மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 13 நவ 2019

சிம்பன்சிக்காக ‘கொரில்லா’வை எதிர்க்கும் பீட்டா!

சிம்பன்சிக்காக ‘கொரில்லா’வை எதிர்க்கும் பீட்டா!

நடிகர் ஜீவா நடித்துள்ள கொரில்லா திரைப்படத்துக்கு பீட்டா இந்தியா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜீவா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் 'கொரில்லா', இதில் 'காங்' என்னும் கதாபாத்திரத்தில் சிம்பான்சி குரங்கு ஒன்று நடித்துள்ளது. இந்த நிலையில் சிம்பன்சியைத் திரைப்படத்தில் நடிக்க வைத்ததற்கு சர்வதேச விலங்குகள் நல அமைப்பான பீட்டா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, நிஜ சிம்பன்சியைத் திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என்றும் பீட்டா இந்தியா அமைப்பு படக்குழுவினரை அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் தற்போது, பீட்டா அமைப்பு, கொரில்லா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, படத்தை நிராகரிப்பதற்கான ஐந்து முக்கிய காரணங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்படும் விலங்குகள், பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரிக்கப்படுகின்றன. சில நிமிட காட்சிகள்தான் எனினும் அதற்காக வாழ்நாள் முழுவதும் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன. அந்த விலங்குகள், மிகக் கொடூரமாகத் தாக்கப்படுகின்றன. அவர்கள் எடுக்கும் காட்சிகள் சரியாக வர வேண்டும் என்பதற்காக, சில நேரங்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்ரவதை செய்யப்படுகின்றன.

கூண்டுகளுக்குள் அடைத்து வைக்கப்படுகின்ற விலங்குகள் மன உளைச்சலுக்கு ஆளாகி ஆக்ரோஷமாகின்றன. விலங்குகளைத் திரைப்படங்களில் பயன்படுத்துவது தேவையற்றது. இதன் காரணமாக விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு எப்போதும் இருக்கும் என பீட்டா அமைப்பு பட்டியலிட்டுக் கூறியுள்ளது. உயிருடன் இருக்கும் விலங்குகளைப் பயன்படுத்துவது தேவையில்லாதது. மாபெரும் வெற்றிப் படங்களான ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ மற்றும் ‘தி ஜங்கிள் புக்’ போன்றவற்றில் நிஜ விலங்குகளைப் பயன்படுத்தாமல் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைதான் பயன்படுத்தினார்கள். சிம்பன்சி குரங்குகளைத் தவறாகச் சித்திரிப்பது அவற்றின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டான் சாண்டி இயக்கும் இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பேனரில் விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ளார். சதீஷ், ராதாரவி, யோகி பாபு போன்றோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: திமுக வேட்பாளர் விஷால்- தேர்தல் ரத்து பின்னணி!

எடப்பாடி - வேலுமணி இடையே விழுந்த விரிசல்!

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

பிரேமலதா சமரசம் தோல்வி!


வியாழன், 20 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon