மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜூலை 2019

பட்ஜெட்: விமர்சனங்களுக்கு மோடி பதில்!

பட்ஜெட்: விமர்சனங்களுக்கு மோடி பதில்!

நேற்று (ஜூலை 5) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருமாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளன. முக்கியமாக, ஏழைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை எனவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான பட்ஜெட் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மேலும், இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கு பற்றியும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில், பொருளாதாரம் பற்றிய விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். வாரணாசியில் இன்று (ஜூலை 6) பாஜக நிர்வாகிகளுடனான கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டத்தில், இந்தியாவை 5 லட்சம் கோடி டாலராக மாற்றுவதற்கு ஒன்றிய பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் பற்றி மோடி விளக்கினார்.

அவர் பேசுகையில், “நாட்டில் ஒவ்வொரு நபரும் ஒரு பங்குதாரர்தான். இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஏனென்றால், இந்தியர்களின் திறனை சிலர் சந்தேகிக்கின்றனர். 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை எட்டுவது மிகவும் கடினம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இருந்தாலும், இந்த இலக்கு தைரியம், புதிய சாத்தியக்கூறுகளை கண்டறிவது, வளர்ச்சிக்காகவும், தேசத்திற்காகவும் சேவை செய்வது, புதிய இந்தியாவுக்காக கனவு காண்பது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. இக்கனவுகள் அனைத்தும் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துடன் தொடர்புடையது. இன்று வளர்ந்த நாடுகளாக இருப்பவை அனைத்தும் ஒரு காலத்தில் வளரும் நாடுகளாக இருந்தவைதான்.

இந்நாடுகளில் தனி நபர் வருமானம் குறுகிய காலத்திற்குள் கடும் வளர்ச்சியை எட்டிய வரலாறு உண்டு. அப்போதுதான் இந்நாடுகள் வளரும் நாடுகள் என்ற நிலையிலிருந்து வளர்ந்த நாடுகளாக உருமாறின. நாட்டில் தனிநபர் வருமானம் உயரும்போது கொள்முதல் திறனும் அதிகரிக்கிறது. கொள்முதல் திறன் அதிகரிக்கும்போது தேவை அதிகரிக்கிறது. தேவை அதிகரிக்கும்போது உற்பத்தியும், சேவைகளும் அதிகரிக்கின்றன. இதனால் தனிநபர் வருமானமும், குடும்ப சேமிப்புகளும் அதிகரிக்கும்.

தூய்மையான, சுகாதாரமான, அழகான இந்தியாவை உருவாக்கி 5 லட்சம் கோடி டாலர் இலக்கை எளிமையாக்க கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக சுகாதாரத்திற்காக ஒவ்வொரு குடிமகனும் ஆற்றிய பங்களிப்பால் சுகாதார இந்தியாவிற்கு எங்களது முயற்சிகளை மேலும் அதிகரித்துள்ளோம். இப்போது, விவசாயிகளை வெறும் உணவு உற்பத்தியாளராக மட்டும் பாராமல் ஏற்றுமதியாளர்களாக பார்க்கிறோம்.

உணவு, பால், காய்கறிகள், தேன், இயற்கை பொருட்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கான திறன் நமக்குள்ளது. ஆகவே, வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய ஏற்ற சூழலை உருவாக்க பட்ஜெட் வலியுறுத்துகிறது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கிராமங்களில் வேளாண் உற்பத்தியை சேகரித்து வைப்பதற்கான கிடங்குகள், நகரங்களில் நவீன வசதிகள் என பல அடுக்குகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து, டிஜிட்டல் தளங்கள், பிராட்பேண்ட் வசதிகள் உட்பட அனைத்து துறைகளிலும் உள்கட்டமைப்புகளுக்காக முதலீடு செய்வோம்.

கேக்கின் அளவுதான் முக்கியம் என ஆங்கிலத்தில் ஒரு மொழியுண்டு. அதாவது, கேக் பெரிதாக இருந்தால் மக்களுக்கு கிடைக்கும் துண்டுகளும் பெரிதாக இருக்கும். அதனால்தான் 5 லட்சம் கோடி டாலர் இலக்கை வைத்துள்ளோம். ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்திற்கான பாதையை பட்ஜெட்டில் வழங்கியுள்ளோம். அடுத்த ஐந்தாண்டுகளில் நாம் ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உருவெடுப்போம்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி

‘முதல்வர்’ ஆக்கிய சந்திரசேகரனை எம்பி ஆக்கும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை : அதிருப்திக் குரல்... உதயநிதியின் சமரசப் பயணம்!

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!


வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

சனி 6 ஜூலை 2019