மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 ஜுன் 2019

திரை தரிசனம்: கம் அண்ட் சீ

திரை தரிசனம்: கம் அண்ட் சீ

முகேஷ் சுப்ரமணியம்

1943ஆம் ஆண்டில், ரஷ்யாவுடன் கூட்டாட்சியில் இருக்கும் பைலோருசியாவைச் சேர்ந்த ஃப்ளோரியா எனும் சிறுவன் தன் நண்பனுடன் மணல் புலத்தில் ஆயுதங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றான். சிறுவர்களான அவர்கள் முரட்டுத்தனமான ஆணின் குரலில் போரில் ஈடுபடும் ராணுவ வீரர்களின் சாகசத்தை நாடகம் போல விளையாடுகின்றனர். அப்போது அங்கே வரும் கிராம பெரியவர், ஜெர்மானியர்களின் சந்தேகங்களைத் தூண்டும் என்பதால் ஆயுதங்களைத் தோண்ட வேண்டாம் என்று அவர்களை எச்சரிக்கிறார். ஃப்ளோரியா புதைத்து வைக்கப்பட்ட பழைய துப்பாக்கி ஒன்றைக் கண்டுபிடிக்கிறான். ரஷ்யத் துப்பாக்கியான அதை எடுக்கும்போது மேலே ஜெர்மன் ராணுவ விமானம் பறந்து செல்கிறது.

மறுநாள் ஜெர்மன் படைகள் அவனது கிராமத்தின் மீது படையெடுக்கிறது. குடும்பத்தின் விருப்பத்துக்கு மாறாக இளம் ஃப்ளோரியாவை சோர்வுற்ற கிளர்ச்சியாளர்களுடன் சேர காட்டுக்குள் அனுப்புகிறது. ஃப்ளோரியா போருக்குத் தயாராகிறான். கிளர்ச்சியாளர்கள் முன்னேறத் தயாராகும்போது ஒரு மூத்த கிளர்ச்சியாளரின் காலுறை கிழிந்துள்ளதால் அவனது காலுறையை அவருக்கு மாட்டி விட்டு, காட்டிலேயே அவனை விட்டுச் செல்கின்றனர். ஏமாற்றமடைந்த ஃப்ளோரியா கண்ணீருடன் காட்டுக்குள் உலாவ, அங்கு கிளாஷா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். அவளுடன் தனது கிராமத்துக்குத் திரும்பும் வழியில் அவன் சந்திக்கும் துன்பகரமான, உயிரை உறைய வைக்கும் அனுபவங்கள்தாம் படத்தின் எஞ்சிய பகுதியை உருவாக்குகின்றன.

மனித வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான இரண்டாம் உலகப் போரின் நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் இதுவரை தயாரிக்கப்பட்ட சிறந்த போர் திரைப்படம் மட்டுமல்லாமல், வரலாற்றைப் பிரதிபலித்த மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகும். 1985ஆம் ஆண்டு வெளியான கம் அண்ட் சீ (Come and See) என்ற இந்தப் படத்தை இயக்கியவர் எலம் கிளிமோவ் (Elem Klimov).

முழுக் கதையும் ஃப்ளோரியா என்ற சிறுவனின் கண்ணோட்டத்தில் சொல்லப்படுகிறது. அச்சிறுவன் இரண்டாம் உலகப் போரின் நேரடி சாட்சியாக மாறுகிறான். படத்தின் தலைப்பைப் போலவே பார்வையாளர்கள் போரின் கொடூரத்தை அனுபவிக்கிறார்கள். போரை உள்வாங்கும் சிறுவன் நம் கண்களுக்கு முன்பாக வயதாகி, முகத்தில் சுருக்கங்களைப் பெறுகிறான். ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்த அதிர்ச்சியை எதிர்கொள்கிறான்.

கவித்துவம், யதார்த்தம் என்ற இரண்டையும் சம அளவில் படம் நெடுகிலும் இழையவிட்டிருக்கும் இயக்குநரின் திறமை சிறந்த சாதனையாக இன்றும் போற்றப்படுகிறது. ராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் கிளாஷா வழியும் ரத்தத்துடன் வெடித்த உதடுகளில் வைத்திருக்கும் ஹார்மோனியத்தின் வழியாக விடும் மூச்சுக் காற்று இசையாக மாறி நம்மை உறைய வைக்கிறது. படம் முழுவதும் ஓட்டம் கதை சொல்லும் முறையாகவே கையாளப்பட்டிருக்கும். ஓடிக்கொண்டிருக்கும் ஃப்ளோரியா, வழியில் ஒரு பசு மாட்டைக் கடக்கிறான். போரின் அதிர்ச்சியால் புல்வெளியில் படுத்திருக்கும் அம்மாட்டின் கண்களில் தெரியும் வெடிக்கும் குண்டுகள் மனிதனின் எல்லை மீதான போரை கேள்விக்குட்படுத்திருக்கிறது. போரினால் துன்பமடையும் கால்நடைகளில் இன்னல்களையும் பேசுகிறது இந்தப் படம்.

படத்தின் கடைசிக் காட்சிக்கு முன், போருக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படும் ஜெர்மன் அதிகாரியைக் கொன்ற பின் கிளர்ச்சியாளர்கள் வெளியேறும்போது, ஹிட்லரின் உருவப்படத்தை ஒரு குட்டையில் கவனிக்கிறான் ஃப்ளோரியா. ஹிட்லரின் வாழ்க்கை மாண்டேஜ் காட்சிகளாக ரிவர்ஸில் ஓடுகிறது. ஃப்ளோரியா கையிலிருக்கும் துப்பாக்கியால் அதைப் பல முறை சுடத் தொடங்குகிறான். மாண்டேஜ் கடைசியாகத் தாயின் மடியில் ஒரு குழந்தையாக இருக்கும் ஹிட்லரின் மழலைப் படத்தைக் காட்டுகிறது. புகைப்படத்தைப் பார்க்கிறான் ஃப்ளோரியா. சுடுவதை நிறுத்திவிட்டு ‘ஓ’வென அழத் தொடங்குகிறான்.


மேலும் படிக்க

அதிமுகவுக்கு யெஸ், திமுகவுக்கு நோ சொன்ன தங்கம்

டிஜிட்டல் திண்ணை: சோனியா கோரிக்கை... ஸ்டாலின் நிராகரிப்பு!

மரம்வெட்டி என்று சொன்னால் வெட்டுவோம்: சீறிய ராமதாஸ்

அந்த ஜாம்பவான் போகட்டும்: தங்கத்தை சாடும் தினகரன்

பேசியது பேசியதுதான், கருத்தை மாற்றமாட்டேன்: ராமதாஸ்


கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

திங்கள் 24 ஜுன் 2019