மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

இன்னும் 3 நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும்!

இன்னும் 3 நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும்!

தமிழகத்திலுள்ள சில உள்மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 8ஆம் தேதியன்று கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. அதன்பின், தமிழகத்தை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யுமென்றும், இதனால் உள்மாவட்டங்களில் நிலவிவரும் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரபிக்கடலில் உருவான வாயு புயலால் தமிழகத்தில் வெப்பநிலை அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று (ஜூன் 18) தமிழகத்தின் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது. சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் அதிகபட்சமாக 107 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன். அப்போது இன்னும் மூன்று நாட்களுக்கு அதிக வெப்பநிலை வடதமிழகத்தில் தொடரும் என்று தெரிவித்தார். தென்மேற்குப் பருவமழை காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 19) மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறினார்.

“தமிழகத்தில் 13 மாவட்டங்களில் புதன்கிழமை (ஜூன் 19) அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மத்திய அரபிக்கடலில் பல பகுதிகளில் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைவதற்குச் சாதகமான சூழல் உள்ளது” என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon