மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

ஓங்குகிறதா ஓபிஎஸ் கை?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று (ஜூன் 16) காலை 10.15 மணிக்கு சென்னை திரும்பினார்.

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியது மட்டுமல்லாமல், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினார்.

தமிழகத்துக்கான கோரிக்கைகள் என்பதை விட, அதிமுகவின் பிரச்சினைகள் பற்றியே எடப்பாடி டெல்லியில் அதிகம் பேசியதாக சொல்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

“எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை பிரச்சினை வெளிப்படையாக வெடித்த பிறகு முதன் முறையாக டெல்லி வந்திருக்கிறார். மத்திய நிதி அமைச்சர், பிரதமர் உள்ளிட்டோரைச் சந்திக்கும்போது முதல்வர் வைத்த முக்கிய கோரிக்கை தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடுதான்.

ஆனால் அதுபற்றி விவாதிக்க தமிழகத்தின் நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தை கூட்டிப் போகாமல், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை ஏன் கூட்டிச் சென்றார் முதல்வர் என்ற கேள்வியை எடப்பாடி டெல்லியில் எதிர்கொண்டிருக்கிறார். எடப்பாடி ஒரு மத்திய அமைச்சரை சந்திக்கச் சென்றபோது, ‘ஃபைனான்ஸ் மினிஸ்டர் வரலையா?’ என்ற கேள்வியை எதிர்கொண்டிருக்கிறார்.

இதே கேள்வியைப் பன்னீர் ஆதரவாளர்களும் எழுப்புகிறார்கள்.

”நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. ஏற்கனவே முதல்வராக இருந்து அனுபவம் பெற்ற ஓ.பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் டெல்லியில் தங்கி எவ்வளவு விரைவாக செயல்பட்டார் என்பதை எல்லாரும் அறிவார்கள். மேலும் தமிழகத்துக்கான திட்ட நிதி ஒதுக்கீடுகள் பற்றி பன்னீருக்கும் தெளிவான தகவல்கள் தெரியும். ஆனால் தனது டெல்லி பயணத்தில் ஓ.பன்னீரை முற்றிலும் புறக்கணித்துவிட்டு ஜெயக்குமாரை அழைத்துச் சென்றிருக்கிறார் முதல்வர். இதுபற்றி டெல்லியில் பாஜக சார்ந்த சிலரே கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

‘ஒற்றைத் தலைமை பிரச்சினை எல்லாம் இல்லைனு சொல்றீங்க. நீங்களும் டெபுடி சி எம்மும் சேர்ந்து வரவேண்டியதுதானே…’ என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள். இந்த கேள்விதான் எடப்பாடி தரப்பை யோசிக்க வைத்திருக்கிறது.

அதாவது எடப்பாடி டெல்லியில் இருக்கும்போது, தமிழகத்தின் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான பன்னீர் செல்வம் தேனியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தன்னை எடப்பாடி டெல்லி பயணத்தில் எப்படியெல்லாம் புறக்கணித்தார் என்பதை டெல்லியில் அவர் தெரிவிக்க வேண்டிய இடத்தில் தெரிவித்துவிட்டார். அதேநேரத்தில் தன்னை எடப்பாடி புறக்கணித்தார் என்பதற்காக தான் எடப்பாடியை புறக்கணித்தோம் என்ற தோற்றம் டெல்லியில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான், ஓ.பி.ரவீந்திரநாத்திடம், டெல்லி வந்த எடப்பாடியை மற்ற எம்.பி.க்களோடு சேர்ந்து வரவேற்காமல் தனியாக சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்கச் சொல்லியிருக்கிறார் பன்னீர். அதன்படியே எடப்பாடியை தனியாக சென்று வரவேற்றார் ஓ.பி.ரவீந்திரநாத்.

பன்னீர் தேனியில் இருந்தபடி டெல்லியில் ஆடிய ஆட்டங்களின் விளைவாக நேற்று மாலை நடந்த நாடாளுமன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் ஓ.பன்னீரின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக சார்பாக கலந்துகொண்டிருக்கிறார். இதெல்லாம் எடப்பாடி தரப்புக்கு, ‘ஒபிஎஸ்ஸின் கை மீண்டும் டெல்லியில் ஓங்கிக் கொண்டிருக்கிறதோ?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு! மாசெக்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின்

பிரசாந்த் கிஷோர்- எடப்பாடி சந்திப்பு: கட்சியைக் கைப்பற்ற ஸ்பெஷல் வியூகம்!

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

விஜய் ரசிகர்களுக்கு மோகன் ராஜாவின் உறுதிமொழி!

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?


திங்கள், 17 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon