மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

‘முதல்வர்’ ஆக்கிய சந்திரசேகரனை எம்பி ஆக்கும் எடப்பாடி

 ‘முதல்வர்’ ஆக்கிய சந்திரசேகரனை எம்பி ஆக்கும் எடப்பாடி

அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்திருக்கிறது அக்கட்சித் தலைமை.

இன்று (ஜூலை 6) அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், “அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான மூன்று இடங்களில் இரண்டு இடங்களுக்கு முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி பாமகவுக்கு மற்றுமொரு இடம் ஒதுக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2016 தேர்தலில் மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர், திமுக வேட்பாளர் காந்தியிடம் தோல்வியைத் தழுவினார். தற்போது அதிமுக சிறுபான்மையினர் அணி மாநில இணைச் செயலாளராக இருந்துவருகிறார். மற்றொரு வேட்பாளரான சேலம் புறநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன் பி.எஸ்சி படித்துள்ளார். தற்போது மேட்டூர் நகர அதிமுக செயலாளராக இருந்துவருகிறார்.

ராஜ்யசபா எம்பி பதவிக்காக அதிமுகவின் சீனியர்கள் பலர் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருந்த நிலையில் இந்தப் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணி பற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்ற ஒரே ஒரு எம்.பி. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாக இருப்பவர்களோ, ரவீந்திரநாத்தோ டெல்லியில் எடப்பாடிக்கு இணக்கமாக இருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில்தான் புதிதாக எம்பி ஆகப் போகிறவர்கள் தனக்குப் புரிதலுள்ள, தான் சொன்னால் கேட்கக் கூடிய நிலையில் இருக்க வேண்டும் என்று கருதியிருக்கிறார் எடப்பாடி.

இந்த வகையில் எடப்பாடியின் முதல் சாய்ஸ் மேட்டூர் அதிமுக நகர செயலாளர் சந்திரசேகரன். நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே எடப்பாடி பழனிசாமியின் விசுவாசியாக இருப்பவர் சந்திரசேகரன். எடப்பாடி சேலம் வந்த அடுத்த நிமிடம் மேட்டூரில் இருந்து சேலத்துக்கு வந்துவிடும் சந்திரசேகரன், எடப்பாடி சென்னை புறப்பட்டதும்தான் மீண்டும் மேட்டூருக்கு செல்வார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதல்வர் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கப் போகிறார்கள் என்ற பேச்சு எழுந்தது. அப்போது பலரும், ஏற்கனவே ஜெயலலிதாவால் முதல்வர் பொறுப்பை நிர்வகிக்க முடியாத நேரங்களில் ஓ.பி எஸ்.தான் அந்தப் பொறுப்பை நிர்வகித்துள்ளார். எனவே பன்னீர் செல்வத்திடம்தான் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்று சொன்னார்கள். அதன்படியே பன்னீரிடம்தான் முதல்வரின் இலாகாக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அப்போது யாரும் ஊகிக்காத, யாரும் நினைத்துக் கூட பார்க்காத வகையில் எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று சேலத்தில் இருந்தபடி கோரிக்கை வைத்தவர் இந்த சந்திரசேகரன். ஆக எடப்பாடியை முதல்வராக்க வேண்டும் என்று முதன் முதலில் பேசிய நகரச் செயலாளர் சந்திரசேகரனுக்கு எம்பி பரிசு கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார் எடப்பாடி. (முதல்வர் பொறுப்பில் யார் என்ற கேள்வி அப்போது அதிமுகவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நேரத்தில் எடப்பாடியிடம் முதல்வர் பொறுப்பு ஒப்படைக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை அப்போது மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் வெளியிட்டிருந்தோம்)

அடுத்து சிறுபான்மை பிரிவில் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவானபோது அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட சீனியர்கள் எடப்பாடியிடம் நேரடியாகவே அழுத்தம் கொடுத்தனர், ஒருவாரம் முன்பு தன்னிடம் பேசிய அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன் ஆகியோரிடம் மனம் விட்டு சில கருத்துகளை சொல்லியுள்ளார் எடப்பாடி.

‘அண்ணே... நீங்கள்லாம் எனக்கு சீனியர். உங்களை எல்லாம் வேலை வாங்குற அளவுக்கு எனக்குத் தெம்பில்லை. நீங்க எம்பியா இருந்துட்டீங்க. தவிர அங்க இதைப் பேசுங்க, அதைப் பேசுங்கனு உங்ககிட்ட நான் சொல்றதும் நல்லா இருக்காது. அதை நீங்க கேட்டுப்பீங்களானும் தெரியலை. அதனால தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க கட்சிப் பணிகளை பாருங்க. அடுத்த சட்டமன்றத் தேர்தல்ல நீங்க போட்டியிடலாம். இப்ப நான் சொல்றதைக் கேக்கறவங்களா பாத்து எம்பி ஆக்குறேன்’ என்று எடப்பாடி சொல்லியிருக்கிறார். இதன் பின்னர்தான் சிறுபான்மையினர் அணி மாநில இணைச் செயலாளராக இருந்துவரும் முகமது ஜானை ராஜ்யசபாவுக்கு அனுப்ப தேர்ந்தெடுத்திருக்கிறார் எடப்பாடி” என்கிறார்கள்.

மேலும் படிக்க

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

டிஜிட்டல் திண்ணை : அதிருப்திக் குரல்... உதயநிதியின் சமரசப் பயணம்!

உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!


சனி, 6 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon