மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 31 மே 2020

பால் விலை உயர்கிறதா? ஆவின் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்!

பால் விலை உயர்கிறதா? ஆவின் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்!

தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை மீண்டும் உயர்த்தப்படும் வாய்ப்பிருப்பதாக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று (ஜூலை 5) கால் நடை பராமரிப்புத் துறை, பால்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் கே.பி.பி. சாமி, “பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படவே இல்லை. அதை உயர்த்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “உறுப்பினர் 4 ஆண்டு காலமாக பால் உற்பத்தியாளர்களுக்கு பால் விலை உயர்த்தப்படவில்லை என்ற ஒரு வினா எழுப்பி இருக்கின்றார். நாங்கள் பால் விலையை உயர்த்துவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் நீங்கள் போராட்டம் செய்யாமல் இருந்தால், நாங்கள் பால் விலையை நிச்சயமாக உயர்த்துவோம். உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தும் போது, நுகர்வோருக்கும் உயர்த்தி தானே ஆக வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு அந்த விலையை உயர்த்தி கொடுக்கின்றபோது, அதற்கேற்றவாறு நுகர்வோருக்கு கட்டணம் உயரும். இது உங்களுடைய ஆட்சியிலும் சரி, எங்களுடைய ஆட்சியிலும் சரி, அப்போது தான் இந்த நிர்வாகம் சிறப்பாக நடக்கும்” என்று கூறினார்.

மேலும் முதல்வர், “இப்போதே நிர்வாகம் நஷ்டத்தில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. இப்பொழுது நுகர்வோருக்கு வழங்கப்படுகின்ற அந்த கட்டணமும், உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்ற கட்டணத்திலும் வித்தியாசம் இருக்கின்றது. ஆகவே, இன்றைக்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற விலையிலும், நுகர்வோருக்கு கொடுக்கின்ற விலையிலும் வேறுபாடு இருக்கின்றது. அதனால் தான் இப்போது பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன. ஆகவே, பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி கொடுப்பதில் எந்தவித ஒரு கஷ்டமும் அரசுக்கு இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் எல்லாம் இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வார்கள். ஏனென்றால் நுகர்வோருக்கு விலை உயர்த்த வேண்டும். நுகர்வோருக்கு விலை உயர்த்துகின்ற போது, பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அப்படி ஒரு கோரிக்கை எதிர்க்கட்சியில் இருந்து வரும். ஆகவே, நீங்களும் இதற்கு சம்மதித்தால் பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்த வேண்டிய தொகையை அரசு நிச்சயமாக உயர்த்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதில் அளித்திருக்கிறார்.

முதல்வரின் பதிலால் பால் விலை உயர்த்தப்படக் கூடும் அபாயம் எழுந்திருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க நிறுவனரும் தலைவருமான சு.ஆ. பொன்னுசாமியிடம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் பத்திரிக்கைக்காக பேசினோம்.

“முதல்வர் பேச்சில் மேலோட்டமாக உண்மை இருப்பது போல தெரியும். ஆனால் ஆவின் விற்பனை விலையை உயர்த்தாமலேயே கொள்முதல் விலையை மட்டும் உயர்த்த முடியும். ஆனால் அதற்கு முன் ஆவின் நிறுவனத்தில் நடக்கும் நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய வேண்டும்” என்றபடியே தொடங்கினார் பொன்னுசாமி.

“இப்போது ஆவின் நிறுவனத்தில் 3 வகை விலை நிர்ணயங்கள் இருக்கின்றன. அவற்றை ஒரே விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். மாதாந்திர அட்டைகள் மூலம் பால் வாங்குவது, முகவர்கள் மூலம் வாங்குவதை விட ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் வரை கம்மியாகும். சென்னையில் விற்கும் 12 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், 7 லட்சம் லிட்டர் மாதாந்திர அட்டை மூலம் விற்கிறது. ஆனால் இந்த மாதாந்திர அட்டைகளுக்கு அரசு கொடுக்கும் மானியத்தை சாக்காக வைத்து, ஆவின் பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பலர் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மொத்தமாக ஐநூறு, ஆயிரம், இரண்டாயிரம் கார்டுகள் என்று வாங்கி வைத்துக் கொண்டு அதை தங்களுக்கு வேண்டிய முகவர்கள் சிலரிடம் கொடுக்கின்றனர்.

இதனால் லிட்டருக்கு 2 ரூபாய் குறைவு என்று மக்களுக்கு ஆவின் கொடுக்கும் மானியம் மக்களுக்கு போய் சேராமல் அந்த சில முகவர்கள் மூலம் முன்னாள் ஆவின் ஊழியர்களுக்கே தனிப்பட்ட முறையில் போய் சேர்கிறது. இதில் மட்டுமே ஆண்டுக்கு அரசுக்கு 55 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதுதவிர பால் கொள்முதலில் கொழுப்புச் சத்து, திடச் சத்து ஆகியவற்றின் அளவுகளை மாற்றிக் காட்டி முறைகேடுகள் நடைபெறுகின்றன.

இது எல்லாவற்றையும் விட முக்கியமானது தமிழக பால் மார்க்கெட்டில் அரசு நிறுவனமான ஆவின் 16% தான் பூர்த்தி செய்கிறது. மீதி 84% மார்க்கெட் தனியார் பால் நிறுவனங்களிடம்தான் இருக்கிறது. ஆவின் நிறுவனம் முழுமையான தீவிரத்தோடு செயல்பட்டால் தமிழகத்தின் பால் மார்க்கெட்டில் 50% அளவையாவது கைப்பற்ற முடியும். அப்படி பால் சந்தையில் ஆவினின் பங்கேற்பை அதிகப்படுத்தினாலே ஆவின் லாபத்தில் இயங்கும். ஆனால் தமிழக சந்தையிலேயே 16% மட்டுமே வைத்துக் கொண்டு துபாயில் ஆவின் திறக்கிறோம், சிங்கப்பூரில் ஆவின் திறக்கிறோம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஆவினில் முகவர்களுக்கு போதுமான கமிஷன் கொடுப்பதில்லை. கெட்டுப் போன பாலை திரும்ப எடுத்துக் கொள்வதில்லை, உடைந்து போன பால் பாக்கெட்டுகளுக்கு மாற்று பாக்கெட்டுகள் கொடுப்பதில்லை. இப்படி பல காரணங்களால் ஆவினை விட்டு முகவர்கள் பலர் சென்றுவிட்டனர். ஆனால் விநியோகஸ்தர்களே போதும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஆவின்.

இப்படி ஆவின் நிறுவனத்தில் நிர்வாகத்தை சீரமைத்து கொள்கை முடிவுகளில் மாற்றம் கொண்டுவந்தாலே ஆவின் ;லாபத்தில் இயங்கும். அப்போது கொள்முதல் விலையை ஏற்றினாலும் விற்பனை விலையை ஏற்ற வேண்டிய கட்டாயம் வராது. ஆனால் இதெல்லாம் பால் போல தூய்மையான நிர்வாகத்தால்தான் முடியும். இன்றைய ஆவின் நிர்வாகத்தில் அதை எதிர்பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே” என்றார் பொன்னுசாமி.

மேலும் படிக்க

வைகோ கடும் எதிர்ப்பு: தீர்ப்பை திருத்திய நீதிபதி!

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

டிஜிட்டல் திண்ணை : அதிருப்திக் குரல்... உதயநிதியின் சமரசப் பயணம்!

உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?

தொடங்கிய இடத்திற்கே சென்ற வடிவேலு


சனி, 6 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon