மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

உயர் நீதித் துறையில் பெண்களின் இடம் எங்கே?

உயர் நீதித் துறையில் பெண்களின் இடம் எங்கே?

கிருபா முனுசாமி

“பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டு இச்சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிடுகிறேன்” என்றார் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். அதுபோல மாற்றுப் பாலினம், பாலியல் தேர்வுரிமை, தன்பாலீர்ப்பு, சபரிமலையில் பெண்கள், திருமணத்துக்கு வெளியேயான உறவு எனப் பல்வேறு முற்போக்குத் தீர்ப்புகளை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தாலும், அதில் பெண்கள் பெற்றிருக்கும் முன்னேற்றத்தைக்கொண்டே இந்திய நீதித் துறையின் முன்னேற்றத்தை அளவிட முடியும். இந்தியா சுதந்திரம் அடைந்த இந்த 70 ஆண்டுகளில், குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் எனப் பல முக்கியப் பொறுப்புகளைப் பெண்கள் வகித்திருக்கிறார்கள். ஆனால், இந்திய நாட்டின் தலைமை நீதிபதியாக மட்டும் எந்தப் பெண்ணும் இருக்கவில்லை.

ஜனவரி 1950இல் இந்திய உச்ச நீதிமன்றமாக மாற்றப்படும்வரை, அது இந்தியக் கூட்டாட்சி நீதிமன்றமாக அக்டோபர் 1935 முதல் செயல்பட்டு வந்தது. தொடக்கத்தில் ஒரு தலைமை நீதிபதி, ஏழு இணை நீதிபதிகள் என எட்டாக இருந்த எண்ணிக்கை, வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு தற்போது தலைமை நீதிபதியையும் சேர்த்து 31ஆக இருக்கிறது. 1950இல் உச்ச நீதிமன்றம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 46 தலைமை நீதிபதிகளும் 167 பிற நீதிபதிகளும் என மொத்தம் 213 நீதிபதிகள் இருந்திருக்கிறார்கள். எனினும் ஒரு பெண், உச்ச நீதிமன்ற நீதிபதியாக வர 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரான முன்னாள் நீதிபதி ஃபாத்திமா பீவிதான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி.

பெண்ணுக்கு ஏன் இடமில்லை?

ஒருவர் கீழமை நீதிமன்றங்களிலிருந்து உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றோ, அல்லது உயர் நீதிமன்ற வழக்கறிஞராக ஒருவர் நேரடியாக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டோ, பின் பணிமூப்பின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வில் வரலாம். ஆனால், சில நேரங்களில் - அரிதாக என்றுகூடச் சொல்லலாம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர்கள் சிலரின் தகுதி, திறமையின் அடிப்படையில் நேரடி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணி அமர்த்தப்படுவர். அப்படி இதுவரையிலும் ஏழு நீதிபதிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மற்ற ஆறு பேரும் ஆண்களாக இருக்க, ஒருவர் மட்டுமே பெண். தற்போதைய உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதி இந்து மல்ஹோத்ராதான் அவர். ஒரு பெண் உச்ச நீதிமன்றத்தின் நேரடி நீதிபதியாக வரவும் 68 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.

உயர் நீதிமன்றத்திலிருந்து பணி உயர்வில் இரண்டு பெண்கள், நேரடி நியமனத்தில் ஒரு பெண் என்று தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூன்று பெண்கள் நீதிபதிகள் பணியிலிருந்தாலும், இந்தியாவின் தலைமை நீதிபதியாக ஒரு பெண் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிகுறி இப்போதும் தென்படவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில், தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பணி ஓய்வுக்கு அடுத்து வரிசையாக 2025 வரையிலும் ஐந்து ஆண் நீதிபதிகள் பணிமூப்பில் இருக்கிறார்கள்.

பெண் என்னும் அடையாளம்

பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவமின்மையின் வரலாற்றைக் காணும்போது, போதுமான பாலினப் பிரதிநிதித்துவத்துக்கான கோரிக்கைகள் தொடர்ந்து இருந்துவருகின்றன என்பதைத் தனியாக எடுத்துக் கூற வேண்டியதில்லை. ஆயினும், சமீபத்தில் நீதித் துறையில், குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் இந்த விஷயத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன. மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஒரு வழக்கின் மனுதாரராக இருக்க, அதை மூத்த வழக்கறிஞர் என்ற முறையில் அவரது கணவர் ஆனந்த் குரோவர் வாதாடினார். அப்போது அவர் வழக்கின் மனுதாரர் என்று குறிப்பிட, “ஏன் மனுதாரர் என்று குறிப்பிடுகிறீர்கள்? மனைவி என்று குறிப்பிடுங்கள்” என்று மத்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) கே.கே. வேணுகோபால் கிண்டலடித்துச் சிரித்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், “நான் என்னளவில் ஒரு தனி நபர். ஒரு பெண் என்பதும், வழக்கறிஞர் என்பதும் என்னை அடையாளப்படுத்தப் போதுமானது. ஒருவரின் மனைவி என்று என் அடையாளத்தைச் சுருக்குவது, என்னை அவமதிப்பதாகவும், பாலியல் ரீதியாக என்னைச் சிறுமைப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது” என்று தன் கண்டனங்களை நேரடியாக நீதிமன்ற அறையில் வெளிப்படுத்தினார்.

அதோடு நிற்காமல், நீதித் துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்கியும், ஆண் வழக்கறிஞர்கள், ஆண் நீதிபதிகளின் ஆணாதிக்கம் நிறைந்த பாலியல் பாகுபாட்டை வெளிப்படுத்தும் மொழிப் பயன்பாட்டைத் தடுக்கக் கோரியும் இந்தியத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார் இந்திரா ஜெய்சிங். இதுகுறித்த விவாதங்கள் அடங்குவதற்குள்ளாகவே, தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டும், நாட்டுக்கே பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகப் பாதுகாப்பு வழங்க வேலையிடங்களில் புகார் குழு ஒன்றைக் கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என்று விசாகா வழிமுறைகளை வழங்கிய உச்ச நீதிமன்றத்திலேயே, பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பெரும் விவாதமாக உருப்பெற்றன. இந்தச் சூழ்நிலையில்தான், உயர் நீதித் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த விவாதங்களும் கோரிக்கைகளும் தீவிரம் பெற்றன.

நீதித் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை விவாதிக்க வேண்டும்தான். ஆனால், நீதிமன்றங்களின் அடிப்படை கட்டமைப்பையோ, அதன் அதிகார மையத்தையோ ஆய்வுக்குட்படுத்தாமல் பெண்களின் பிரதிநிதித்துவத்தை விவாதிக்க முடியுமா என்றால், கண்டிப்பாக முடியாது. எனவே, நீதிமன்றங்கள், அதன் நீதிபதிகள், ஆண், பெண் வழக்கறிஞர்கள் ஆகியவற்றைக் குறித்துக் காண்போம்.

நீதித் துறையிலும் ஆண்களின் ஆதிக்கம்

மற்ற எல்லாத் தொழில்களையும் போலவே நீதித் துறையும் ஆண்களால்தான் ஆதிக்கம் செய்யப்படுகிறது. நீதிமன்றங்களில் வழக்காடுபவர்களும் நீதி வழங்குபவர்களும்கூடப் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள். பெண்களின் உரிமைகளை உறுதி செய்யும், உரிமைமீறல்களிலிருந்து பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள் நீண்ட காலம் வரை இல்லாமை, சமூகக் கட்டுப்பாடு, குடும்ப கௌரவம் மற்றும் நீதிமன்றங்களை அணுக ஆதாரமோ, ஆதரவோ இல்லாத நிலை போன்ற பல்வேறு காரணங்களால், பெண்கள் நீதிமன்றங்களை நாடுவது சமீப காலம் வரை மிகவும் குறைவாக இருந்தது.

ஒருபுறம் பெண் வழக்காடிகள் இருந்தாலும், வழக்குகள் குறித்துத் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாத சூழலில், அவர்கள் பெண்கள் வழக்கறிஞர்களிடமே வழக்குகளை வழங்குவார்களா என்பது கேள்விக்குறி. மறுபுறம் ஆண்கள், ஆண் வழக்கறிஞர்களுடன் தொழில் செய்யவே விரும்புவர்.

இரண்டாம் தலைமுறை பெண் வழக்கறிஞராக இருக்கும்பட்சத்தில், அவர்கள் பாதுகாப்பு நிறைந்த தொழிலில் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். அப்பா, கணவர் அல்லது குடும்பத்திலிருக்கும் யாரோ ஒரு வழக்கறிஞரோடு சேர்ந்து பணியாற்றிவிடலாம். வழக்குகள் கிடைக்குமா என்ற கவலையோ அல்லது உடன் பணியாற்றும் வழக்கறிஞர்கள், வழக்காடிகளின் பாலியல் துன்புறுத்தல், சீண்டல்கள் குறித்த அச்சமோ தேவையில்லை. இரண்டாம் தலைமுறை வழக்கறிஞர் என்ற அளவில் குறைந்தபட்ச அங்கீகாரமேனும் கிடைக்கும். இல்லாத பட்சத்தில், முதல் தலைமுறை வழக்கறிஞராக ஏதோ ஓர் ஆண் வழக்கறிஞரைச் சார்ந்தே தொழில் செய்ய வேண்டியிருக்கிறது.

ஆண்கள் நிறைந்த இந்தத் தொழிலில் பெண் வழக்கறிஞர்கள் கடின உழைப்பைச் செலுத்திப் பல்வேறு போராட்டங்களுக்கிடையே தனித்து இயங்கும் அளவுக்கு முன்னேறினாலும், ஆண்களுக்கு இணையான தகுதியுடையவர்களாக இருந்தாலும், அவர்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதே உண்மை. அங்கீகாரம் இருக்கட்டும்; தங்களுக்கே உரித்தானது போலவும், தங்களுக்கு மிகவும் வசதியானதாகவும் ஆண் வழக்கறிஞர்களை உணரச் செய்யும் நீதிமன்ற அறைகள், பெண் வழக்கறிஞர்களையும் அவ்வாறே உணரச் செய்கிறதா என்றால், இல்லை. அவை எப்போதும் பெண்களுக்கு அந்நியப்பட்டவையே!

(தொடர்ந்து ஆராய்வோம்)

(கட்டுரையாளர் கிருபா முனுசாமி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர். சமத்துவம், சாதி ஒழிப்பு, சமூக நீதி ஆகிய தளங்களில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் செயல்பட்டுவருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை : திமுக- காங்கிரஸ் இழுபறி! களமிறங்கிய எடப்பாடி

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

முன்கூட்டியே விடுதலையாகிறாரா சசிகலா? விளக்கும் தினகரன்

எடப்பாடி- மோடி: ஏழு நிமிடங்களே நடந்த சந்திப்பு!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


செவ்வாய், 18 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon