மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?

உதயநிதிக்கு வழிவிடுகிறாரா வெள்ளக்கோயில் சாமிநாதன்?வெற்றிநடை போடும் தமிழகம்

திமுக இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த மக்களவைத் தேர்தலின்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்காகத் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை வென்ற நிலையில் உதயநிதிக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுக்க வேண்டுமென திமுகவிலிருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. திருச்சி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களும், திமுகவின் துணை அமைப்புகளும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றித் தலைமைக்கு அனுப்பிவைத்தன.

அதற்கேற்றாற்போல முதல்முறையாக திருச்சி திமுக பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் மேடையேற்றப்பட்டார் உதயநிதி. அந்தக் கூட்டத்தில், “எந்தப் பொறுப்பையும் பதவியையும் எதிர்பார்த்து நான் பிரச்சாரம் செய்யவில்லை. திமுகவின் கடைக்கோடி தொண்டர்களில் ஒருவன் என்ற ஒரு பொறுப்பு போதும்” என்றும் பேசியிருந்தார்.

இருப்பினும் ஜூன் மாதம் இறுதிக்குள் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதியை நியமிக்கும் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. இந்த நிலையில் திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவியிலிருந்து வெள்ளக்கோயில் சாமிநாதன் ராஜினாமா செய்துவிட்டதாகவும், இதுகுறித்த கடிதத்தை அவர் தலைமைக்கு அனுப்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதிக்கு வழிவிடும் பொருட்டே தானாக முன்வந்து ராஜினாமா செய்திருக்கிறார் சாமிநாதன்.

உதயநிதிக்குப் பதவி கொடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்த நேரத்தில், அதுகுறித்து தனக்கு நெருக்கமான வழக்கறிஞர்களிடம் பேசிய சாமிநாதன், ‘சீக்கிரம் இன்னொரு லெட்டர் பேட் அடிக்கனும் போல’ என்று தெரிவித்திருக்கிறார். உதயநிதி இளைஞரணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், சாமிநாதனுக்கு வேறு பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பொருட்டே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாகப் பேசுவதற்காக நாம் வெள்ளக்கோயில் சாமிநாதனைத் தொடர்புகொண்டோம். முதலில் ரிங் சென்ற நிலையில், இரண்டாவது முறை அழைத்தபோது, தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்ற பதிலே நமக்குக் கிடைத்தது.

2017 ஜனவரி மாதம் திமுக செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதை அடுத்து, இளைஞரணி இணைச் செயலாளராக இருந்த சாமிநாதன், செயலாளராக நியமிக்கப்பட்டார்.


மேலும் படிக்க

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு! மாசெக்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின்

எடப்பாடி- மோடி: ஏழு நிமிடங்களே நடந்த சந்திப்பு!

சாதி மோதல்: எஸ்பி நெற்றியில் வெட்டுக்காயம்!

வெறுங்கையோடு திரும்பியுள்ளார் எடப்பாடி: தாக்கும் ஸ்டாலின்


திங்கள், 17 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon