மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 14 நவ 2019

ஃபேஸ்புக் முதலீட்டை ஈர்த்த மீஷுவின் வெற்றிக் கதை!

ஃபேஸ்புக் முதலீட்டை ஈர்த்த மீஷுவின் வெற்றிக் கதை!

டிஜிட்டல் டைரி! 21 - சைபர் சிம்மன்

இந்திய ஸ்டார்ட் அப் துறையை கவனித்து வருபவர்களுக்கு, மீஷு (Meesho) என்பது தெரிந்த பெயராகவே இருக்கும். மற்றவர்களுக்கு, மீஷுவா என்றே கேட்கத் தோன்றும். ஆனால், மீஷுவை அறிந்திராதவர்கள்கூட, மீஷு என்ன செய்கிறது, எப்படி செயல்படுகிறது என அறிந்துகொள்ளும் ஆர்வம் இப்போது உண்டாகியிருக்கும். முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக், மூஷூவில் முதலீடு செய்திருக்கும் செய்தியே இந்த ஆர்வத்திற்கு காரணம்.

ஃபேஸ்புக் கூடை கூடையாகப் பணம் வைத்திருக்கிறது, ’வாட்ஸ் அப்’ உள்பட அது வாங்க விரும்பும் நிறுவனங்களை எல்லாம் வாங்கிப் போடுகிறது என்றாலும் கூட, மீஷு முதலீடு கவனிக்க கூடியது. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் ஃபேஸ்புக் செய்திருக்கும் முதல் முதலீடு இது. சில ஆண்டுகளுக்கு முன் ஃபேஸ்புக் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை முழுமையாக வாங்கியது என்றாலும், முதல் முதலீடாக மீஷு அமைகிறது.

ஃபேஸ்புக் முதலீடு, மீஷு மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, இந்தியச் சந்தையில், மீஷு வேகமாக வளர்ச்சி கண்டுவரும் நிறுவனமாகவே இருக்கிறது. அதனால்தான் ஃபேஸ்புக் ஈள் முதலீடு செய்துள்ளது.

என்ன செய்கிறது மிஷு?

ஒரு விதத்தில் மீஷு இந்தியாவுக்கு ஏற்ற இணைய நிறுவனம் எனலாம். ஏனெனில் இது சமூக வர்த்தகத்திற்கு வழி செய்து, சாமானியர்கள் தொழில்முனைவோராகஸ் செயல்பட உதவிவருகிறது.

அதென்ன சமூக வர்த்தகம் என கேட்கலாம். இ-காமர்ஸ் எனப்படும் மின் வணிகம் பிரபலமாக இருக்கிறது அல்லவா? இணையம் மூலமான விற்பனையாக இது அமைகிறது. இதேபோல, சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விற்பனை ஆங்கிலத்தில் சோஷியல் காமர்ஸ் எனக் கூறப்படுகிறது. அதாவது சமூக வர்த்தகம் அல்லது வணிகம்.

இந்தப் பிரிவில்தான் மீஷு செயல்பட்டுவருகிறது. அடிப்படையில் மீஷு என்ன செய்கிறது என்றால், மக்கள் தங்கள் சமூக ஊடக வட்டத்தில் பொருட்களை விற்க வழி செய்கிறது. இவர்கள் மறுவிற்பனையாளர்கள் (ரீசெல்லர்கள்) என குறிப்பிடப்படுகின்றனர். மீஷு செயலியில் பட்டியலிடப்பட்டுள்ள எண்ணற்ற பிராண்ட்களிலிருந்து, தேர்வு செய்து அவை வழங்கும் பொருட்களை விற்பனை செய்யலாம்.

இந்த ஏற்பாட்டில் என்ன சிறப்பு என்றால், மறுவிற்பனையாளர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர வேறு எதையுமே செய்ய வேண்டாம். பொருட்களை டெலிவரி செய்வது, பணம் வசூலிப்பது போன்றவற்றையெல்லாம் மீஷு பார்த்துக்கொள்ளும். விற்பனை முடிந்தவுடன், அதற்குரிய கமிஷன் அல்லது லாபத் தொகையை மறு விற்பனையாளர் கணக்கிற்கு அனுப்பி வைத்துவிடும்.

ஆக, மறுவிற்பனையாளர்கள் என்பவர்கள் அடிப்படையில் தங்கள் சமூக ஊடக நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்குப் பொருட்களைப் பரிந்துரைத்து வாங்கச் செய்தால் போதும். சமூக ஊடகம் என்பது இங்கே பிரதானமாக, வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்.

மீஷு பட்டியலிட்டுள்ள பொருட்களைச் சமூக ஊடக நட்பு வட்டத்தில் பகிர்ந்துகொள்வதும் எளிதானதே. மீஷு பக்கத்திலேயே, பொருட்கள் அருகே அதற்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து வாட்ஸ் அப் நட்பு வட்டத்தில் பகிர்ந்துகொள்ளலாம். நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் பொருட்களை வாங்கினால், அதற்கேற்ற லாபம் கிடைக்கும்.

மீஷு முன்வைக்கும் சமூக வர்த்தகத்ம், வர்த்தக நிறுவனங்கள், மறுவிற்பனையாளர்கள் இரு தரப்பினருக்குமே பலன் தரக்கூடியது. வர்த்தக நிறுவனங்களைப் பொருத்தவரை, வாடிக்கையாளர்களை எப்படிச் சென்றடைவது என அதிகம் கவலைப்பட வேண்டாம். மீஷுவில் கடை விரித்தால் மறுவிற்பனையாளர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் வலை வீசி வாடிக்கையாளர்களைத் தேடித்தருவார்கள். மறு விற்பனையாளர்களைப் பொருத்தவரை, தங்கள் வாட்ஸ் அப் செயல்பாட்டையும், நட்பு வட்டத்தையும் வருவாயாக மாற்றிக்கொள்ளலாம்.

இந்த இரு தரப்பினருக்குமான பாலமாக மீஷு விளங்குகிறது. இணைய வர்த்தகத்தில் ஈடுபட முடியாத சிறிய வர்த்தக நிறுவனங்களையே மீஷு தன் இலக்காகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் இணையத்தில் கடை விரிக்க வழி செய்கிறது. அதே நேரத்தில் பொருட்கள் டெலிவரி, பணம் செலுத்தல் ஆகியவற்றுக்கும் எளிதாக வழி செய்துள்ளது. இந்தக் காரணங்களினால் சிறிய வர்த்தகங்களும், பொதுமக்களும் மீஷுவைப் பெருமளவில் நாடிவருகின்றனர்.

இல்லத் தலைவிகள், கல்லூரி மாணவர்கள், பகுதி நேரப் பணியை நாடுபவர்கள் ஆகியோருக்கு மீஷு வரப்பிரசாதம் எனலாம்.

தோல்வியிலிருந்து பிறந்த ஐடியா

மீஷு துவங்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகிறது. ஐஐடி முன்னாள் மாணவர்களான விதித் ஆத்ரே, சஞ்சீவ் பர்ன்வால் ஆகியோர் மீஷுவைத் துவக்கினர். உண்மையில் இருவரும் வேறு ஒரு ஐடியாவை செயல்படுத்த முற்பட்டுக் கையைச் சுட்டுக்கொண்டனர். அவர்கள் துவங்கிய ஃபேஷன் ஸ்டார்ட் அப்பை இழுத்து மூட வேண்டியிருந்தது.

ஆனால், இந்த தோல்வி அனுபவத்தின்போது முக்கியக் கண் திறப்பு ஒன்று சாத்தியமானது. அதாவது இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் பலரும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் விற்பனை செய்வதை கவனித்தனர். இந்த நிறுவனங்கள் தங்களுக்கெனச் சொந்த இணையதளம் இல்லாமல் சமூக ஊடகங்களை நம்பிச் செயல்பட்டன.

இந்த வர்த்தக முறை நல்ல பலனைத் தந்தாலும், பணம் செலுத்தும் வசதி உள்ளிட்டவற்றில் நிறைய சிக்கல்கள் இருப்பதைக் கவனித்தனர். விளைவு, இந்தக் குறைகளைச் சரி செய்து, வர்த்தகர்களுக்கும் மேலும் அதிக விற்பனைப் பரப்பை அளிக்கும் வகையில் மீஷுவைத் துவக்கினர். சிறிய வர்த்தகர்களுக்கான இணையக் கடை அமைத்தலை எளிதாக்கியதோடு, பொதுமக்களும் இணையத் தொழில்முனைவோராகி வருவாய் ஈட்ட வழி செய்வதாக மீஷு வர்த்தக மாதிரி அமைந்துள்ளது.

வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்கள் மூலமாக ஏற்கனவே பலரும் வர்த்தக முயற்சியில் ஈடுபட்டிருப்பதை பார்க்கலாம். அதற்கான மேம்பட்ட இணைய மேடையாக மீஷு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிக்கு ஏற்ற இணைய வர்த்தக மாதிரியால் வரவேற்பும் வெற்றியும் பெற்றுள்ள மீஷு, ஏற்கனவே ஓரளவு சுற்று நிதி திரட்டியுள்ள நிலையில், இப்போது ஃபேஸ்புக்கின் நிதியைப் பெற்றுள்ளது. சிறு வர்த்தகர்களுக்கு உதவி செய்வதிலும் இணையத் தொழில்முனைவோரை உருவாக்குவதிலும், மீஷுவுக்கும் ஃபேஸ்புக்கிற்கும் பொது இலக்கு இருப்பதாக மீஷு தரப்பில் சொல்லப்பட்டாலும், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என இரண்டு சேவைகளுக்குமே முக்கியச் சந்தையாக இருக்கும் இந்தியாவில் இது ஃபேஸ்புக்கிற்கு அதிக பலன் தரக்கூடிய முதலீடாகப் பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் முதலீட்டால், மீஷு இன்னும் பிரலபமாகி மேலும் பல சாமானியர்களுக்குப் பலன் அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

கூகுள் தேடலில் சமத்துவம்!


மேலும் படிக்க

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு! மாசெக்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின்

உலகக் கோப்பை: இந்தியாவிடம் பணிந்த பாகிஸ்தான்!

வைரஸ்: வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் படம்!

வெறுங்கையோடு திரும்பியுள்ளார் எடப்பாடி: தாக்கும் ஸ்டாலின்


திங்கள், 17 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon