மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

சுருக்கெழுத்துக்கள்!

சுருக்கெழுத்துக்கள்!

ஒரு சொல் கேளீரோ! – 19: அரவிந்தன்

சுருக்கெழுத்துக்கள்

சுருக்கெழுத்துக்கள் ஊடக மொழியில் அதிகம் பயன்படுத்தப்படும். கட்சி அல்லது அமைப்பின் பெயரை ஒரு முறை முழுமையாக எழுதிவிட்டு அடைப்புக் குறிக்குள் அதன் சுருக்க வடிவத்தைத் தர வேண்டும். அதன் பிறகு அந்தச் சுருக்க வடிவத்தை மட்டும் பயன்படுத்தினால் போதும்.

திருணமூல் காங்கிரஸ் (தி.கா.)

ராஷ்டிர ஜனதா தளம் (ரா.ஜ.த.)

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ.மு.கூ.)

அதன் பிறகு இந்தக் கட்சிகளைக் குறிப்பிடும்போது தி.கா. ஐ.மு.கூ., ரா.ஜ.த. என்று குறிப்பிடலாம்.

சில அமைப்புகளின் பெயர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும். உதாரணமாக, Central Buero of Investigation (CBI). இதை மத்தியப் புலனாய்வு நிறுவனம் என மொழிபெயர்க்கலாம். ஆனால், ம.பு.நி. என்று இதைச் சுருக்கக் கூடாது. யாருக்கும் புரியாது. சி.பி.ஐ. என்றே எழுதலாம். இது செய்தித்தாள், இதழ்கள் படிக்கும் அனைவருக்கும் தெரியும்.

எடுத்துக்காட்டு:

மத்தியப் புலனாய்வு நிறுவனத்தின் (சி.பி.ஐ.) அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிப்பதற்காக நேற்று (ஆகஸ்ட் 18) சென்னைக்கு வந்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பிறகு நடக்கும் முதல் விசாரணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ISRO, UNESCO, UNISEF முதலான அமைப்புகளுக்கும் இது பொருந்தும். இந்த அமைப்புகளை இஸ்ரோ, யுனெஸ்கோ, யூனிசெஃப் என எழுதுவதே நல்லது. முதலில் குறிப்பிடும்போது மட்டும் இந்த அமைப்புகள் பற்றிய விளக்கத்தைக் கொடுத்துவிட்டுப் பிறகு இஸ்ரோ, யுனெஸ்கோ, யூனிசெஃப் என எழுதலாம்.

எடுத்துக்காட்டு:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) அடுத்த மாதம் புதிய ராக்கெட்டை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது. இது இஸ்ரோ ஏவும் 100ஆவது ராக்கெட் ஆகும்.

Election Commission என்பதை ஆங்கிலத்தில் EC எனச் சுருக்குவார்கள். ஆனால், தமிழில் ஈ.சி. என எழுதினால் புரியாது. தேர்தல் ஆணையம் எனத் தமிழில் எழுத வேண்டும். இதை தே.ஆ. எனவும் சுருக்கக் கூடாது. காரணம், அது மக்களிடையே புழக்கத்தில் இல்லாததால் புரியாது. பதிலாக, முதலில் தேர்தல் ஆணையம் என்றும் பிறகு வரும் இடங்களில் ஆணையம் என்று எழுதினால் அந்தக் கட்டுரை / செய்தியின் பின்புலத்தில் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்.

அதே கட்டுரையில் வேறு ஏதேனும் ஆணையம் (மனித உரிமை ஆணையம்) பற்றிய குறிப்பு வந்தால் அதைத் தெளிவாகக் குறிப்பிட்டுவிட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆணையங்கள் வரும் கட்டுரை / செய்தியில் ஆணையம் என்பதை மட்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Election Commission, Noti Aayook, Parliamentary Committee எனப் பல அமைப்புகளுக்கும் ஆங்கிலத்தில் EC, NA, PC என்று சுருக்கெழுத்துக்களைப் பயன்படுத்துவார்கள். The Is No Alternative (மாற்று இல்லை) என்பதைக்கூட TINA எனச் சுருக்கிவிடுவார்கள். தமிழில் அதை அப்படியே பயன்படுத்துவது அபத்தமாக இருக்கும். “மாற்று இல்லை என்னும் காரணத்தால்” என்று விளக்கி எழுதுவதே தமிழுக்குப் பொருத்தமானது.

பிரபலமான கட்சிகளின் பெயர்களை எழுதும்போது திமுக, அதிமுக, பாமக, மதிமுக, பாஜக போன்ற சுருக்கெழுத்துக்களைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஏனென்றால் இவை அனைவருக்கும் தெரியும். முதலில் குறிப்பிடும்போது திராவிட முன்னேற்றக் கழகம் என்று எழுத வேண்டும் என்னும் அவசியம்கூட இல்லை. இவை அந்த அளவு பிரபலம்.

காங்கிரஸ் கட்சியை காங். என்று சுருக்கலாம். ஆனால், காங்.கிடம், காங்.குக்கு என்றெல்லாம் எழுதினால் படிக்க நன்றாக இராது. எனவே காங்கிரசிடம், காங்கிரசுக்கு என்றே எழுதலாம்.

அவ்வளவாக அறிமுகமாகியிராத, பிரபலமாகியிராத கட்சிகளுக்குத்தான் முதலில் முழுப் பெயரையும் கொடுத்துவிட்டுப் பிறகு சுருக்கெழுத்தைப் பயன்படுத்த வேண்டும். அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கு அல்ல.

Congress Working Committee என்பதை CWC என்று ஆங்கிலத்தில் சுருக்குவார்கள். தமிழில் காங்கிரஸ் செயற்குழு என்றுதான் எழுத வேண்டும்.

சுருக்கெழுத்துக்கள் வாசகருக்கு இணக்கமாக இருக்க வேண்டும். அந்நியப்படுத்தக் கூடாது. வாசிப்பை எளிதாக்க வேண்டும். கடினமாக்கிவிடக் கூடாது.

மனித உரிமை ஆணையம், கடலோரக் காவல்படை ஆகியவற்றுக்குச் சுருக்கெழுத்துக்களைப் பயன்படுத்தினால் எளிதில் புரியாது என்பதால் தவிர்த்துவிடலாம்.

சுருக்கெழுத்துக்களும் புள்ளிகளும்

திமுக, அதிமுக, எம்ஜிஆர், சிபிஐ, ஐடி, ஐநா போன்ற மிகப் பிரபலமான சுருக்கெழுத்துக்களைப் பயன்படுத்துகையில் எழுத்துகளுக்கிடையில் புள்ளி தேவையில்லை. புள்ளி, காற்புள்ளி போன்ற நிறுத்தக்குறிகள் நாம் சொல்ல வருவதை எளிதில் புரியவைப்பதற்குத்தான் இருக்கின்றனவே தவிர, அவை கட்டாயம் அல்ல. திமுக என்பதை வேறு மாதிரிப் புரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை என்பதால் புள்ளி தேவையில்லை.

புள்ளிகளை முழுமையாக வைத்தல்

புதிய சுருக்கெழுத்துக்களைப் பயன்படுத்தும்போது புள்ளிகள் தேவை. புள்ளி வைத்த சுருக்கெழுத்துக்களுடன் வேற்றுமை உருபு சேரும்போதும் புள்ளிகளை முழுமையாக வைக்க வேண்டும்.

எம்.என்.பி.க்கு இந்தத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் கிடைத்தன.

எம்.எல்.ஏ.க்களிடையே பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

எம்.பி.க்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கி.ரா.வுக்கு ஞானபீட விருது அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ளது.

சிலர் கடைசி சுருக்கெழுத்துக்குப் பக்கத்தில் இருக்கும் புள்ளியை நீக்கிவிடுவார்கள். வேற்றுமை உருபு இயல்பாக அந்தச் சொல்லுடன் சேர வேண்டும் என்பது இதன் காரணமாக இருக்கலாம். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

வெங்கட் சாமிநாதன் என்னும் பெயரை வெ.சா. என்று சுருக்கலாம். லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்னும் பெயரை லா.ச.ரா. என்று சுருக்கலாம். கி.ராஜநாராயணனை கி.ரா., சங்கர் மாதவனை ச.மா.

இந்தச் சொற்களுடன் வேற்றுமை உருபு சேரும்போது புள்ளி இல்லாவிட்டால் என்ன ஆகிறது என்று பாருங்கள்:

வெ.சாவுக்கு, லா.சராவுக்கு, கி.ராவுக்கு, ச.மாவுக்கு…

என்று எழுத வேண்டியிருக்கும். வெ. என்னும் எழுத்துக்குப் பிறகு சாவுக்கு என வருகிறது அல்லவா?

அதேபோல, ராவுக்கு, மாவுக்கு என்று வருகிறது. இந்தச் சொற்களின் பொருள்கள் இந்த இடத்தில் நெருடலைத் தரக்கூடும். வெ.சா.வுக்கு என்று எழுதினால் இந்தச் சிக்கலைத் தவிர்க்கலாம்.

பட்டியல்

புள்ளிகளுடன் கூடிய சுருக்கெழுத்துக்களைப் பட்டியலாகத் தரும்போது காற்புள்ளி (,) பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்தும்போது, புள்ளி வைத்த பிறகே காற்புள்ளி பயன்படுத்த வேண்டும்.

சுப.வீ., வெ.சா., மா.சு. ஆகியோர் என்று எழுத வேண்டும்.

கவனத்தில் கொள்க:

சுருக்கெழுத்துக்கள் என்பவை வாசிப்பை எளிமையாக்குவதற்காகத்தான் இருக்கின்றன. வாசகருக்குக் குழப்பம் வராத வகையில் விஷயத்தைச் சொல்வதே முக்கியம். இதை மனதில் கொண்டு புள்ளிகள், காற்புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் புதனன்று)

விதிகளும் விதிவிலக்குகளும்!


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு! மாசெக்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின்

பிரசாந்த் கிஷோர்- எடப்பாடி சந்திப்பு: கட்சியைக் கைப்பற்ற ஸ்பெஷல் வியூகம்!

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

விஜய் ரசிகர்களுக்கு மோகன் ராஜாவின் உறுதிமொழி!

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?


திங்கள், 17 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon