மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

வேட்டைப் பொருளான நடிகர் சங்க பதவிகள்!

வேட்டைப் பொருளான நடிகர் சங்க பதவிகள்!

இராமானுஜம்

இந்திய வரலாற்றில் தமிழகம் எல்லா காலகட்டங்களிலும் தனித்தன்மையோடு இடம்பெற்றிருக்கும். சினிமா துறையிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள் தமிழ்சினிமா முன்னோடிகள்.

தமிழகத்தின் பிரதான பிரச்சினையாக மாறியிருக்கும் கடும் வறட்சி அதனால் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இவைகளை பின்னுக்குத்தள்ளி ஊடகங்களில் முன்னிலைபடுத்தும் செய்தியாக மாறி வருகிறது தென்னிந்திய நடிகர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல்.

இந்தியாவில் சினிமா நடிகர்களுக்கு என்று தொடங்கப்பட்ட முதல் அமைப்பு தென்னிந்திய நடிகர் சங்கம். ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்கள் ஒன்றாக இருந்த போது தொடங்கப்பட்டது இவ்வமைப்பு.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர்கள்தான் சினிமாவில் நடிக்க வந்தனர். சினிமாவை விட நாடகம், இசையுடன் கூடிய கூத்து கலைகளே மக்களின் ஆதரவை பெற்ற கலை வடிவங்களாக இருந்தன.

சினிமா நடிகர்களை காட்டிலும் எண்ணிக்கையில் நாடக நடிகர்களும், இசைக் கலைஞர்களும் அதிகமிருந்தனர். இவர்களை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்ட நடிகர் சங்கம் காலப்போக்கில் சினிமா நடிகர்களின் ஆதிக்கத்திற்கு வந்தது. இருப்பினும் தேர்தல் என்று வந்து விட்டால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக நாடக நடிகர்கள், இசைக் கலைஞர்கள், துணை நடிகர்கள் உள்ளனர்.

இந்திய சினிமாவில் 71 ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள சங்கமாக நடிகர் சங்கம் இருந்தாலும் பலவீனமான அமைப்பாகவே செயல்பட்டு வந்தது. மொழிவாரி மாநில பிரிவினைக்கு பின் ஆந்திரம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் அந்தந்த மாநில நடிகர்கள் சங்கம் தொடங்கப்பட்டு சக்தி மிக்க அமைப்புகளாக சினிமாவில் செயல்பட்டு வருகின்றன.

இந்திய சினிமாவில் எல்லா அமைப்புகளுக்கும் முன்னாள் தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் சங்கம் விஐயகாந்த் சங்கத்தின் தலைமை பொறுப்புக்கு வரும் வரை ஆளுமைத்திறனின்றி செயல்பட்டு வந்தது.

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர், சிவாஜி, வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், மேஜர் சுந்தரராஜன் போன்ற சினிமா ஆளுமைகளின் தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கப்பட்டு கட்டிக் காப்பாற்றப்பட்ட நடிகர்கள் சங்கம் பொதுவெளியில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

அரசியல் கட்சிகள், ஆளும் அரசுகளின், பெரும் பணக்காரர்களின் கண் அசைவுக்கு கட்டுப்படாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கான உதாரணம் தான் இம்மாத இறுதியில் நடக்கப் போகும் தென்னிந்திய நடிகர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல்.

கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற நடிகர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் சக்தி மிக்க, அதிகாரம் பொருந்திய ஆளுமைமிக்க தலைமையாக நடிகர் சங்க செயலாளராக இருந்த ராதாரவி, சரத்குமார் தலைமையிலான அணியை தங்கள் பிரச்சார பலத்தால் தோற்கடித்து அனைத்து நிர்வாகிகளுக்கான பதவிகளிலும் வெற்றி பெற்றது பாண்டவர் அணி.

சரத்குமார்- ராதாவி மீதான ஊழல் குற்றச்சாட்டை வலிமையுடன் நாடக நடிகர்களிடம் கொண்டு சென்று அவர்களது வாக்கை பாண்டவர் அணி பெறக் காரணமாக இருந்தவர்கள் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரித்திஷ், திமுக பிரமுகர் பூச்சிமுருகன், எஸ்.வி.சேகர் ஆகியோர். இம்முயற்சிக்கு பொருளாதார ரீதியாக உதவியவர் கல்வியாளர் ஐசரி கணேஷ். திருமங்கலம் இடைதேர்தல் பார்முலா நாடக நடிகர்களிடம் அமுல்படுத்தபட்டதால் பாண்டவர் அணி வெற்றி எளிதானது.

பாண்டவர் அணி தேர்தல் வாக்குறுதிகளாக கூறியவை அனைத்தும் அமுல்படுத்தப்பட்டுவிட்டாலும் பாண்டவர் அணியில் பிளவு ஏற்பட்டு நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், இயக்குநர் பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் ஸ்வாமிகள் அணியும் நேரடியாக மோத காரணம் என்ன?

அரசியல் தலையீடா, அரசாங்க அழுத்தமா, தனிநபர்களின் பதவி மோகமா, ஐசரி கணேஷ் -விஷால் மோதலா?

நாளை காலை 7 மணி பதிப்பில்.


மேலும் படிக்க

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு! மாசெக்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின்

உலகக் கோப்பை: இந்தியாவிடம் பணிந்த பாகிஸ்தான்!

வைரஸ்: வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் படம்!

வெறுங்கையோடு திரும்பியுள்ளார் எடப்பாடி: தாக்கும் ஸ்டாலின்


திங்கள், 17 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon