மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜுன் 2019

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!

டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!

மொபைல் டேட்டா ஆன் ஆனதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. லொக்கேஷன் புதுச்சேரி காட்டியது. தொடர்ந்து டைப்பிங்கில் இருந்தது வாட்ஸ் அப்.

“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அமைதியாகவே இருந்து வருகிறார். கடந்த வாரம் அவரிடம் இருந்து பல்வேறு பிரச்சினைகளை ஒட்டி அறிக்கைகள் வந்துகொண்டிருந்தனவே தவிர, தினகரன் வெளியே தலைகாட்டவில்லை.

காரணம் மூன்று நாட்களாக தினகரன் புதுச்சேரியில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். வழக்கமாக புதுச்சேரி பண்ணை வீட்டுக்குச் சென்றால் குடும்பத்துடன் செல்லும் தினகரன் சில நாட்களுக்கு முன் அங்கே தனியாக சென்றார். அங்கிருந்து தகவல் அனுப்பப்பட்டு அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பண்ணை வீட்டுக்கு தினகரனைப் பார்க்கச் சென்றனர். இதுபோல பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகளை குரூப் குரூப்பாக அழைத்து சந்தித்திருக்கிறார் தினகரன்.

தமிழகம் முழுக்க அமமுக கட்சியிலிருந்து பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு என்ன முக்கியமான வேலைகள் இருந்தாலும் கூட அமமுகவில் இருந்து தாய்க்கழகத்துக்கு இணைய வருகிறார்கள் என்றால் இணைப்பு நிகழ்ச்சிக்கு நேரம் கொடுத்து கலந்துகொள்கிறார். 100 பேர் இணைந்தால் கூட அந்நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொள்கிறார், அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் என்றால் பத்து பேர் வந்தால் கூட புகைப்படம் எடுத்து அதை செய்தியாக்கச் சொல்கிறார் எடப்பாடி. இவ்வாறு தேர்தல் முடிவுகளுக்குப் பின் தினகரனை மேலும் வீக் ஆக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் எடப்பாடி.

இந்த நிலையில்தான் அமமுக நிர்வாகிகளை பண்ணை வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் தினகரன் கட்சியை காப்பாற்றும் வகையில் ஆலோசனை செய்து வருகிறார். பத்திரிகையாளர்கள் சிலரையும் கூப்பிட்டு, ‘எங்க கட்சியோட செல்வாக்கு உண்மையில எப்படித்தான் இருக்கு. நிர்வாகிகள் பலர் நான் திருப்தியடையணும்னு சொல்லுவாங்க. நீங்க சொல்லுங்க’ என்று கேட்டிருக்கிறார். அவர்களும் பல்வேறு விவரங்களை வைத்து தினகரனிடம் அமமுகவின் கள செல்வாக்கு பற்றி கூறியிருக்கிறார்கள்.

அப்போது தினகரன், ‘ஸ்டாலின், இந்த ஆட்சியை எப்படியாவது கவுத்துடுவார்னு எதிர்பார்த்தேன். ஆனால் அதில் அவர் அக்கறை காட்டுறது மாதிரியே தெரியலையே. அதிமுக எம்.எல்.ஏ.க்கள்கிட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள் பேசறதா சொன்னாங்க. அப்புறம் ஒண்ணும் இல்லைங்குறாங்க. என்னாச்சு... ஸ்டாலின் பயந்துட்டாரா?’ என்று கேட்டிருக்கிறார். தினகரனின் பேச்சில் ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார் என்ற தொனியே இருந்ததாம்.

தன் கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர் நண்பர்கள் சந்திப்பு என்பதையெல்லாம் தாண்டி புதுச்சேரி பண்ணை வீட்டில் இன்னொரு முக்கியமான சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவர் தினகரனை சந்தித்துச் சென்றிருக்கிறார்கள். தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இரண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்களையும் பண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தது தற்போது தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதிதான் என்கிறார்கள். திமுகவின் ஆட்சிக் கவிழ்ப்பு ஆபரேஷன் முடங்கிவிட்டதாகக் கருதும் தினகரன், இனியும் காத்திருக்கக் கூடாது என்று கருதி தானே அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்தித்து சில திட்டங்களை செயல்படுத்தத் தயாராகிவிட்டார். ரகசியமாக நடந்த இந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்புக்குப் பிறகு தினகரன் நேற்று சென்னை திரும்பிவிட்டார்.

இதேபோல தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கும் திட்டமும் தினகரனுக்கு இருக்கிறது என்கிறார்கள் அமமுக வட்டாரத்தில். எடப்பாடி இந்த சட்டமன்றத்தின் முழு பதவிக் காலத்துக்கும் முதல்வராக தொடரக் கூடாது என்பதுதான் தினகரனின் இப்போதைய ஒரே திட்டம். இதை செயல்படுத்த திமுகவை எதிர்பார்த்து ஏமாந்து போன தினகரன் இப்போது அடுத்த கட்டமாக என்ன செய்வது என்ற ஆலோசனையிலும் இறங்கியிருக்கிறார். அதன் முதல் கட்டம்தான் அதிமுக எம்.எல்.ஏ.க்களை தினகரனே சந்தித்திருப்பது என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதை ஷேர் செய்து தனது டைம்லைனிலும் பேஸ்ட் செய்துவிட்டு லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.


மேலும் படிக்க

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!


ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

சனி 15 ஜுன் 2019