மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

விவசாயத் துறையில் அதிக கவனம்: மோடி

விவசாயத் துறையில் அதிக கவனம்: மோடி

வேளாண் துறையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகச் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நேற்று (ஜூன் 15) நிதி ஆயோக்கின் ஐந்தாவது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய அரசின் எதிர்கால இலக்குகள், திட்டங்கள் மற்றும் அவற்றை நிறைவேற்றி முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விவாதித்தார். வறுமை, வேலையின்மை, வறட்சி, இயற்கைப் பேரிடர், காற்று மாசுபாடு, ஊழல் மற்றும் வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இக்கூட்டத்தில் மோடி கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மோடி மேலும் பேசுகையில், “தூய்மை இந்தியா திட்டம், வீட்டு வசதித் திட்டம் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும். இந்த இலக்குகள் மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு விழா (அக்டோபர் 2) தினத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவதுதான் நமது அரசின் முக்கிய நோக்கமாகும். இதை நிறைவேற்ற மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, பழங்கள் - காய்கறிகள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மாவட்ட அளவிலான வளர்ச்சியை மேம்படுத்துவது அவசியமாகும். முன்னேற விரும்பும் மாவட்டங்களில் பல நக்ஸல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. நக்ஸல் வன்முறைக்கு எதிரான போராட்டம் தற்போது முடிவுறும் கட்டத்தில் இருக்கிறது. வளர்ச்சி நடவடிக்கைகள் வேகமாக நடைபெறும் நிலையில் வன்முறை எதிர்ப்பு உறுதியுடன் கையாளப்பட வேண்டும்.

2022ஆம் ஆண்டுக்குள் சுகாதாரத் துறையில் பல இலக்குகளை எட்ட வேண்டும். 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க இலக்கு உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகத் திட்டத்தை இதுவரை அமல்படுத்தாத மாநிலங்கள் விரைந்து அந்தத் திட்டத்தில் இணைய முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!


ஞாயிறு, 16 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon