டும், எம்.எல்.ஏ., எம்.பி., மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற காரணங்களால் இந்த நிதி அப்படியே உள்ளது. இந்தியா முழுவதும் 5 பேர், 72 பேர், 45 பேர், 74 பேர் என்றுதான் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிதி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து இத்திட்டத்தில் இதுவரை ஒருவர் கூட பயன்பெறவில்லை.

சாதி கடந்து திருமணம் செய்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆலோசனைகள் வழங்கவும், நடவடிக்கைகள் எடுக்கவும் 24 மணி நேர உதவி மையம் அமைக்க வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சமூக நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் கொண்ட பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது பரிந்துரைகளை, 13.04.2016 அன்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் ராமசுப்பிரமணியன் அமர்வு பரிந்துரை செய்தது.

சக்தி வாகினி எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் 27.03.2018 அன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசோடு இணைந்து ஆணவப்படுகொலைகளைத் தடுக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர்கள் நேரடியாகத் தலையிட்டு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டனர். இதனையெல்லாம் செயல்படுத்தினால் காதல் திருமணம் செய்யும் தம்பதியர்களுக்கு நிச்சயம் சட்டப்பாதுகாப்பும், சமூக பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுவிடும்.

பண்படுத்திய பாரதிதாசன்

காதல் வரும்போது சாதி பார்த்து வருவதில்லை. சாதி, மதம், பணம், வசதி பார்த்து வந்தால் அது காதலும் இல்லை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் காதல் பாடல்கள் பகுதிகள் கலப்பு மணம் வாழ்க என்ற தலைப்பில் பாடியுள்ளார்.

அதில், மகளது கலப்புத் திருமணத்தை எதிர்த்துப் பேசும் தந்தை, நமது சாதி வேறு நல்லோய்- அவனது சாதிவேறு என்று அறிகிலாய் என்று சினத்தைச் சொல்லில் ஏற்றினான்’ என்கிறார்.

உடனே மகள், ‘அப்பா! உண்மையில் அவரும் என்போல் மனிதச் சாதி, மந்தி அல்லர்; காக்கை அல்லர்; கரும்பாம்பு அல்லர் என பதில் கூறுகிறார். அதற்கு தந்தை, மனிதரில் சாதி இல்லையா மகளே?’ என்று கேட்கிறார். அடுத்து மகள், ’சாதி சற்றும் என்நினைவில் இல்லை மாது நான் தமிழனின் மகள் ஆதலாலே’ என பதில் கூறுகிறார்.

உயிர்களைக் கொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. உயிர்வாழ்வதை தடுக்கும் உரிமையும் யாருக்கும் இல்லை. சட்டப்பாதுகாப்பும், மனமாற்றங்களும் நிச்சயம் நல்வழி காட்டும்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon