மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

விமர்சனம்: களவாணி 2

விமர்சனம்: களவாணி 2

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா இணைந்து நடித்து 2010ஆம் ஆண்டு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம் களவாணி 2. அதே கூட்டணி அதே களத்தில் வேறொரு கதையுடன் களமிறங்கியுள்ளனர்.

வேலைவெட்டி எதுவுமில்லாமல் ஊருக்குள் களவாணித்தனம் செய்துகொண்டிருக்கிறார் அறிக்கி (எ) அறிவழகன். வேட்பாளர்களிடம் பேரம் பேசி பணத்தை கறக்கலாம் என்ற நினைப்பில் உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்துத் தலைவராக நிற்க காதலி மகேஷின் (ஓவியா) வார்த்தை அவருக்குள் தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்கிறது.

ஒருபக்கம் சொந்த மாமா தலைவர் பதவிக்கு நிற்க மறுபக்கம் ஓவியாவின் அப்பா போட்டியிடுகிறார். செல்வாக்குள்ள மனிதர்களாக வரும் இவர்களை மக்களே போட்டியிடுமாறு வற்புறுத்துகின்றனர். ஊரில் யாருமே மதிக்காத அறிக்கி இவர்களை எதிர்த்து எவ்வாறு போட்டியிடுகிறார், தேர்தலில் ஜெயித்தாரா, அவரது களவாணித் தனங்கள் கைகொடுத்ததா என்று விரிகிறது களவாணி 2.

உள்ளாட்சித் தேர்தலில் நாயகன் போட்டியிடுவதுதான் கதையின் மையமாக இருக்க மிகத் தாமதமாகவே கதை அந்த இடத்திற்கு வருகிறது. அதன் பின்னரும் பெரிதாக எந்தக் கவலையுமின்றி மெல்ல நகர்கிறது திரைக்கதை.

அறிக்கி கதாபாத்திரத்துக்கு விமல் மீண்டும் உயிர்கொடுத்துள்ளார். ஓவியாவுக்கு முதல் பாகத்தில் இருந்த முக்கியத்துவம் இரண்டாம் பாகத்தில் இல்லை. சரண்யா பொன்வண்ணன், இளவரசு இருவரும் தங்கள் பாத்திரத்துக்கு முழுமையாக நியாயம் செய்துள்ளனர். அறிக்கியின் நண்பராக வரும் விக்னேஷ் எவ்வளவு முயன்றும் அவரால் சிரிப்பை வரவைக்க முடியவில்லை. தனது பணத்தைக் கதாநாயகனுக்காக இழந்து கொண்டேயிருக்கும் ‘பஞ்சாயத்து’ கதாபாத்திரத்திரமும் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகிறது. விமலின் மாமா கதாபாத்திரம் நன்கு உருவாகியுள்ளதுடன் அதில் நடித்திருப்பவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

சுவாரஸ்யமற்ற காட்சிகள் முதல் பாதியில் அணிவகுத்தாலும் எடுத்துக்கொண்ட கதைக்களத்தைவிட்டு வெளியே செல்லவில்லை. தேர்தலை மையமாகக் கொண்டே இரண்டாம் பாதி வேகம் எடுக்கிறது. குறிப்பாக கதை ஊரின் நான்கு தெருக்களை தாண்டவில்லை. சொந்த தயாரிப்பு என்பதாலோ அல்லது களத்தைதாண்டக் கூடாது என்பதாலோ டூயட் பாடலைக்கூட இடிந்துபோன ஒரு வீட்டைச் சுற்றியே முடித்துவிட்டனர்.

முதல் பாகத்தில் அறிக்கி பாத்திரம் செய்யும் சின்னச் சின்ன களவாணித்தனங்கள் புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தன. இந்தப் படத்தில் அந்த இடத்தில் இயக்குநர் சற்று சறுக்கியுள்ளார். இருப்பினும் கடைசிநேர அலப்பறைகள் சிரிப்பை வரவழைக்கின்றன.

நாட்டுப்புற இசையை சரியாக கலந்து பாடல்களை அமைத்துள்ளனர். மாசானியின் ஒளிப்பதிவு அந்தப் பகுதியை அழகாக காட்சிபடுத்தியுள்ளது. ராஜா முகமது பல இடங்களில் கறாராக காட்சிகளை வெட்டியிருக்கலாம்.

களவாணி முதல் பாகம் அளவுக்கு புதுமை, சுவாரஸ்யம், பட உருவாக்கம் இதில் இல்லையென்றாலும் மனதில் நின்ற அதன் கதாபாத்திரங்களை மீண்டும் ஒருமுறை சந்தித்து திரும்பிய உணர்வு ஏற்படுகிறது. முதல் பாகத்தை பார்க்காதவர்கள் எதிர்பார்ப்பில்லாமல் பார்த்து ரசிக்கலாம்.

மேலும் படிக்க

‘முதல்வர்’ ஆக்கிய சந்திரசேகரனை எம்பி ஆக்கும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!


ஞாயிறு, 7 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon