மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?

தலித்துகளின் கேள்விகளில் நியாயமே இல்லையா?வெற்றிநடை போடும் தமிழகம்

வாசுகி பாஸ்கர்

“நீங்கள் யார் ரஞ்சித்?” என்கிற தலைப்பில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சமீபத்தில் முகநூல் பதிவொன்றை எழுதியிருந்தார். சுபவீயின் கருத்துகளை ஆராயும் முன் பா.ரஞ்சித் பேசியதன் பின்னணியைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

நீலப்புலிகள் இயக்கத் தலைவர் டி.எம்.உமர் பாரூக் எனப்படும் டி.எம்.மணியின் நினைவு நாள் கூட்டத்தில் பா.ரஞ்சித் பேசிய கருத்துக்கும் டி.எம்.மணியின் போராட்ட வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1970களிலிருந்து அப்பகுதியில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவந்த வட்டாரத் தலைவர் டி.எம்.மணி. பல்வேறு சமூகப் பணிகளுக்கிடையே தஞ்சை மாவட்டத்தில் சைவ மடங்களிடம் இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்கப் போராடியவர். அவரின் நினைவு நாளையொட்டித் தனது உரையைத் தொடங்கிய ரஞ்சித், தலித்துகள் இழந்து வந்திருக்கிற நிலத்தைக் குறிப்பிட்டு, அது வரலாற்றில் எவ்வாறெல்லாம் பறிக்கப்பட்டியிருக்கிறது என்பதை உள்ளடக்கிய நில அரசியலையும் உரிமைக் குரலையும் தலித்துகள் எழுப்ப வேண்டுமென்று பேசினார். நிலத்தைப் பிடுங்கிய ஆண்டைகளின் பெருமைகளைப் பேசுவதில் பலனேதுமில்லை என்பதாக அவ்வுரையின் சாராம்சம் அடங்கியிருக்கிறது.

நூற்றாண்டுக் காலமாகத் தமிழகத்தில் சத்திரியப் பெருமை பேசித் தங்களை ஆண்ட வர்க்கமாகப் புது வரலாற்றைப் புனைந்துகொண்டிருக்கும் இடைநிலைச் சாதிகளின் வரிசையில் தலித் தரப்பிலிருந்தும் சிலர் இணைந்திருக்கிற இந்தச் சூழலில் ரஞ்சித்தின் உரை முக்கியத்துவம் பெறுகிறது, மேற்கோள்களும் விமர்சனங்களும் அதையொட்டியவைதாம் என்றாலும், முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டியது நிலம். அதையொட்டி விவாதத்தை முன்னெடுக்காத சுப.வீரபாண்டியன், சில பகுதிகளை மட்டும் தேர்வு செய்து ரஞ்சித்தின் நோக்கத்தைக் கவனமாகத் தவிர்த்து அவரை யார் என்று முத்திரை குத்தும் வேலையைத் தொடங்கியுள்ளார்.

பெரியார் முன்வைத்த விமர்சனம்

“சமூக நீதி, சமத்துவக் கொள்கையிலிருந்து முழுமையாக வழுவிவிட்டது நீதிக்கட்சி. குறிப்பாக ஆதிதிராவிடர்கள் நலன்களில். ஜமீன்தார்களாலும் முதலாளிகளாலும் நிறைந்து அவர்களின் நலனைப் பாதுகாத்துக்கொள்வதிலே கவனமாக இருக்கிறது.” (பெரியார், புரட்சி இதழில், 03.06.1934.)

1934ஆம் ஆண்டு இது பெரியார் நீதிக்கட்சி மீது வைத்த விமர்சனம், தலித்துகள் நலன்களில் கவனம் செலுத்துவதிலிருந்து நீதிக்கட்சி வழுவிவிட்டது என்றும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் அரசியலில் இருக்கும் போதாமையையும் அவர் விமர்சித்திருக்கிறார்.

“எதற்காக நாம் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக்கொள்ள வேண்டும்? இதுவரை சற்றேக்குறைய 25 வருஷக் காலத்துக்கு மேல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பதாக ஜஸ்டிஸ் கட்சியைச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறோம். ஆனால், இன்று வரை அக்கட்சியில் ஒரு பத்துப் பேர்கூட உண்மையான பார்ப்பனரல்லாதாராக இருக்க முடியவில்லையெனில், இந்தக் கட்சியைப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்று சொல்வது வெட்ககேடும் பித்தலாட்டமும் அல்லது மடமையும் அல்லவா என்று கேட்கிறேன்.” (பெரியார், திராவிட நாடு, 20.6.1943.)

பெரியார் எழுப்பிய அதே கேள்வியை அதை எழுப்புவதற்கான வரலாற்று நியாயமுடைய தலித்துகள் பேசும்போது அதற்கு வலிந்து நோக்கம் கற்பித்து மொத்த விவாதத்தையும் எதிர்த் தரப்பின் தூண்டுதல் என்று மட்டுமே திருப்புகிற சுபவீ அவர்களின் பாரபட்சமான அணுகுமுறையை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது. தங்கள் தரப்பு விமர்சித்தால் அதை வரலாற்று நியாயமாகவும் அதையே தலித்துகள் செய்யும்போது அதில் பார்ப்பன சதிக்கு இரையாகிவிட்ட தன்மை இருப்பதாகவும் சித்திரிப்பதென்பது அடிப்படையில் மேட்டிமைவாதம்.

எது உங்கள் பிரச்சினை?

வடஇந்தியாவில் தலித்துகள் மாட்டுக்கறியைத் தின்பதற்காக அடித்துக் கொல்லப்படுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் அந்தச் சூழல் இல்லாதிருப்பதற்குத் திராவிட இயக்கத்தின் வலிமைதான் காரணம் என சுபவீ பேசுகிறார். அவர் பிரச்சினை தலித்துகள் கொல்லப்படுவதா அல்லது தலித்துகள் கொல்லப்படுவதற்கான காரணங்களா? தலித்துகள் கொல்லப்படுவதுதான் பிரச்சினை என்றால் 2007இல் இருந்து 2012ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் மொத்தம் 183 கொலைகள் வன்கொடுமையால் நடந்திருப்பதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் சொல்கிறது. தலித்துகள் கொல்லப்படுவதுதான் பிரச்சினை என்றால் நியாயமாக நாம் இதைத்தான் பேச வேண்டும். மாறாக சுப.வீரபாண்டியன் சொல்லும் சமாதானமானது மாட்டுக்கறிக்காக தலித்துகள் கொல்லப்படுவதில்லை என்பதாக இருக்கிறது. தலித்துகள் கொல்லப்படுவதை ஆராய்வதை விடவும் தன் கட்சியைக் காப்பாற்ற முற்படும் போக்குதான் அவரிடம் மேலோங்கியிருக்கிறது. எனவே, தலித்துகள் சாவதைவிடவும், சாவதற்குக் காரணமாகும் வடஇந்திய உதாரணத்தை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறார்.

தமிழகத்தையும் இந்தியாவின் பிற பகுதிகளையும் ஒரே நேர்கோட்டில் ஒப்பிடுவது தட்டையானது. திராவிட முன்னேற்றக் கழகமும் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் தோன்றுவதற்கு முன்பிருந்துகூட மாட்டு அரசியலுக்காக வடஇந்தியாவில் நடந்த கலவரங்களைப் போலத் தமிழகத்தில் நடந்ததில்லை, இதை திராவிடக் கட்சி அரசுகளின் சாதனையாக மட்டும் கூறுவதென்பது, சிறு சாதகமான அம்சத்தைக்கூட அதன் பின்புலத்திலிருந்து பிரிந்து வந்து திராவிடக் கட்சிகளை விமர்சனத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமென்பதற்கான அவசர உத்தி மட்டுமே.

1882இல் பஞ்சாபில் Cow Protection Movement என்றோர் அமைப்பு தொடங்கப்பட்டது, வடஇந்தியா முழுக்க பரவிய இவ்வமைப்பைத் தொடர்ந்து 1883இல் மாட்டுக்கறி அரசியலையொட்டி பிகாரில் பெரிய கலவரமொன்றும் நடந்தது. இந்த அமைப்பில் இருந்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமல்லாது நிலவுடைமைச் சமூகத்தாரும் மாட்டைப் புனிதமாகக் கருதும் இடைநிலைச் சாதிகளும்தாம்.

2015இல் லாலு பிரசாத் யாதவ் “பீப் (Beef) உண்பவர்கள் இந்துக்களிலும் இருக்கிறார்கள்” என்றார். அரசியல் பின்னணிகளைத் தாண்டிப் பல்வேறு சமூகங்களிடையே இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது, “பீப் என்றால் அதை மாட்டுக்கறியாக அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. அது எந்த விலங்காகவும் இருக்கலாம்” என்று லாலு விளக்கம் கொடுக்க வேண்டிய நெருக்கடி உருவானது. வடஇந்தியாவில் மாட்டுக்கறி என்பது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பதைக் கடந்து இதர சமூகத்தாரிடையேயும் வலுவாகக் கட்டமைக்கப்பட்ட வரலாற்று அரசியல் என்பதை இதிலிருந்து உணரலாம்.

வடஇந்தியாவின் கடந்த முந்நூறு வருட வரலாற்றைத் தமிழக வரலாற்றோடு ஒப்பிட்டுப் பேசுவதென்பது பொருந்தாக் கதை, நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே மாட்டு அரசியல் வடஇந்தியாவில் இருந்ததைப்போலத் தமிழகத்தில் வலுவாக இருந்ததில்லை. திலீப் எம் மேனனின் The Blindness of Insight புத்தகம் இது குறித்து விரிவாக அலசுகிறது.

வடஇந்தியா பிற்போக்கானது; சமூக வளர்ச்சி, கல்வி முன்னேற்றம் உள்ளிட்டவையோடு தென்னிந்தியா முற்போக்கானது என்று அம்பேத்கர் சொன்னபோது தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சியிலில்லை. தென்னிந்தியாவைப் பற்றிய அவரது கூற்று வரலாற்றுப் பார்வையிலிருந்து சொல்லப்பட்டது. வடஇந்தியாவைவிடத் தென்னிந்தியா ஒப்பீட்டளவில் முற்போக்கானது என்பதன் அடிப்படையில் தமிழகப் பிரச்சினைகளும் வடஇந்தியப் பிரச்சினைகளும் முற்றிலும் வேறானவை, இவ்வரலாற்றுப் பின்புலத்திலிருந்து சமூகத்தை அணுகாமல் தான் சார்ந்த கட்சியின் சார்பு நிலையெடுத்து, பொருந்தாப் பெருமிதங்களை முன்வைத்துச் சமாதானம் சொல்லிக்கொள்கிறார் சுப.வீரபாண்டியன்.

பார்ப்பனியமும் தலித்துகளும்

பார்ப்பனியத்திடமிருந்த சமூக மற்றும் அரசியல் அதிகாரத்துக்கான போராட்டம் காலத்தின் கட்டாயமென்பதை தலித்துகள் உணராமலில்லை, நீதிக்கட்சி உருவாவதற்கு முன்பிருந்தே தலித்துகள் பார்ப்பனியத்துக்கு எதிராகவும் சமூக நீதிக்காகவும் போராடி வந்திருந்தாலும் நீதிக்கட்சி உதயத்துக்குப் பின்னால் நீதிக் கட்சியிலும் சுயமரியாதை இயக்கத்திலும் தலித்துகள் தங்களை இணைத்துக்கொண்டனர். பெரியாரின் இயக்கத்தால் நிகழ்ந்த சமூகச் சீர்திருத்தத்தை ரஞ்சித் உள்ளிட்ட யாரும் மறுக்கவுமில்லை. ஆனால், பார்ப்பனரல்லாதார் அரசியல் வெள்ளாளர் சாதியில் தொடங்கி இடைநிலைச் சாதிகளோடு முடங்கிவிட்டதென்னும் விமர்சனத்தை முன்வைப்பதற்கான அத்தனை நியாயங்களும் இருக்கின்றன. பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் அரசியல் தற்போது தலித் - தலித்தல்லாதார் என்கிற நிலையை எட்டியிருக்கிறது.

கடந்த அறுபதாண்டுக் காலத்தில் தமிழகச் சாதியம் நவீன வடிவத்தில் கூர்மைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக வளர்த்தெடுக்கப்பட்டு இருக்கிறது. தலித் தரப்பிலிருந்து வைக்கப்படும் இந்த விமர்சனங்களைப் பரிசீலனை செய்ய ஒரு போதும் சுப.வீரபாண்டியன் போன்றோர் முயன்றதே இல்லை. எழுப்பப்படும் கேள்விகளுக்கு எதிராக முத்திரை குத்தி பதில் தருவதிலிருந்து தப்பிவிட எத்தனிக்கிறார். சாதியின் கசடை ஏதோவொரு வகையில் எதிர்கொண்டுவரும் ஒடுக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாகவும் ஆக்கிவிடுகிறார். இதுதான் இருப்பதிலேயே மகத்தான தந்திரம்.

மோடியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வைரமுத்து, நிர்மலா சீதாராமனைப் பார்த்து, “நட்டு வைத்த வேலுக்குப் பொட்டு வைத்ததுபோல்” என்று புகழாரம் பாடினாலும் ஆண்டாள் பிரச்சினை தொடங்கி Metoo சர்ச்சை வரை முதல் ஆளாக முன்னின்று வைரமுத்துவுக்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார் சுப.வீரபாண்டியன். மோடியையும் நிர்மலா சீதாராமனையும் வைரமுத்து புகழ்ந்ததின் பின்னணியை சுபவீ சந்தேகிக்கவில்லை. அவரை இந்துத்துவ சக்திகளோடு தொடர்புபடுத்தவில்லை. ஆனால், சமூகதளத்திலும் தன் துறை சார்ந்தும் தொடர்ந்து சமூகநீதி மற்றும் முற்போக்குக் கருத்தியலைப் பேசிவரும் ரஞ்சித் மீது முத்திரை குத்தி மதிப்பிழக்கம் செய்யும் பணியைத் தொடர்கிறார். தமிழகம் தலித் - தலித்தல்லாதார் என்கிற நிலையை எட்டியிருப்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

தலித் தரப்பு விமர்சனங்களை திராவிடக் கட்சிகளை நோக்கித் திருப்பி பதிலைப் பெறும் கோட்பாட்டுவாதியாக சுப.வீரபாண்டியன் இருந்திருக்க வேண்டும் அல்லது அவரே இதையெல்லாம் பேசுகிறவராக இருக்க வேண்டும். மாறாக அறிவுஜீவி என்கிற நிலையைக் கடந்து, ஆட்சியாளர்கள் மீதான விமர்சனங்களைத் தன் தலையிலேற்றிக்கொண்டு அதையொட்டி நிலைப்பாடு எடுக்கும் குறுகிய கண்ணோட்டத்தில் அவர் திராவிடக் கொள்கையை அணுகுகிறார்,

சாதி ஆசாரத்தையும் மத ஆசாரத்தையும் அப்படியே வைத்துக்கொண்டு Non - Brahmin சங்கம் ஆரம்பிப்பது வீண் என்பது அயோத்திதாசரின் விமர்சனம். தலித்துகளின் நலன்களிலிருந்து நீதிக்கட்சி நழுவிட்டது என்பது பெரியாரின் விமர்சனம். நீதிக்கட்சி ஆட்டம் கண்டதற்கு ஆதி திராவிடத் தலைவர்களைக் கைவிட்டதுதான் காரணம் என்பது கோ.தங்கவேலுவின் விமர்சனம். இப்படிப் பார்ப்பனரல்லாத அரசியலில் விமர்சிக்க வேண்டிய கூறுகள் காலந்தொட்டு இருந்துவருகின்றன. தலித்துகளின் பிரச்சினை பார்ப்பனியத்தோடு முடிந்து விடுவதில்லை; அதையும் தாண்டி விமர்சிக்க வேண்டிய தேவை அவர்களுக்கிருக்கிறது என்பது சமூக யதார்த்தம். இந்த நிலையில், ரஞ்சித் சைவ வெள்ளாளர் மடங்களின் நிலங்களைப் பற்றிப் பேசும்போது பார்ப்பனியத்தைப் பேசவில்லை என்கிற சுப.வீரபாண்டியனின் குற்றச்சாட்டு, தலித் தரப்பு எதைப் பேசவில்லை என்பதைக் காட்டிலும் எதைப் பேசக் கூடாது என்பதில் முனைப்பாக இருப்பதின் வெளிப்பாடே.

தலித்துகளைப் பேசவிடுங்கள்

“ஆதி திராவிடர் என்கிற பெயரின் அரசாணையே நீதிக் கட்சி செய்ததுதானே?” என்று சுபவீ குறிப்பிட்டுள்ளார். அரசாணை வெளியிடப்பட்டது 1922ஆம் ஆண்டு. ஆனால், அதற்கான கோரிக்கையும் போராட்டமும் 1892ஆம் ஆண்டு முதலிலிருந்தே தலித்துகளால் தொடங்கப்பட்டவை. தலித் தரப்பிலிருந்து இதற்கான போராட்டம் தமிழகம் முழுக்க நடத்தப்பட்டது. தொடர் கோரிக்கையின் காரணமாக 1922ஆம் ஆண்டு நீதிக்கட்சியால் அரசாணை வெளியிடப்பட்டது. தலித்துகள் கோரிக்கை வைக்குமிடத்திலும் நீதிக்கட்சி செயல்படுத்தும் இடத்திலும் இருந்த அன்றைய நிலையிலிருந்து நியாயமாகப் பல கட்டங்களுக்கு சமூகநீதி முன்னேறியிருக்க வேண்டும். ஆனால், நூறு வருடங்களுக்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் தலித் தரப்பின் ஜனநாயக உரிமை இன்று பறிக்கப்பட்டிருக்கிறது.

சுபவீ அவர்களே, தலித்துகள் பேசட்டும்; அவர்களைப் பேச விடுங்கள். அவற்றை விமர்சியுங்கள். ஆனால், அது அவர்களின் வாதம் என்பதை அங்கீகரியுங்கள்.

ஊரில் தலித்துகள் பேசுவதை வன்முறையால் தடுப்பார்கள். கருத்தியல் தளத்திலோ அவதூறு செய்கிறார்கள். வாதங்களை அவற்றின் பின்புலத்திலிருந்து பிரித்து வந்து காட்டுவது, தனக்கேற்பச் சுருக்குவது, விரிப்பது, பகுதியை மட்டும் காட்டுவது என்பவை எல்லாம் விமர்சனப் பண்புகள் அல்ல.

தலித்துகளின் கேள்விகளுக்கு இந்த அளவுக்கு எதிர்வினையாற்றுகிற சுபவீ, அவர்களின் கேள்விகளில் எந்த நியாயமும் இல்லை என்று கருதுகிறாரா? அவர்கள் தங்கள் ஒடுக்குமுறைகளிலிருந்து கேள்வியெழுப்புகிறார்கள். சமூகதளத்தில் அவர்களுக்கு மேலிருப்போர் தரப்பிலிருந்து சுபவீ பேசுகிறார். நம்மை நாம் சரி செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தலித்துகளின் கேள்விகளிலிருந்து நாம் விடுபட முடியும் என்று தாம் ஆதரிக்கும் திராவிடக் கட்சிகளை நோக்கி ஒரு கேள்வியையேனும் அவர் திருப்பியதுண்டா?

கருத்தியல் தளத்திலிருந்து அரசியல் தளத்துக்குக் கொடுக்கப்படும் கொள்கைசார் நெருக்கடி குன்றி, கருத்தியலாளர்கள் அரசியல்வாதிகளாக மாறுவது அதிகரித்துவருகிறது. சுபவீ போன்றவர்களின் செயல்பாடுகள் இதைத்தான் காட்டுகின்றன. இதுதான் நான் என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மீண்டும் மீண்டும் நிரூபிப்பாரேயானால், “நீங்கள் யார் சுப.வீரபாண்டியன்?” என்று நாம் தனியாகக் கேட்க வேண்டியிருக்காது.


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon