மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜூலை 2019

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

தமிழ்நாட்டில் இருந்து ராஜ்யசபாவுக்கு செல்ல இருக்கும் ஆறு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ராஜ்யசபா தேர்தல் என்று சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் தேர்தல் என்ற பேச்சே இருக்காது. திமுக, அதிமுக ஆகிய கூட்டணிகள் சார்பில் தங்கள் பலம் எவ்வளவோ அவ்வளவு பேரை நிறுத்தி போட்டியிட்டு ஜெயிக்க வைப்பதுதான் தமிழகத்தின் இதுவரையிலான மரபாக இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் திமுகவின் சண்முகம், வில்சன் ஆகியோரும் மதிமுக சார்பில் வைகோவும் வேட்பு மனுவை ஜூலை 6 ஆம் தேதி தாக்கல் செய்துவிட்டனர். அதிமுக சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

இந்நிலையில்தான் ராஜ்யசபாவில் மெஜாரிட்டி பெறுவதற்காக பாஜக நடத்தும் ஆபரேஷனை தமிழ்நாட்டிலும் தொடங்கியிருக்கிறது. அதுவும் குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை குறிவைத்துதான் பாஜக இந்த திட்டத்தையே தீட்டியிருக்கிறது.

இதுபற்றி பாஜக வட்டாரங்களில் பேசியபோது கிடைத்த தகவல்களை மின்னம்பலம் வாசகர்களோடு பகிர்கிறோம்.

சட்டம் இயற்றுவதில் மக்களவைக்கு இருக்கும் அதே பங்கு மாநிலங்களவை எனப்படுகிற ராஜ்யசபாவுக்கும் இருக்கிறது. ஒரு சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டால்தான் அது சட்டமாகி நடைமுறைக்கு வர முடியும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே மக்களவையில் பெரும்பான்மை பெற்றுவிடுகிற ஆளுங்கட்சிகள், ராஜ்யசபையில் பெரும்பான்மை பெற முடியாமல் மசோதாவை வெற்றிபெற வைக்க பல கட்சிகளிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இதனாலேயே ஆளுங்கட்சிகளின் கனவு சட்டங்கள் பல மசோதாக்களாகவே ராஜ்யசபாவில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

ராஜ்யசபாவில் மொத்த உறுப்பினர்கள் 245. இதில் மெஜாரிட்டி மார்க் எனப்படும் எல்லைக் கோடு என்பது 124 உறுப்பினர்கள். ராஜ்யசபாவில் 124 உறுப்பினர்களைப் பெறுவதற்கு பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது பாஜகவுக்கு 76 உறுப்பினர்கள் உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 99 உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் இருக்கிறார்கள்.

வர இருக்கும் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல் மூலம் ராஜ்யசபாவில் தன் பலத்தை அதிகரிக்கத் திட்டமிடும் பாஜக, அதேநேரம் வேறு சில அஜெண்டாக்களையும் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.

ஜூலை 4 ஆம் தேதி குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகிய ராஜ்யசபா உறுப்பினர்கள் மக்களவைத் தேர்தலில் நின்று வெற்றிபெற்றதால் குஜராத்தில் இரு உறுப்பினர்களுக்கான ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுவரை இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் ஜூலை 4 ஆம் தேதி இரு இடங்களுக்கும் தனித்தனியே தேர்தல் என அறிவித்தது.

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தில் பாஜகவுக்கு 100 பேரும் காங்கிரஸுக்கு 71 பேரும் இருக்கிறார்கள். இந்த நிலையில் இரு ராஜ்யசபா இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் காங்கிரஸுக்கு ஒரு இடம் சென்றுவிடுமோ என்று கருதியது. இரு இடங்களிலும் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வதற்காக, இரு இடங்களுக்கும் தனித்தனியே தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது காங்கிரஸ் கட்சி. ஆனால் காங்கிரசின் மனுவை நிராகரித்து தேர்தல் ஆணையத்திடம் போகச் சொல்லிவிட்டது உச்ச நீதிமன்றம்.

இதையடுத்து இரு இடங்களுக்கும் தனித்தனியே தேர்தல் நடந்து இரு இடங்களிலும் பாஜகவே வென்றது. ஏற்கனவே பல விளையாட்டுகள் நடத்தி அகமது பட்டேலை தோற்கடிக்க முயன்ற பாஜகவின் முயற்சிகள் இங்கே நினைவுகூறத் தக்கது. இப்போது குஜராத்திலிருந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜுகல் தாக்கூர் ஆகிய இரு பாஜக வேட்பாளர்களும் வென்றனர்.

இந்த சூழலில் தான் வரும் ஜூலை 18 ஆம் தேதி தமிழகத்தில் நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலிலும் தனது ஆட்டத்தை நிகழ்த்த இருக்கிறது பாஜக. ஜூலை 6 ஆம் தேதி திமுக கூட்டணி சார்பில் வைகோ, வில்சன், சண்முகம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர். இந்நிலையில் இம்மூவரின் வேட்பு மனுவையும் டெல்லிக்கு கேட்டிருக்கும் அதிகாரிகள் இந்த மனுக்களில் ஏதேனும் ஒரு குறையைக் கண்டுபிடித்து மனுவை நிராகரிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதிலும் இம்மூவரில் வைகோவின் வேட்பு மனுவை நிராகரித்தே ஆக வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.

ஜூலை 5 ஆம் தேதி தேச துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். மேல்முறையீட்டுக்கு ஏதுவாக அதை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்திருக்கிறது நீதிமன்றம். இதைப் பயன்படுத்தி வைகோவின் வேட்பு மனுவை, தேச துரோக வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் நிராகரிக்கலாம் என்று ஒரு திட்டமும் பாஜகவிடம் இருக்கிறது.

வைகோவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் அது சட்டப்படி தவறு என்றாலும் அதை நீதிமன்றம் மூலம் அவர் நிரூபிப்பதற்குள், கிடைக்கும் அவகாசத்தில் குஜராத் பாணியில் மீதியிருக்கும் ஒரு இடத்துக்கு தனியாக ராஜ்யசபா தேர்தல் நடத்துவது என்பதுதான் பாஜகவின் திட்டம். அப்படி ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் நடத்தினால் அதில் தமிழக எம்.எல்.ஏ.க்கள் நிலவரப்படி அதிமுகதான் ஜெயிக்கும். அதாவது அதிமுக சார்பில் பாஜக வேட்பாளர் கூட நிறுத்தப்படலாம்.

வைகோவை ராஜ்யசபாவுக்குள் வரவிடக் கூடாது, அதையும் தாண்டி திமுகவின் ஒரு இடத்தை எப்படியாவது தான் அபகரித்துக் கொள்ள வேண்டும். இதுதான் இப்போது தமிழக ராஜ்யசபா தேர்தலை முன் வைத்து பாஜக தீட்டியிருக்கும் திட்டம்.

இதையெல்லாம் உணர்ந்தோ என்னவோ, ‘சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் தேர்தலில் போட்டியிடும் தகுதி உள்ளதா என்பது வருகிற ஜூலை 9ஆம் தேதி (வேட்பு மனு பரிசீலனை நாள்) தெரியவரும்” என்று வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டுக் கூறினார் வைகோ.

வைகோவின் இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் அவருக்கு எதிரான மிகப்பெரிய ஒரு அரசியல் சதிக்கான முகாந்திரம் தென்படுகிறது என்கிறார்கள் மதிமுகவினர்.

மேலும் படிக்க

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்!

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!


ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

ஞாயிறு 7 ஜூலை 2019