மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 13 நவ 2019

மீண்டும் களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்!

மீண்டும் களைகட்டிய காசிமேடு மீன் மார்க்கெட்!

மீன் பிடித் தடைக்காலம் முடிந்து காசிமேடு மீன் சந்தை மீண்டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது.

60 நாட்கள் மீன் பிடித் தடைக்காலத்துக்குப் பிறகு இந்த வார விடுமுறை தினத்தில் சந்தை குதூகலத்துடன் மீண்டும் தொடங்கியுள்ளது. வாவல், மத்தி, சூறை உள்ளிட்ட மீன் பிரியர்கள் இனி குறைந்த விலையில் இவற்றை வாங்கலாம். சென்ற வாரம் சைதாப்பேட்டை சந்தையில் ஒரு கிலோ ரூ.350க்கு விற்பனையான மத்தி மீனின் விலை ரூ.150 முதல் ரூ.200க்கு இப்போது கிடைக்கிறது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் குறைவான அளவில்தான் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்குக் குறைந்த விலை மட்டுமே கிடைப்பதாகவும் தென்னிந்திய மீனவர் நலக் கூட்டமைப்பின் துணைத் தலைவரான மகேந்திரன் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீன் பிடித் தடைக் காலம் இருந்தபோது ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காக வந்தன. காசிமேடு மீன் பிடித் துறைமுகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலும், 600க்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும், 300க்கும் அதிகமான கட்டு மரங்களிலும் மீனவர்கள் மீன் பிடித்து வந்தனர். இதில் விசைப் படகுகள் நிறுத்தப்பட்டதாலும் மற்ற படகுகளில் வரும் மீன் வரத்து குறைந்ததாலும் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. விற்பனையாகும் மீன்களின் விலையும் அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில் வெறிச்சோடி இருந்த காசிமேடு மீன் மார்க்கெட் இப்போது மீண்டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய தினத்தில் சங்கரா மீன், கானாங்கெளுத்தி மற்றும் பாறை மீன் லோடு காசிமேடு துறைமுகத்தில் இரண்டு மீனவர் குழுக்களால் இறக்கப்பட்டது.


மேலும் படிக்க

அதிமுகவுக்கு யெஸ், திமுகவுக்கு நோ சொன்ன தங்கம்

டிஜிட்டல் திண்ணை: சோனியா கோரிக்கை... ஸ்டாலின் நிராகரிப்பு!

பைக் நிறுவனங்களுக்குக் காலக்கெடு!

பேசியது பேசியதுதான், கருத்தை மாற்றமாட்டேன்: ராமதாஸ்

அந்த ஜாம்பவான் போகட்டும்: தங்கத்தை சாடும் தினகரன்


திங்கள், 24 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon