மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

பிரேமலதா சமரசம் தோல்வி!

பிரேமலதா சமரசம் தோல்வி!

கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன், தனது ஆதரவாளர்களோடு அக்கட்சியிலிருந்து விலகி நேற்று முன்தினம் (ஜூன் 17) தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.

சசிகலாவைச் சந்திக்க பெங்களூரு செல்லும் வழியில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன், கிருஷ்ணகிரி அருகேயுள்ள சூளகிரியில் தங்கியிருந்தார். அங்கே தினகரனைச் சந்தித்து அமமுகவில் இணைந்தார் சந்திரன். அவருடன் தேமுதிகவைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என பலரும் இணைந்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் உடனிருந்தார்.

அமமுகவில் இணையும் நிகழ்ச்சி முடிந்த பிறகு காரில் சென்று அமர்ந்த சந்திரனின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அதை எடுக்க தயக்கப்பட்டவரிடம், உடன் இருந்தவர்கள் ‘யாருண்ணே கூப்பிடுறாங்க, எடுத்துப் பேச வேண்டியதுதானே’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘பிரேமலதாதான் கூப்பிடுறாங்க’ என்று சந்திரன் சொல்ல, ‘சும்மா எடுத்துப் பேசுங்கண்ணே’ என்றுள்ளனர் ஆதரவாளர்கள்.

இதையடுத்து, போனை அட்டெண்ட் செய்து பேசியிருக்கிறார் சந்திரன். எதிர்முனையில் இருந்த பிரேமலதா, அமமுகவுக்குப் போக வேண்டாம் என்று சந்திரனிடம் சமரசம் பேசியிருக்கிறார்.

அவருக்குப் பதிலளித்த சந்திரன், ‘கட்சியில நீங்க எடுக்குற முடிவுகள் எங்களுக்கு பிடிக்கல. அதிமுகவோட கூட்டணி தொடரும்னு நீங்க சொல்லியிருக்கீங்க. ஏற்கனவே அவங்க கூட கூட்டணி வெச்சதுலயே பலருக்கு உடன்பாடு இல்லை. இனியும் தொடரும்னா என்ன பண்றது? அதனாலதான் அமமுகவுல சேர்ந்துட்டேன்’ என்று பதிலளித்திருக்கிறார். சில உரையாடல்களுக்குப் பின் போனை வைத்துவிட்டார் பிரேமலதா.

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த தேமுதிக, அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் சில நிர்வாகிகள் பிரேமலதாவைச் சந்தித்து, ‘இனி அதிமுக கூட்டணி வேண்டாம்’ என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, உள்ளாட்சித் தேர்தல் உள்பட இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கட்சிகளுடனான கூட்டணி தொடரும் என்று தெரிவித்திருந்தார். அதையடுத்துதான் கிருஷ்ணகிரி தேமுதிக மாவட்டச் செயலாளர் சந்திரன் தனது ஆதரவாளர்களோடு தினகரனைத் தேடிச் சென்றுவிட்டார்.

சந்திரன் அமமுகவில் இணையப்போகும் தகவலறிந்து அவரை தடுப்பதற்காகவே பிரேமலதா போன் செய்திருக்கிறார். ஆனால், அதற்குள் தினகரனைச் சந்தித்து அமமுகவில் இணைந்துவிட்டார் சந்திரன்.


மேலும் படிக்க

ராசா பதவியேற்பு: சம்பவம் அல்ல, சரித்திரம்!

டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு ராஜ்யசபா இல்லை: உடைகிறது அதிமுக-பாமக கூட்டணி?

வாழ்க பெரியார், வந்தே மாதரம்: தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு சுவாரசியங்கள்!

ரஞ்சித் குடும்பப் புகைப்படம்: ஹெச்.ராஜா மீது டிஜிபியிடம் புகார்!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


புதன், 19 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon