மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

தினகரன் பக்கம் போக முயன்றார் ஜவாஹிருல்லா: ஹைதர் அலி

தினகரன் பக்கம் போக முயன்றார் ஜவாஹிருல்லா: ஹைதர் அலி

மக்களவைத் தேர்தலில் தினகரனுடன் ஜவாஹிருல்லா கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று ஹைதர் அலி குற்றம்சாட்டியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலிக்கும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவிவருகிறது.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 18) செய்தியாளர்களைச் சந்தித்த ஹைதர் அலி, “தமமுக மாநில செயற்குழு கடந்த மார்ச்சில் விழுப்புரத்தில் நடந்தது. அப்போது, உட்கட்சியில் சில குழப்பங்கள் நிலவுவதால் ஜூன் மாதம் பொதுக்குழுவைக் கூட்டுவது என்று அறிவித்திருந்தோம். அதனடிப்படையில் வரும் ஜூலை 13ஆம் தேதி தமமுகவினர் மட்டுமே கலந்துகொள்ளும் பொதுக்குழு நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “குழப்பம் விளைவிக்கும் வகையில் ஜவாஹிருல்லாவும் அவரது ஆதரவாளர்களும் பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் போலிக் கடிதங்களைத் தயாரித்து தற்போதைய பொதுச் செயலாளரான என்னை நீக்க வேண்டுமென கோரிக்கை வைப்பதாகப் பல மாவட்டங்களிலிருந்து எனக்குத் தகவல் வந்துள்ளது” என்று குறிப்பிட்டவர்,

தமுமுகவின் துணை அமைப்பாகத்தான் மமகவை உருவாக்கினோம். மமக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜவாஹிருல்லா, அந்த சமயத்தில் அதிமுக அரசின் ஊதுகுழலாகவே செயல்பட்டார். அது கட்சியினரிடம் மிகுந்த எதிர்ப்பை உண்டாக்கியது. மேலும், நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் தினகரனுடன் அவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதை எதிர்த்து மோடி எதிர்ப்புக்கு நாம் திமுகவைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று உகாண்டாவில் இருந்து அறிக்கை வெளியிட்டேன். செயற்குழுவில் ஜவாஹிருல்லா ஆட்களின் ஏற்பாட்டில் தினகரனைத்தான் ஆதரிக்க வேண்டுமென பேசினர். நான் சென்றபிறகுதான் திமுக கூட்டணியை ஆதரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

தமமுக பொதுக் குழுவில் கலந்துகொள்ள ஜவாஹிருல்லாவுக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று தெரிவித்த ஹைதர் அலியிடம், தமமுகவை அபகரிக்க ஜவாஹிருல்லா முயற்சி செய்கிறார் என எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்க, “உண்மை. தமமுகவையும் அவர் அபகரிக்க முயல்கிறார்” என்று பதிலளித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி நாம் திமுகவில் இருந்து தினகரனை நோக்கித் திரும்புகிறதா மமக? என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்வதால், தினகரன் தலைமையிலான அமமுகவினர் மமகவுடன் பேசத் தொடங்கியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால் இதை மமக தலைவர் முற்றிலும் மறுத்தார். மேலும், மமக - திமுக உறவு குறித்து விஷமத்தனமாக கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமமுக பொதுச் செயலாளராக இருக்கும் ஹைதர் அலியே, ஜவாஹிருல்லா தரப்பு அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon