மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜூலை 2019

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை:  ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“ஒருவழியாக ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் தலைமைக் கழக அறிவிப்பில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரண்டு பெயர்கள் இருந்தாலும், ராஜ்யசபா வேட்பாளர் தேர்வு முழுக்க முழுக்க எடப்பாடி மேற்கொண்டதுதான்.

கே.பி.முனுசாமி, தம்பிதுரை, தன் அண்ணனுக்காக சி.வி. சண்முகம், அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன், வைகைசெல்வன் என சீனியர்கள் ஏராளமானோர் ராஜ்ய சபாவுக்காக கட்சிக்குள் காய் நகர்த்திக் கொண்டிருந்த வேளையில் ஒரு நகரச் செயலாளருக்கும், அதிமுகவின் தீவிர பணிகளில் இருந்து சற்றே ஒதுங்கியிருந்த முன்னாள் அமைச்சருக்கும் ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை தேடிச் சென்று கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் பலரும் அவர் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் முகமது ஜான் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர். இவரை எம்பியாக்குவதற்கு முழு முதல் காரணம் நடக்க இருக்கும் வேலூர் மக்களவைத் தேர்தல்தான். தமிழ்நாட்டிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அதிமுக எம்.பி. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தான் என்ற கருத்தை உடைக்க விரும்புகிறார் எடப்பாடி. அதற்காக சில வாரங்களாகவே வேலூரில் எப்படி ஜெயிக்கலாம் என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறார். இதற்காக தனது நம்பகமான சிலரிடம் ஒரு ரிப்போர்ட் கேட்டிருக்கிறார் எடப்பாடி.

அவர்கள் ஆய்வு செய்து சில விஷயங்களை எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, ‘நாம் ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தவில்லை. இப்போது வேலூர் தொகுதியில் மட்டுமல்ல வேலூர் மாவட்டம் முழுக்க அதிக அளவு முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக உருது பேசும் முஸ்லிம்கள் இங்கே அதிகம். அவர்கள் பாஜக மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே வேலூர் பகுதியைச் சார்ந்த ஒரு முஸ்லிமை நாம் ராஜ்யசபா எம்பி ஆக்கினால் வேலூர் தொகுதியில் வெற்றிபெற ஏதுவாக இருக்கும். அதுமட்டுமல்ல அவர் உருது முஸ்லிமாக இருந்தால் நாம் வேலூரில் ஜெயிப்பது உறுதி.

ஏற்கனவே முஸ்லிம் லீக் வேட்பாளரை கூட்டணியில் வைத்துக் கொண்டே ஜெயிக்க விடமாட்டோம் என்று சபதம் போட்டுத் தோற்கடித்தார்கள் துரைமுருகனின் ஆதரவாளர்கள். அதையெல்லாம் முஸ்லிம் மக்களிடம் எடுத்துச் சொல்லி வேலூர் தேர்தலில் நாம் வெற்றிபெறப் பார்க்கலாம். ஆனால் நாம் வெறுமனே சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள். அதனால் வேலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு உருது பேசும் முஸ்லிமை ராஜ்ய சபா எம்பி ஆக்கிவிட்டு தேர்தல் களத்துக்குப் போனால் முஸ்லிம் மக்களுக்கு அதிமுக மீது நம்பிக்கை வரும்’ என்பதுதான் அந்த ரிப்போர்ட்டில் இருந்திருக்கிறது.

இதையடுத்து வேலூர் அதிமுகவில் உருது முஸ்லிம் பிரமுகர்கள் யார் யார் என்ற விவரம் சேகரிப்பட்டு அந்தப் பட்டியலில் இருந்துதான் முன்னாள் அமைச்சர் முகமது ஜான் பெயரை டிக் செய்திருக்கிறார் எடப்பாடி. வேலூர் தேர்தல் களத்தில் அதிமுகவின் முக்கிய பிரச்சாரமே, ‘நாங்கள் உங்களுக்கு ஒரு எம்பியை கொடுத்துவிட்டோம். நீங்கள் எங்களுக்கு ஒரு எம்பியைக் கொடுங்கள். வேலூருக்கு இரு எம்.பி.க்களை பெற்றால் அது வேலூரின் வளர்ச்சிக்கே நல்லது’ என்பதையே முன் வைக்க இருக்கிறார்கள்.

இன்னொரு எம்பியான மேட்டூர் சந்திரசேகரன் தான் கட்சிக்குள் அதிக விவாதத்துக்கு ஆளாகியிருக்கிறார். 2016 சட்டமன்றத் தேர்தலின் போதே சேலம் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று முடிவு செய்து கார்டனுக்கு சிபாரிசு செய்தவர் எடப்பாடி. அந்த வகையில் அப்போது மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக எடப்பாடியால் சிபாரிசு செய்யப்பட்டவர்தான் இந்த சந்திரசேகரன். இவர்தான் மேட்டூர் வேட்பாளர் என்றும் முடிவாகிவிட்டது. இந்த நிலையில்தான் சந்திரசேகரன் மீது மோசடி வழக்கு இருப்பதாகவும், அவருக்கு பேர் சரியில்லை என்றும் தம்பிதுரைக்கு தகவல் கிடைக்க, அவர் இதை உடனடியாக ஜெயலலிதாவுக்கு தெரியப்படுத்துகிறார். இதையறிந்து எடப்பாடி மீது கடுமையாக கோபப்பட்ட ஜெயலலிதா மேட்டூர் தொகுதிக்கு வேட்பாளராக செம்மலையை அறிவித்தார். செம்மலையும் ஜெயித்தார்.

தான் சிபாரிசு செய்த ஆளை தம்பிதுரை தடுத்துவிட்ட பழைய சம்பவத்தை நினைவில் வைத்துக் கொண்டுதான், இப்போது தம்பிதுரை ராஜ்யசபா கேட்டபோதும் அவரைப் புறக்கணித்துவிட்டு அதே சந்திரசேகரனை எம்.பி.யாக்கியிருக்கிறார் எடப்பாடி. இவர் எடப்பாடிக்கு மிக மிக வேண்டியவர் என்பதும், எடப்பாடி குடும்பத்தின் பல சொத்துகளை இவர்தான் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் எம்பி ஆவதற்கான கூடுதல் காரணம் என்கிறார்கள் சேலத்து ரத்தத்தின் ரத்தங்கள். ‘அம்மா எம்.எல்.ஏ.வுக்கே தகுதியானவர் இல்லைனு நிராகரிச்ச வேட்பாளரையே எடப்பாடி எம்பி ஆக்குறார்’ என்ற அதிருப்தியும் சேலத்து அதிமுகவில் இருக்கிறது.

பாமக அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கக் கூடாது என்று சி. வி. சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் முதல்வரிடம் நேரடியாகவே வலியுறுத்தியும் அதையும் மீறி பாமகவுக்கு சீட் கொடுத்துவிட்டார் எடப்பாடி. இந்தத் தகவல் அறிந்து சி.வி. சண்முகம், கே.பி. முனுசாமி ஆகியோர் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையாக வெடித்தாலும் ஆச்சரியம் இல்லை என்பதுதான் அதிமுகவின் இப்போதைய நிலைமை.

ஆனால் இன்று நெல்லை புறப்படுவதற்கு முன் தனது நெருக்கமானவர்களிடம், ‘இன்னிக்கு நம்ம பலம்தான் அதிகமாயிருக்கு. அதனால யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாங்க’ என்று நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

மேலும் படிக்க

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி

‘முதல்வர்’ ஆக்கிய சந்திரசேகரனை எம்பி ஆக்கும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை : அதிருப்திக் குரல்... உதயநிதியின் சமரசப் பயணம்!

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!


கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

சனி 6 ஜூலை 2019