மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 7 ஆக 2020

ஆங்கிலம் பொதுவான அளவுகோல் அல்ல!

ஆங்கிலம் பொதுவான அளவுகோல் அல்ல!

ஒரு சொல் கேளீரோ! – 28: அரவிந்தன்

வெளிநாட்டுப் பெயர்களைத் தமிழில் எழுதும்போது, ஆங்கிலத்தில் அவை எப்படி எழுதப்படுகின்றன என்பதை வைத்துத் தமிழில் எழுதக் கூடாது. அந்தந்த மொழிகளில் அவை எப்படி உச்சரிக்கப்படுகின்றன என்பதை வைத்து எழுத வேண்டும்.

வெளிநாடுகளைச் சேர்ந்த எல்லாப் பெயர்களும் நமக்குப் பெரும்பாலும் ஆங்கிலம் மூலமாகவே அறிமுகமாகின்றன. ஆனால் அவை எல்லாமே ஆங்கிலப் பெயர்கள் அல்ல. சீனம், ஜப்பான், ரஷ்யா, பொரியா, ஸ்பானிஷ், ஃபிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம், டச்சு எனப் பல மொழிகளின் பெயர்கள். பிரிட்டனைச் சேர்ந்த எல்லாப் பெயர்களும் ஆங்கிலப் பெயர்கள் அல்ல. ஆங்கிலம், வெல்ஷ் முதலான பல மொழிகள் அங்குள்ளன. எனவே ஆங்கிலத்தில் எழுதப்படும் விதத்தை மட்டும் வைத்துக்கொண்டு எந்த முடிவுக்கும் வர இயலாது.

உதாரணமாக தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் Hansi cronje இந்தப் பெயரை ஹன்ஸி குரோஞ்ச், குரோஞ்சி, குரோஞ்சே என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் எழுதுகின்றன. சரியான உச்சரிப்பைத் தென்னாப்பிரிக்க வர்ணனையளர்களிடமிருந்து தெரிந்துகொள்ளலாம். அது ஹன்ஸி க்ரோன்யே. இதை 'குரோன்யே' எனத் த மிழ் ஒலிப் பண்புக்கேற்ப மாற்றலாம். ஆனால் 'ஞ்சே', 'ஞ்ச்' 'ஞ்சி' என்றெல்லாம் எழுதக் கூடாது.

நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் Sam curren என்பவர் இருக்கிறார் இவர் பெயரில் 'U' இருப்பதை வைத்து இவரைக் 'குர்ரன்' எனச் சில தமிழ் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. யூடியூபில் இவருடைய பேட்டி உள்ளது. அதில் சாம் கரன் என்னும் ஒலி தெளிவாக உள்ளது.

திருணமூல் காங்கிரஸ் என்ற பெயரை Trinamoal என்று ஆங்கிலத்தில் படித்து ட்ரினமூல் / ட்ரிணாமூல், த்ரிணாமூல், த்ரிணமூல் என்றெல்லாம் சிலர் எழுதுகிறார்கள். 'த்ருண' என்றால் துரும்பு. புல்லின் வேர். இதைத் தமிழ் மரபுப்படி திருணம் என்று சொல்லலாம். 'உயிரைத் திருணமாக மதித்து' என்னும் தொடரைக் கேள்விப்பட்டிருப்போம். அதுதான் இங்கே உள்ளது. எனவே 'திருணமூல்' என எழுத வேண்டும்.

அதேபோல் Samajwadi என்பதில் உள்ள 'D' ஐப் பார்க்கும் சிலர் சமாஜ்வாடி என்கிறார்கள் இதன் மூலச் சொல் சமாஜ்வாதம் (சமாஜ் - சமூகம்) இது பொருளாதாரவாதி, மார்க்ஸியவாதி, தத்துவவாதம், வகுப்புவாதம் என்பன போன்ற சொல். எனவே சமாஜ்வாதி என்று எழுத வேண்டும்.

சிலர் தமிழ் ஊர்களின் பெயர்களையே ஆங்கில எழுத்து வடிவத்தை அடியொற்றித் தவறாக எழுதுகிறார்கள். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியது.

Triplicane - ட்ரிப்ளிகேன் - திருவல்லிக்கேணி

Kilpauk - கீல்பாக் - கீழ்ப்பாக்கம்

Alwarpet – ஆல்வார்பெட் - ஆழ்வார்ப்பேட்டை

Chetpet - செட்பட் - சேத்துப்பட்டு

Trishul ட்ரிஷுல் - திரிசூலம்

Wartrap - வர்ட்ராப் - வத்திராயிருப்பு

Tran1u bar - ட்ராங்குபார் - தரங்கம்பாடி

Ramnad - ராம்நாட் - ராமநாதபுரம்

தமிழக ஊர்களின் பெயருக்கு ஆதாரம் தமிழ் மொழிதான். சில இடங்களில் வடமொழியின் தாக்கமும் இருக்கும். இவற்றைத் தமிழ் / வடமொழி துணை கொண்டு சரியாக எழுத வேண்டும். ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு அல்ல.

இடங்களின் பெயரை மொழிபெயர்க்கக் கூடாது. ஆனால் சில ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் மொழிமாற்றப்பட்டுள்ளன. உதாரணம் செங்குன்றம் – Red Hills ஏழுகிணறு - Seven wells நீலகிரி - Blue Mountain. இவற்றை எழுதும்போது தமிழ் வடிவத்தையே பயன்படுத்த வேண்டும்.

வெள்ளி, 5 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon