மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

பாமகவுக்கு ராஜ்யசபா: அதிமுக பதில்!

பாமகவுக்கு ராஜ்யசபா: அதிமுக பதில்!

பாமகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரத்தினவேல், மைத்ரேயன், அர்ஜுனன், லக்ஷ்மணன், டி.ராஜா, கனிமொழி ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் சார்பில் தலா மூன்று உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படவே வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் திமுகவில் ஓர் இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு மற்ற இரு இடங்களுக்கு தொமுச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று ஒப்பந்தமிடப்பட்டது. ஆனால், தேர்தலில் அக்கூட்டணி படுதோல்வியைத் தழுவியதால், பாமகவுக்கு அதிமுக மாநிலங்களவைத் தேர்தலில் இடம் ஒதுக்காது என்ற தகவல் வெளியானது. மேலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

இந்தச் சூழலில் சென்னையில் நேற்று (ஜூலை 1) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், “மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய அவகாசம் இருப்பதால் வேட்பாளர்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படுவர். அப்போது உங்களுக்கும் தெரிவிக்கப்படும்” என்றார்.

ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு அளிக்கப்படும் என்று ஒப்பந்தம் செய்துள்ளீர்களே என்ற கேள்விக்கு, “இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒப்பந்தத்தில் இருப்பதை அமல்படுத்துவதுதான் மரபு. எனவே கட்சியும் ஒருங்கிணைப்பாளர்களும் அந்த வழியைத் தான் பின்பற்றுவர். அதிமுக எப்போதும் ஜென்டில் மேனாகவே இருக்கும்” என்று தெரிவித்தவரிடம், ஏற்கனவே பாமகவுடன் கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டிருக்கிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. “கடந்த காலத்தைப் பார்க்காதீர்கள். நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாருங்கள்” என அதற்குப் பதிலளித்தார் ஜெயக்குமார்.

அமைச்சரின் இந்தப் பதில், பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. அக்கட்சியின் சார்பில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: அமமுக தலைமை அலுவலகத்துக்கு ஆபத்து?

தஞ்சை அமமுகவைக் குறிவைத்துக் களமிறங்கிய செந்தில்பாலாஜி

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தைத் தடுத்தேன்: கே.எஸ்.அழகிரி

திட்டமிட்டே திமுகவில் இணைந்தேன்: தங்க தமிழ்ச்செல்வன்

ஸ்டாலினை சிபிஐ தேடிக் கொண்டிருக்கிறது: சி.வி.சண்முகம்


செவ்வாய், 2 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon