மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

முன்கூட்டியே விடுதலையாகிறாரா சசிகலா? விளக்கும் தினகரன்

முன்கூட்டியே விடுதலையாகிறாரா சசிகலா? விளக்கும் தினகரன்

சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்படவிலை என்று தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளனர். நன்னடத்தையை காரணம் காட்டி சசிகலா விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை, அமமுக பொதுச் செயலாளர் தினகரன் இன்று (ஜூன் 17) சந்தித்துப் பேசினார். அப்போது, சசிகலாவின் உடல்நிலை குறித்து தினகரன் கேட்டறிந்தார். பின்னர் இருவரும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து எங்கள் தரப்பிலிருந்து கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை. இதுதொடர்பாக சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியிருந்தது. நான் சசிகலாவை சந்தித்தபோது இதுகுறித்து கேட்டேன். அதுபோன்ற செய்திகளெல்லாம் தவறாக வந்துகொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார். மேலும் சசிகலாவுக்கு பரோல் கேட்க வேண்டியதற்கான அவசியம் ஏதும் தற்போது ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.

சிறையில் சசிகலா நலமாக இருப்பதாக தெரிவித்த தினகரன், “சசிகலாவும், இளவரசியும் நன்றாக கன்னடம் பேசுவதாக சிறை கண்காணிப்பாளர் என்னிடம் தெரிவித்தார். கன்னடம் பயின்று அதற்கான தேர்வையும் எழுதியிருக்கிறார்” என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, “ஆட்சியாளர்கள் நடவடிக்கையை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. அதிமுக நிலைதடுமாறி இருப்பதால்தான் எம்.எல்.ஏ.க்கள் இஷ்டத்துக்கு பேசுகிறார்கள். அதிமுக ஆட்சி என்றைக்கும் வேண்டுமானாலும் முடிவுக்கு வரும் என்பதுதான் எனது எண்ணம். அதிமுகவில் நடைபெற்றுவரும் குளறுபடிகள் அனைவருக்கும் தெரியும். சிலர் துணை முதல்வர் பதவி கேட்பதாகக் கேள்விப்பட்டேன். எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு பதவி கேட்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது அதிமுக ஆட்சி இறுதிப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்றுதான் தெரிகிறது” என்று பதிலளித்தார்.


மேலும் படிக்க

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு! மாசெக்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின்

எடப்பாடி- மோடி: ஏழு நிமிடங்களே நடந்த சந்திப்பு!

சாதி மோதல்: எஸ்பி நெற்றியில் வெட்டுக்காயம்!

வெறுங்கையோடு திரும்பியுள்ளார் எடப்பாடி: தாக்கும் ஸ்டாலின்


திங்கள், 17 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon