மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: அமமுக தலைமை அலுவலகத்துக்கு ஆபத்து?

டிஜிட்டல் திண்ணை: அமமுக தலைமை அலுவலகத்துக்கு ஆபத்து?

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. செய்தியை தட்டச்சு செய்யத் தொடங்கியது.

“தேர்தல் தோல்விக்கு பிறகு தினகரன் தலைமையிலான அமமுக முகாமிலிருந்து பல்வேறு நிர்வாகிகளும் அதிமுக ,திமுக என மாற்று கட்சிகளுக்கு செல்வது தொடர்கதையாகி வருகிறது. கட்சியில் இப்போது இருக்கும் பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் கூட இனியும் அமமுகவில் தொடரலாமா அல்லது வெளியே போகலாமா என்பது பற்றிய விவாதங்களை தத்தமது வட்டாரத்தில் மேற்கொண்டபடி தான் இருக்கின்றனர்.

தினகரன் தான் கட்சியின் முகம் அவரை தவிர வேறு யார் வந்தாலும் போனாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள் அதேநேரம் கட்சியின் முகம், முகவரி வேண்டுமானால் தினகரனாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாட கட்சிப் பணிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நடவடிக்கைகள் என்று கட்சியை உயிர்ப்போடு வைத்திருப்பது பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் தான். அவர்களை செந்தில் பாலாஜியும் தங்க தமிழ்ச்செல்வனும் போட்டி போட்டுக்கொண்டு தொடர்புகொண்டு வருவதாக தகவல்கள் இப்போது வருகின்றன.

செந்தில் பாலாஜி கட்சியை விட்டு விலகி திமுகவுக்கு செல்லும்போது தினகரனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தேர்தல் சமயத்தில் தான் அவர் தினகரன் பற்றி சில கருத்துக்களைச் சொல்ல அதற்கு அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் தினகரனும் தகுந்த பதில் கொடுத்தார்.

இதே நேரம் தங்க தமிழ்ச்செல்வன் தினகரனை எவ்வளவு உயர்த்திப் பிடித்து பேசினாரோ அதற்கு நேர்மாறாக மிகவும் தடித்த வார்த்தைகளால் கடுமையாக விமர்சனம் செய்து விட்டுத்தான் வெளியே போயிருக்கிறார்.

இந்த இரண்டு பேரும் கூட்டணி அமைத்து அமமுகவில் தங்களது தொடர்பில் இருக்கும் நிர்வாகிகளை திமுகவுக்கு பிடிப்பது என்று முடிவு செய்திருக்கின்றனர். இந்த இருவருமே அமமுகவில் முக்கியப் பதவிகளில் இருந்தவர்கள். தினகரனுக்கு மிகவும் நெருக்கமான இடத்தில் இருந்ததால், அப்போது அமமுகவின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் இவர்களை சுற்றியே இருந்தனர். இந்த வலுவான தொடர்பைதான் இப்போது இந்த இருவரும் பயன்படுத்தி தங்கள் பக்கம் இழுக்க பேசி வருகின்றனர். தென்மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளை தங்க தமிழ்ச்செல்வனும், கொங்கு பகுதி, திருச்சி, தஞ்சை டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமமுக நிர்வாகிகளை செந்தில் பாலாஜியும் இப்போது தொடர்பு கொண்டு திமுக பக்கம் அவர்களை கொண்டுவர செயல் திட்டம் தீட்டி இருக்கின்றனர்.

இந்தத் தகவல் தினகரன் கவனத்துக்கும் சென்றுள்ளது இதனால் ஒவ்வொரு மாவட்ட செயலாளரையும் தொடர்பு கொண்டு பேசும் தினகரன் கட்சியின் நிலை இப்போது இப்படி இருந்தாலும் எதிர்காலம் நமக்குத்தான் என்று வகுப்பு எடுப்பது போல உரையாடி வருகிறார்.

இதற்கிடையே தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவரும் தென் சென்னை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான இசக்கி சுப்பையாவும் தற்போது தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இசக்கி சுப்பையா கடந்த மக்களவைத் தேர்தலில் தனக்கு திருநெல்வேலி தொகுதியை கேட்டிருக்கிறார். ஆனால் தினகரனோ அவரை தென்சென்னையில் வற்புறுத்தி நிற்க வைத்துள்ளார். மேலும் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகம் இருக்குமிடம் இசக்கி சுப்பையாவிற்குச் சொந்தமானது. சமீபத்தில் அக்கட்சியின் பதிவு பற்றி நாளிதழ்களில் வந்த விளம்பரத்தில் கூட தலைமை அலுவலகம் என்ற பெயரில் 10, டாக்டர் நடேசன் தெரு, அசோக் நகர், சென்னை-83 என்ற முகவரி தான் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதமே குற்றாலத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை ஈடுபட்ட இசக்கி சுப்பையா தற்போது மீண்டும் பல்வேறு பிரமுகர்களுடன் பேசி வருவதாக அமமுக வட்டாரத்திலேயே தகவல்கள் கிடைக்கின்றன. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சட்டத்துறை அமைச்சராக இருந்த சுப்பையாவை மீண்டும் அதிமுக பக்கம் இழுப்பதற்கு பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. அதேநேரம் இசக்கியை திமுகவுக்கு கொண்டு செல்ல தங்க தமிழ்ச்செல்வன் பேசி வருகிறார்.

ஒருவேளை இசக்கி சுப்பையாவும் அமமுகவில் இருந்து வெளியேறி விட்டால் அக்கட்சியின் தலைமை அலுவலகம் அதே இடத்தில் இயங்குமா அல்லது புதிதாக வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படுமா என்ற விவாதமும் அக்கட்சி நிர்வாகிகள் இடையே இப்போது நடந்து கொண்டிருக்கிறது” என்ற மெசேஜை செண்ட் செய்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

மேலும் படிக்க

தஞ்சை அமமுகவைக் குறிவைத்துக் களமிறங்கிய செந்தில்பாலாஜி

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தைத் தடுத்தேன்: கே.எஸ்.அழகிரி

ஸ்டாலினை சிபிஐ தேடிக் கொண்டிருக்கிறது: சி.வி.சண்முகம்

திமுகவை எதிர்த்தவருக்கு திமுகவிடமே ராஜ்யசபா கேட்கும் எஸ்ரா

செல்வாவின் அடுத்த படத்தில் தனுஷ்


திங்கள், 1 ஜூலை 2019

அடுத்ததுchevronRight icon