மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

திமுக இளைஞரணித் தலைமையகமான அன்பகத்தில் முதன் முதலாக கூட்டம் நடத்தியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணியின் செயலாளராக ஜூலை 4 ஆம் தேதி பொறுப்பேற்பதற்கு முன்பே, ’வரும் ஜூலை 6 ஆம் தேதி இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு உதயநிதி தலைமை ஏற்கலாம்’ என்று மின்னம்பலத்தில் மூன்றாம் பிறை: உதயநிதிக்கு பதவி என்ற தலைப்பிலான செய்தியில் தெரிவித்திருந்தோம்.

அதன்படியே ஜூலை 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இளைஞரணி மாநில அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது.

உதயநிதி இளைஞரணித் தலைமையேற்று நடத்தும் முழுமையான முதல் கூட்டம் என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் முதல் சிறப்பு, எந்தப் பத்திரிகையாளரையும் உள்ளே விடக் கூடாது என்பதுதான். இது ரகசியக் கூட்டமோ, முக்கிய முடிவெடுக்கும் கூட்டமோ அல்ல. ஆனாலும் பத்திரிகை புகைப்படக் காரர்களை மட்டும் சில நிமிடங்கள் அனுமதித்து, படம் எடுத்த பிறகு அவர்களையும் வெளியேற்றிவிட்டனர். அப்படியென்றால் ஏதோ ரகசியம் பேசியிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?

எனவே மின்னம்பலம் சார்பில் தேடலில் இறங்கினோம்.

இதோ உதயநிதியின் முதல் மீட்டிங் லைவ்…

காலை 10 மணிக்கு உதயநிதி அன்பகத்துக்கு வந்துவிட்டார். 200 பேர் வரை அமரக் கூடிய அன்பகம் கூட்ட அரங்கின் மேடைக்கு உதயநிதி வந்தபோது அனைத்து இளைஞரணி அமைப்பாளர்களும் கைதட்டி வரவேற்றனர்.

இளைஞரணித் துணைச் செயலாளர்களான ஆர்.டி.சேகர், ப. தாயகம் கவி, திருவாரூர் அசன் முகமது ஜின்னா, திருச்சி அன்பில் மகேஷ், பொங்கலூர் பைந்தமிழ் பாரி, தூத்துக்குடி ஜோயல், துரை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உதயநிதியோடு மேடையில் இருந்தனர்.

கட்சியின் அனைத்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களும் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

வரவேற்புரைக்குப் பின் மற்றவர்கள் பேசுவதற்கு முன் எழுந்த உதயநிதி, ‘இந்தக் கூட்டம் நான் பேசறதுக்கு இல்ல. நீங்க பேசுறதுக்கு. நம்ம இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் என்ன நினைக்கிறீங்க, உங்க கருத்து என்னனு கேட்கதான் நான் வந்திருக்கேன். அதனால நீங்கதான் பேசப் போறீங்க’ என்றார் கைதட்டலுக்கு இடையே.

துணைச் செயலாளர்களுக்கு எல்லாம் ஒரு நிமிடமே பேச நேரம் வழங்கப்பட, அவர்கள் அந்த ஒரு நிமிடத்துக்குள் உதயநிதியை போற்றிப் பாடி அமர்ந்தனர்.

பொறுப்புக்கு வருவதற்கு முன்பே 3 எம்பிக்கள்

அவர்களில் அன்பில் மகேஷ் பேசும்போது, “நாமெல்லாம் தலைவரை பெரியவர்னு கூப்பிடுவோம். இனிமே இவரை சின்னவர்னு கூப்பிடுவோம். இளைஞரணி செயலாளர் ஆவதற்கு முன்பே, அதாவது இந்த பொறுப்புக்கு அதிகாரபூர்வமாக வருவதற்கு முன்பாகவே இளைஞரணிக்கு இவர் என்னென்ன செஞ்சிருக்கார் தெரியுமா?

திருவண்ணாமலை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அண்ணாதுரை, தர்மபுரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில், விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ் குமார்னு 3 பேருக்கு எம்.பி. சீட் வாங்கிக் கொடுத்து அவர்களை ஜெயிக்கவும் வச்சாரு. வர்றதுக்கு முன்னாடியே இப்படின்னா... இப்பதான் வந்துட்டாருல்ல… இனிமே” என்றதும் அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.

அதன் பின் மாவட்ட அமைப்பாளர்கள் ஒவ்வொருவராக பேசத் தொடங்கினார். பலரும் உதயநிதியின் புகழ் பாடியது உதயநிதிக்கே பிடிக்கவில்லை. இளைஞரணியப் பத்தி சொல்லுங்க, நாம என்ன பண்ணனும்னு சொல்லுங்க என்று அவர் தூண்டிவிட்டதும் பலரும் கொட்டினர்.

மாசெக்கள் மதிப்பதில்லை

‘இளைஞரணின்னா எந்த மாவட்டச் செயலாளரும் நம்மை மதிக்கறதில்லண்ணே… ஒன்றிய செயலாளர் கூட நம்மை மதிக்க மாட்றாங்க. மத்த அணி மாதிரியே நம்மளையும் ட்ரீட் பண்றாங்க. சில பேரு திமுக இளைஞரணின்னா ஏதோ தங்களுக்கு போட்டினு நினைச்சுக்குறாங்க. இதுக்கு முடிவு கட்டணும். இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்துறதுக்கு கூட மாவட்டச் செயலாளர், ஒன்றிய செயலாளர்னு அனுமதி வாங்க வேண்டிருக்கு. அதுக்கும் அவங்க இப்ப நடத்தலாம் அப்ப நடத்தலாம்னு இழுத்தடிக்கிறாங்க. நீங்க இளைஞரணிச் செயலாளரா வந்துட்டீங்க. இனிமேலாச்சும் இப்படி நடக்காம பாத்துக்கங்க” என்பதையே இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் பலரும் தங்கள் பேச்சில் குறிப்பிட்டனர்.

இதையெல்லாம் ஊர் வாரியாக, மாவட்ட வாரியாக உதயநிதி குறித்துக் கொண்டார்.

சின்னவரையெல்லாம் பெரியவர் ஆக்குவேன்

10 மணிக்கு ஆரம்பித்த கூட்டத்தில் எல்லாரும் பேசி முடித்த பிறகு 11. 30க்கு மேல்தான் உதயநிதி பேச வந்தார். இயல்பான நடையில் ஆரம்பித்தார்.

“அன்பகமே அமைதியா இருந்துச்சு. நீங்க வந்தபிறகுதான் டிராபிக் ஜாம் ஆகுற அளவுக்கு ஆயிருச்சுனு பல பேர் சொன்னாங்க. தயவு செஞ்சு யாரும் டிராபிக் ஜாம் பண்ணாதீங்க. வண்டிகளை அறிவாலயத்துல விட்டுட்டு இங்க வாங்க. மக்களுக்கு நம்மால எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாது.

மகேஷ் இங்க பேசும்போது சின்னவர்னு கூப்பிடுவோம்னு சொன்னாரு. இந்த எல்லா சின்னவரையும் பெரியவர் ஆக்குறதுதான் என் நோக்கம், என் வேலையே” என்று உதயநிதி கொடுத்த பஞ்ச்சில் அரங்கமே அதிர்ந்தது.

அரணாக இருப்பேன்

தொடர்ந்து பேசிய உதயநிதி, “எல்லா மாவட்ட அமைப்பாளர்களும் வந்துட்டீங்க. நம்ம ராமநாதபுரம் ரகு கூட தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையிலயும் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கார். ரகு இனிமே உங்களை மாதிரி யாரும் தாக்கப்படுவதற்கு நான் விடமாட்டேன். உங்க எல்லாருக்கும் அரணா இருப்பேன்” என்று உதயநிதி பேச மீண்டும் கைதட்டல்.

ரகு ஏன் தாக்கப்பட்டார் என்ற தகவலை இங்கே தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் முஸ்லிம் லீக் நவாஸ் கனி வெற்றிபெற்று ஜூன் மாதம் சாத்தான் குளம் பகுதிக்கு நன்றி சொல்லச் சென்றார். அப்போது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகுவுக்கும், பொதுக்குழு உறுப்பினர் வழுதூர் ராஜா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உட்கட்சிப் பிரச்சினையில் ரகுவுக்கு கத்திக் குத்துக் காயம் ஏற்பட்டதைத்தான் உதயநிதி தன் பேச்சில் சொல்லாமல் சொன்னார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி,

“தமிழ்நாட்டில் தளபதி கால் பதிக்காத இடமே எதுவும் இல்லை. அதுபோல நானும் தமிழகம் பூரா வர்றேன். இளைஞரணிக்குனு ஒரு வரலாறு இருக்கு. அதை தொடரச் செய்வோம். நான் அமைதியான ஆள்னும் அமைதியின் உருவம்னும் பேசின பல பேர் சொன்னீங்க. நான் உண்மையிலேயே அமைதியின் உருவம்தான். ஆனா கோபப்படாதவன் கிடையாது. கோபப்பட வேண்டிய இடத்துல கோபப்படுவேன். உங்க எல்லார் ஒத்துழைப்பும் வேணும். என் உத்தரவின் பேரில் நீங்க செயல்படறதைவிட உங்க ஆலோசனையின் பேர்ல நான் செயல்படறதுதான் நல்லா இருக்கும். அதனால எல்லாரும் சேர்ந்து இளைஞரணியை வளர்ப்போம். மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் வர்றேன். தகுதியுள்ள யாருக்கும் உரிய இடத்தை வாங்கிக் கொடுப்பேன்” என்று முடித்தார் உதயநிதி. ஆனால் மாவட்டச் செயலாளர்கள் பற்றி நாற்பதுக்கும் மேற்பட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் சொன்ன புகார்கள் பற்றி தன் பேச்சில் எங்கும் குறிப்பிடாமலே கவனமாக தவிர்த்துவிட்டார்.

உதயநிதி மீது மாசெக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களை சமாதானப்படுத்த மாசெக்களை அவரவர் மாவட்டத்துக்கே சென்று நேரில் சந்திக்க இருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம். அதற்கேற்ற மாதிரி கூட்டத்தில் பேசிய பலரும் மாசெக்கள் மீது புகார் கூறியிருக்கிறார்கள்.

புது ரத்தம்தான்

கூட்டம் முடிந்து சில அமைப்பாளர்களிடம் பேசினோம். “ வழக்கமா சொல்ற மாதிரி சொல்லலை. உண்மையிலேயே திமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்சுற மாதிரிதான் இருக்கு உதயநிதியின் செயல்பாடுகள். இயல்பா இருக்கார், நிதானமா இருக்கார், மாவட்ட அமைப்பாளர்கள் பேசுறதை குறிப்பெடுத்துக்கிட்டார். அவர் பேசும்போது தங்கு தடையில்லாம பேசுறார். உண்மையிலேயே உதயநிதி புது ரத்தம்தான்” என்றனர்.

மாவட்டச் செயலாளர்கள் ஏற்கனவே ஒருபக்கம் திமுகவுக்கு ரத்தம் பாய்ச்சி வருகிறார்கள். உதயநிதி இப்போது புது ரத்தம் பாய்ச்ச வந்திருக்கிறார். இரு ரத்தமும் ஒரே வகையாக இருந்தால்தான் திமுக என்ற கட்சியின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

-ஆரா

மேலும் படிக்க

‘முதல்வர்’ ஆக்கிய சந்திரசேகரனை எம்பி ஆக்கும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!


ஞாயிறு, 7 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon