மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

முகிலன் விவகாரத்தில் நடவடிக்கை: ஐநா அமைப்பு கேள்வி!

முகிலன் விவகாரத்தில் நடவடிக்கை: ஐநா அமைப்பு கேள்வி!

காணாமல்போன சுற்றுசூழல் செயல்பாட்டாளர் முகிலனைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு இந்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த மனித உரிமை கவுன்சில்.

கடந்த ஆண்டு மே 22ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் நடந்த பேரணியில் வன்முறையில் ஏற்பட்டதாகக் கூறி துப்பாக்குச் சூடு நடத்தினர் போலீசார். இந்த விவகாரத்தில் வன்முறை ஏற்பட்டதற்குக் காரணம் யார் என்பது பற்றிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார் தமிழக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் முகிலன். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று இதனைப் பத்திரிகையாளர்கள் மத்தியில் முன்வைத்தார். இதற்கடுத்த நாள், அவர் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், எழும்பூர் ரயில் நிலையம் வரை வந்த முகிலன், அதன்பின் காணாமல்போனார்.

எழும்பூர் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய முகிலன், மீண்டும் ரயில் நிலையத்துக்கு வந்தார் என்று போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டது. அதன்பின், ரயிலில் செல்லும்போது அவரது செல்போன் சிக்னல் திடீரென்று தடைபட்டது கண்டறியப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தனர் போலீசார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டாலும், இதுவரை எந்த விஷயமும் கிடைக்கவில்லை.

முகிலன் காணாமல்போய் 4 மாதங்கள் ஆன நிலையில், தற்போது இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு இந்திய அரசிடம் கேட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த மனித உரிமை கவுன்சில். இவ்வமைப்பு சுவிட்சர்லாந்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. முகிலன் காணாமல்போனது குறித்த கேள்விக்குச் சமூக வலைதளமொன்றில் ராஜபாளையம் காவல் ஆய்வாளர் சர்ச்சைக்குரிய பதில் தெரிவித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா எனவும், அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டிருந்தால் அது பற்றிய விவரங்களை அளிக்க வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள மனித உரிமை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பணியாற்றுவதற்காக அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் குறிப்பிட வேண்டுமெனவும் ஐநா மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு! மாசெக்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின்

எடப்பாடி- மோடி: ஏழு நிமிடங்களே நடந்த சந்திப்பு!

சாதி மோதல்: எஸ்பி நெற்றியில் வெட்டுக்காயம்!

வெறுங்கையோடு திரும்பியுள்ளார் எடப்பாடி: தாக்கும் ஸ்டாலின்


திங்கள், 17 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon