மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு! மாசெக்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின்

  டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு! மாசெக்களுக்கு தடைபோட்ட ஸ்டாலின்

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் தொடர்பில் இருந்தது.

“திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தோடு சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் சிங்கப்பூர் செல்லும் முன்னர் சில மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியமான ஒரு உத்தரவு பிறப்பித்துச் சென்றிருக்கிறார்” என்று முன் குறிப்புச் செய்தி அனுப்பியது வாட்ஸ் அப்.

சில நிமிடங்கள் கழித்து அதன் தொடர்ச்சியான செய்தி வந்தது.

“திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த வாரம் திமுக சார்பில் நன்றியறிவிப்பு பொதுக்கூட்டங்களை நடத்தினார். மக்களவைத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தப் பயணத்திடையே, இன்னும் நான்கு தொகுதிகளில் சேர்த்து வெற்றி பெற்றிருந்தால் தமிழகத்தின் தலையெழுத்தே மாறிப் போயிருக்கும் என்று தனக்கு நெருக்கமான தன்னோடு வருபவர்களுடன் அப்போது சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

இடைத்தேர்தல் மூலம் அதிகபட்ச தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக அரசின் சட்டமன்ற பலத்தை வெகுவாக குறைத்து ஆட்சியை இயல்பாகவே கவிழ்க்கலாம் என்பதுதான் தேர்தலுக்கு முன் ஸ்டாலின் போட்ட கணக்கு. ஆனால் தேர்தல் முடிவுகளில் சரியாக ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிறைய அளவில் தக்கவைத்துக்கொண்டது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு.

இதனால் ஸ்டாலினை விட அதிக வேதனைக்கு உள்ளானவர்கள் திமுக கீழ்நிலை நிர்வாகிகளும் தொண்டர்களும் தான். அதிமுக ஆட்சியை ஜனநாயக முறைப்படி கவிழ்க்கலாம் என்ற வாய்ப்பு தேர்தலில் இருந்தும் அது திமுகவுக்கு பயன்படாமல் போன நிலையில் சில மாவட்டச் செயலாளர்கள் அப்போது ஸ்டாலினிடம் ஒரு யோசனையை தெரிவித்தார்கள்.

அதன்படி அதிமுகவில் இருக்கும் சில பலவீனமான எம் எல் ஏக்களை கொத்தாக திமுக பக்கம் கொண்டு வந்து ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசுக்கு எதிராக அவர்களை வாக்களிக்க வைத்து ஆட்சியை கவிழ்க்கலாம் என்பது தான் அந்த சில மாவட்ட செயலாளர்கள் கொடுத்த திட்டம். ஆனால் ஸ்டாலின் இது குறித்து மிகவும் யோசித்து நிதானமாகவே காய் நகர்த்தினார் ‌. சில மாவட்டச் செயலாளர்கள் தங்களது மாவட்டத்துக்குட்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களோடு பேசவும் ஆரம்பித்துவிட்டனர். திமுகவின் இந்த ஆள் பிடிக்கும் படலத்தின் பல்வேறு காட்சிகளையும் மின்னம்பலத்தில் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறோம்.

முதலில் மா.செக்களுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அறிவாலயம் பின்னர் தயங்கியது, இந்த நகர்வுகளைத் தெரிந்துகொண்ட முதல்வர் எடப்பாடி தனக்கு எதிராக திமுக பண பலத்தைப் பயன்படுத்துகிறது என்று பாஜக தலைமையிடம் முறையிட்டு, திமுகவுக்கு எதிராக வருமான வரித்துறையைக் களமிறக்கி ஆட்சியைப் பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்ததையும் பதிவு செய்தோம்.

இந்த சூழலில் அதிமுகவுக்குள் ஒற்றைத் தலைமை பிரச்சினை வெடித்து உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் சில மாவட்ட செயலாளர்கள் மீண்டும் ஸ்டாலினை அணுகியுள்ளார்கள் . ‘ஏற்கனவே நம் ஆபரேஷனுக்கு தடை போட்டுட்டீங்க. இப்ப அதிமுகவுக்குள்ள எடப்பாடி, பன்னீருக்கு இடையில பெரிய அளவுல பிரச்சினை ஆகிட்டிருக்கு. இதுதான் சரியான சந்தர்ப்பம். ஏற்கனவே நாம பேசி வச்சிருந்த எம்.எல்.ஏ.க்கள் இன்னும் தயாராதான் இருக்காங்க. நீங்க சொன்னீங்கன்னா உடனே முடிச்சிடலாம்’ என்று கொஞ்சம் உரிமையோடே ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அதற்கு ஸ்டாலின், ‘நீங்க சொல்ற எல்லாமே எனக்குப் புரியுது. ஆனா, இப்போதைக்கு நீங்க எதுவும் செய்ய வேண்டாம் இந்த விவகாரத்தில் எதுவாயிருந்தாலும் செந்தில் பாலாஜியும் ஓஎம்ஜி சுனிலும் பார்த்துக்குவாங்க’ என்று பதிலளித்துவிட்டு சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த மாவட்டச் செயலாளர்கள், ‘சரி அவங்களாவது இந்த வேலைய முடிக்கட்டும்’ என்று மனதுக்குள் நினைத்தபடி ஒதுங்கிவிட்டார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

இதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக் தனது மெசஞ்சரில் ஒரு செய்தியை டைப் செய்ய ஆரம்பித்தது.

“நிதி ஆயோக் கூட்டத்துக்காக டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் முதல் பல்வேறு மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். தமிழகத்தின் சார்பிலான பிரச்சினைகள் சம்பந்தமாக பேசிய அதேநேரம் அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை தொடர்பாகவும், ஆட்சிக்கான ஆபத்து தொடர்பாகவும் மோடியிடமும், அவருக்கு நெருக்கமான மத்திய அமைச்சர்களிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார் எடப்பாடி. ஆனால் யாருமே எடப்பாடிக்கு முழுமையான திருப்தி அளிக்கும் வகையில் பதில் அளிக்கவில்லை என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். எடப்பாடியா, பன்னீரா என்ற பிரச்சினையின் மூலம் அதிமுகவிடம் மேலும் சில நிபந்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தயாராகும் பாஜக, வெயிட் அண்ட் வாட்ச் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. இதனால் எடப்பாடியின் டெல்லி பயணம் அரசியல் ரீதியாக அவருக்கு பெரிய வெற்றியல்ல என்கிறார்கள் அதிமுக தரப்பில்” என்ற மெசேஜை அனுப்பிவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது ஃபேஸ்புக்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!

பிரசாந்த் கிஷோர்- எடப்பாடி சந்திப்பு: கட்சியைக் கைப்பற்ற ஸ்பெஷல் வியூகம்!

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

விஜய் ரசிகர்களுக்கு மோகன் ராஜாவின் உறுதிமொழி!

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?


ஞாயிறு, 16 ஜுன் 2019

அடுத்ததுchevronRight icon