மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

பிரசாந்த் கிஷோர்- எடப்பாடி சந்திப்பு: கட்சியைக் கைப்பற்ற ஸ்பெஷல் வியூகம்!

பிரசாந்த் கிஷோர்- எடப்பாடி சந்திப்பு:  கட்சியைக் கைப்பற்ற ஸ்பெஷல் வியூகம்!

புகழ்பெற்ற தேர்தல் செயல்திட்ட, உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை நேற்று (ஜூன் 15) டெல்லியில் தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருக்கிறார். ஆனாலும் அவரது ஐ-பிஏசி நிறுவனம் சார்பில் அரசியல் கட்சிகளுக்குத் தொடர்ந்து தேர்தல் உத்தி வகுக்கும் பணிகளைச் செய்து வருகிறார்.

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடிக்கு, பிரசாந்த் கிஷோர் தனது தேர்தல் ஆலோசனைகளை வழங்கினார். அத்தேர்தலில் மோடி ஜெயித்ததும், பிரசாந்த் கிஷோரின் மதிப்பு அரசியல் கட்சிகளிடையே அதிகரித்தது.

2015 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ் குமாரை ப்ரமோட் செய்யும் வேலைகளை பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் கையிலெடுத்தது. நிதீஷ் ஆட்சி அமைத்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளுக்கும் தேர்தல் உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள் வகுத்துத் தரும் பிரசாந்த் கிஷோர், நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக வேலை செய்தார். அவரது வெற்றியை அடுத்து, வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவுக்கு பிரசாந்த் கிஷோரை வரவழைத்துப் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் டெல்லி பயணத்தின் போது பிரசாந்த் கிஷோரை சந்திப்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முக்கிய திட்டமாக உருவெடுத்தது.

இதுபற்றி டெல்லி சென்றுள்ள அதிமுக நிர்வாகிகள் வட்டாரங்களில் விசாரித்தபோது,

“தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி தீவிரமாக முயல்கிறார். மீண்டும் தானே முதல்வராக வேண்டுமென்றால், அதிமுக என்ற கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதற்கான வியூகம் வகுப்பதற்கான ஏற்பாடுதான் பிரசாந்த் கிஷோரை எடப்பாடி சந்தித்த நிகழ்வு. இந்த சந்திப்புக்கு முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான ரபி பெர்னார்ட்தான் ஏற்பாடு செய்திருக்கிறார். ரபி பெர்னார்ட் முதல்வரின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மீடியா உலகிலும், அரசியல் உலகிலும் தனக்கிருக்கும் அனுபவத்தை இப்போது எடப்பாடிக்காக பயன்படுத்தி வருகிறார். அவரது யோசனையின் பேரில்தான் பிரசாந்த் கிஷோரை எடப்பாடி சந்திக்கும் நிகழ்வு முடிவானது” என்றவர்கள் தொடர்ந்தனர்.

“அண்மையில்தான் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பற்றிய சர்ச்சை வெடித்திருக்கிறது. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா பேச, அதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் அதிமுகவுக்குள்ளேயே கிளம்பின. ஓ.பன்னீர் மீண்டும் கட்சியைக் கைப்பற்ற சகல முயற்சிகளையும் ஒருபக்கம் மேற்கொள்கிறார் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன. எடப்பாடியோ கட்சி தன்னிடம் இருப்பதையே விரும்புகிறார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி –பிரசாந்த் கிஷோர் சந்திப்பில், தேர்தல் வியூகங்களை விட, கட்சியில் எடப்பாடி பழனிசாமி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான வியூகங்கள் பற்றியே அதிகம் ஆலோசித்திருக்கிறார். கட்சியில் தன்னை ஒற்றைத் தலைமையாக எடப்பாடி நிலை நிறுத்திக் கொண்டால்தான் அடுத்து வரும் தேர்தலை அதிமுக திடமாக எதிர்கொள்ள முடியும். கட்சியில் இரட்டைத் தலைமை என்றால் மீண்டும் தேர்தலை சந்திப்பதில் அதிமுகவுக்கு கடும் சிரமம் இருக்கும் என்று கருதுகிறார் எடப்பாடி.

அதனால் கட்சியில் ஒற்றைத் தலைமையாக தன்னை முன்னிறுத்தும் வியூகங்கள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் உதவி கேட்டிருக்கிறார் எடப்பாடி. இதுவும் ஒரு தேர்தல் வியூகம்தான்” என்கிறார்கள்.

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் தவிர, எடப்பாடியின் இந்த நடவடிக்கைகள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைக் கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன என்கிறார்கள் ஓபிஎஸ் வட்டாரத்தில். துணை முதல்வரை மட்டுமல்ல, வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவையே கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது எடப்பாடியின் இந்த மெகா மூவ்.

ஞாயிறு, 16 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon