மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 14 ஜூலை 2020

தஞ்சை அமமுகவைக் குறிவைத்துக் களமிறங்கிய செந்தில்பாலாஜி

தஞ்சை அமமுகவைக் குறிவைத்துக் களமிறங்கிய செந்தில்பாலாஜி

அமமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் வெளியேறி வரும் நிலையில், மீதமிருக்கும் நிர்வாகிகளையும் அக்கட்சியில் இருந்து ஆநிரை கவர்வது போல், அதிமுகவும் திமுகவும் கவர, தீவிர வேட்டையாடி வருகிறார்கள்.

இதில் அண்மையில் திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜியின் ஆபரேஷன் இன்னும் ஓயவில்லை என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு திடீரென திமுகவில் சேர்ந்த செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வும் ஆனார். தங்க தமிழ்ச்செல்வனை திமுகவுக்குக் கொண்டுவந்ததிலும் பெரிய பங்கு செந்தில்பாலாஜிக்கு இருந்தது.

இந்த நிலையில், ‘எந்தெந்த பகுதிகளில் எல்லாம் அமமுக நிர்வாகிகள் அதிருப்தியாக சுணக்கமாக இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் அறிவாலயத்தின் அனுமதி பெற்று திமுகவுக்குக் கொண்டுவரும் ஒரு சிறப்புப் பணியைக் கச்சிதமாக செய்துவருகிறார் செந்தில்பாலாஜி. அதற்காக சில நாட்களாக செந்தில்பாலாஜியின் கண் பதிந்திருக்கும் பூமி தஞ்சாவூர்.

டிடிவி தினகரனுக்கு மிகவும் வேண்டப்பட்ட ஊர் தஞ்சாவூர். அமமுக பொருளாளர் ரங்கசாமியின் சொந்த ஊர். மன்னார்குடி வகையறா என்று சொல்லப்பட்டாலும் சசிகலாவின் பல உறவினர்கள் வசிக்கும் பகுதி தஞ்சைப் பகுதிதான். இந்தப் பகுதியில் அமமுகவுக்காகக் கடுமையாக உழைத்து, இப்போது விரக்தியில் இருக்கும் வீரியமான நிர்வாகிகள் சிலரிடம் செந்தில்பாலாஜி பேசத் தொடங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக தஞ்சை அமமுக கீழ் நிலை நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

“நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமமுக ஒரு லட்சம் ஓட்டுக்கும் அதிகமாக வாங்கிய தொகுதி தஞ்சாவூர். அமமுகவைப் பொறுத்தவரை அமமுக இரு மாவட்டங்களாக இருந்தது. பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்த நாடு, தஞ்சாவூர் தொகுதிகளை உள்ளடக்கி தஞ்சை தெற்கு மாவட்டம் என்றும், திருவிடை மருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி தஞ்சை வடக்கு மாவட்டம் என்றும் நிர்வகிக்கப்பட்டது.

தஞ்சை தெற்கு மாசெவாக மா.சேகர் இருக்கிறார். இவர் தினகரனுக்கு நெருக்கமானவர். ஒரத்தநாட்டில் வைத்திலிங்கத்தை எதிர்த்து இன்றுவரை துணிச்சலாக அரசியல் செய்து வருபவர். தேர்தல் நேரத்தில் வைத்திலிங்கம் வந்த வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரத்தைக் கவனமாகக் கையாண்டவர். கட்சிக்காக நிறைய செலவு செய்பவர். இவரிடம் இருந்து தஞ்சை தெற்கு மாவட்டத்தைத் துண்டாடி தஞ்சை மாநகர் மாவட்டமென்று உருவாக்கினார்கள். அப்போதே மா.சேகருக்கு லேசான சுணக்கம் ஏற்பட்டது. ஆனால் அதையும் தாண்டி தேர்தலுக்காக உழைத்தார்.

தேர்தலின்போது பட்டுக்கோட்டையில் இருக்கும் டாக்டர் வெங்கடேஷின் மாமனார் குடும்பத்தில் இருந்து பல தொந்தரவுகளைச் சந்தித்திருக்கிறார் மா.சேகர். ‘தினகரன் நம்ம தலைவர். அவர் சொன்னா கேட்கலாம். இங்கே இருந்துக்கிட்டு இந்தக் குடும்பம் பண்ற டார்ச்சர் தாங்கல’ என்று தேர்தலின்போதே பல நிர்வாகிகள் புலம்பினார்கள் தேர்தலுக்குப் பின்னும் இந்த புலம்பல் கேட்கிறது. ‘கட்சிக்காக இதுவரைக்கும் ஒரு கோடி செலவு பண்ணியிருப்பாரு மா.சேகர். ஆனா மரியாதை கிடைக்கலையே. தலைவரை விட பல நாட்டாமைகள் இங்கே இருக்கு. அதையெல்லாம் கட்டுப்படுத்தலைன்னா கட்சி என்னாகுமோ?’ என்று அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே புலம்புகிறார்கள்.

இந்தக் குரல்கள் செந்தில்பாலாஜிக்குக் கேட்க, வைத்திலிங்கத்துக்கு எதிராக அரசியல் செய்ய சரியான ஆள் என்று சேகரைக் குறித்து வைத்து இப்போது தஞ்சையில் களமிறங்கிவிட்டார்.

டிடிவி தினகரன் தனது தஞ்சை மாவட்ட அமமுகவைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் குடும்ப ஆதிக்கத்தை ஒடுக்கி நிர்வாகிகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்” என்கிறார்கள்.

மேலும் படிக்க

போன் போட்ட தினகரன்; பேட்டி கொடுத்த பழனியப்பன்

சபரீசனை எம்பி ஆக்குகிறாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் குடும்பம் மீது மத்திய அரசு குறி!

முதல்வர் மாவட்ட கலெக்டர் மாற்றம் ஏன்?

நேற்று இணைந்தவருக்கு இன்று பதவி!


ஞாயிறு, 30 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon