மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 11 நவ 2019

உயர் மின்னழுத்தக் கோபுரங்களால் பாதிப்பு: எம்பி ஆய்வு!

உயர் மின்னழுத்தக் கோபுரங்களால் பாதிப்பு: எம்பி ஆய்வு!

பெருந்துறை அருகேயுள்ள பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரங்களால் ஏற்படும் மின்காந்த அலை பாதிப்புகள் பற்றி நேரில் ஆய்வு செய்தார் ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி. நாடாளுமன்றத்துக்கு இவ்விவகாரத்தைக் கொண்டுசெல்லப் போவதாக உறுதியளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள மூணாம்பள்ளி கிராமத்தில் உயர் மின்னழுத்தக் கோபுரங்கள் மிகத் தாழ்வான நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. இவை 400 கிலோவாட் மின்சாரத்தைக் கடத்தவல்லவை. திருப்பூர் மாவட்டம் ராசிப்பாளையத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் பாலவாடிக்கு இப்பகுதி வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால், இப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் வேளாண்மை செய்பவர்கள் மீது உயர் மின்னழுத்தக் கோபுரங்களில் இருந்து பரவும் மின் காந்த அலைகள் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கண்டறிந்தனர் அப்பகுதி இளைஞர்கள்.

உயர் மின்னழுத்தக் கோபுரங்களின் அடியில் இரண்டு கைகளிலும் டியூப் லைட்களை ஏந்திக்கொண்டு, அப்பகுதியில் நிற்கும்போது தானாகவே அவை ஒளிர்ந்தன. இந்த மின்காந்த அலைகளால் புற்றுநோய் முதலான பல்வேறு நோய்கள், நீண்டகாலப் பாதிப்புகள் இருக்குமென்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி இரவு மூணாம்பள்ளிக்கு வந்தார் ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி. அவரிடம் இரண்டு டியூப்லைட்கள் கொடுக்கப்பட்டன. அவை தானாகவே ஒளிர்ந்தன. அதேபோல, அவரது உடலில் மின்சாரம் பாய்கிறதா என்பதைக் கண்டறிய டெஸ்டர் கொண்டு சோதனை செய்யப்பட்டபோது, டெஸ்டரும் மினுமினுத்தது. இதைத் தொடர்ந்து, இது குறித்து உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வதற்காக அப்பகுதியினரிடம் உறுதிமொழிப் பத்திரமொன்றில் கையெழுத்திட்டு வாங்கினார் கணேசமூர்த்தி. இந்த பிரச்சினையை விளக்கும் வகையில் புகைப்படங்களும் எடுத்துகொண்டார்.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பேசப் போவதாகவும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் மின்சாரத் துறை அமைச்சரிடம் இது தொடர்பாகப் பேசப்போவதாகவும் கணேசமூர்த்தி அப்பகுதியினரிடம் தெரிவித்தார்.

கணேசமூர்த்தியின் ஆய்வு பற்றி கருத்துக் கூற, தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை : திமுக- காங்கிரஸ் இழுபறி! களமிறங்கிய எடப்பாடி

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

முன்கூட்டியே விடுதலையாகிறாரா சசிகலா? விளக்கும் தினகரன்

எடப்பாடி- மோடி: ஏழு நிமிடங்களே நடந்த சந்திப்பு!

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?


செவ்வாய், 18 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon