மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 31 மா 2020

உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி ஆஸி வெற்றி!

உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி ஆஸி வெற்றி!

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் 20ஆவது ஆட்டத்தில் நேற்று இலங்கை அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாடியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் பிஞ்ச் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். மறுபுறம் மிக மந்தமாக ஆடிக்கொண்டிருந்த டேவிட் வார்னர் 48 பந்துகளில் 26 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த உஸ்மான் கவாஜாவும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாகக் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித், பிஞ்ச்சுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி எளிதாக 200 ரன்களைக் கடந்தது. சதத்தைக் கடந்த பிஞ்ச் 43ஆவது ஓவரில் 153 ரன்களுக்கு வெளியேற, ஸ்மித் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்கள் குவித்தது. இலங்கை அணித் தரப்பில் இசுரு உதானா மற்றும் தனஞ்ஜெயா டிசில்வா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

கடின இலக்கை நோக்கிக் களமிறங்கிய இலங்கை அணிக்குத் தொடக்க வீரர்களான குசல் பெரேராவும் டுமித் கருணரத்னேவும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அதிரடியாக விளையாடிய குசல் பெரேரா 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு குறையத் தொடங்கியது.

ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த தொடக்க வீரரும் கேப்டனுமான கருணரத்னே சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 97 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அவர் வெளியேறியவுடன் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் எஞ்சிய விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து வீழ்த்தி, வெற்றியை எளிதாக்கினர். இலங்கை அணி 45.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அபாரமாகப் பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சதமடித்து அணியின் ரன் குவிப்புக்கு உதவிய ஆரோன் பிஞ்ச் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!


ஞாயிறு, 16 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon