மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

தண்ணீர் பஞ்சம்: எதிர்க்கட்சியினரின் கேள்விகளும், அரசின் பதிலும்!

தண்ணீர் பஞ்சம்: எதிர்க்கட்சியினரின் கேள்விகளும், அரசின் பதிலும்!

தமிழகம் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது. சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டதால், தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. சென்னையில் தண்ணீர் லாரிகள் வரும் நேரத்தில் தண்ணீர் பிடிக்கும் மக்கள் கூட்டம் அலைமோதுவதை நாம் நேரிலேயே காண முடிகிறது.

தண்ணீர் தட்டுப்பாட்டால் சென்னையிலுள்ள உணவகங்களில் மதிய உணவை ரத்து செய்ய ஆலோசித்து வருகிறார்கள். பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய பணித்திருக்கிறது. சென்னைக்கு வெளியே பல மாவட்டங்களில் கிராமப்புறங்களில் மக்கள் நெடுந்தொலைவு பயணப்பட்டு குடங்களில் தண்ணீர் பிடித்துவருகிறார்கள்.

தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகிறது. அதுமட்டுமல்ல ஐ.டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் “ஊழலில்” நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “திமுகவினர் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்வதாக தகவல் வருவது ஆறுதலாக இருந்தாலும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தங்களால் மேலும் இயன்றவரை முனைப்புடன் நிறைவேற்றிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “குடிநீரே இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். அரசு அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 25 அடி கீழே சென்றிருக்கிறது. இதனால் கடல்நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கவனக்குறைவுதான் இதற்கு காரணம். இதற்கான பொறுப்பை முதல்வர் ஏற்றுக்கொள்ள வேண்டும். குடிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வாசன் உள்ளிட்ட தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

துணை முதல்வர், அமைச்சர் பதில்

இந்த நிலையில் தேனியில் இன்று (ஜூன் 15) செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. முதற்கட்டமாக குடிமராமத்து பணி செய்ய ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் குடிநீர் தட்டுப்பாடு நிலவரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம்.

அதன் அடிப்படையில் எந்தெந்த மாவட்டத்துக்கு முன்னுரிமை அளித்து எவ்வளவு தொகை ஒதுக்கப்படும் என ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி குடிநீர் தட்டுப்பாடு சீரமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி குறித்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்று ஆய்வு கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு கடுமையான வறட்சி நிலவி வந்தது. அந்த நிலையிலும் கூட, சமாளித்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது நாளொன்றுக்கு 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு 520 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “சென்னை மக்களின் தண்ணீர் தேவைக்காக தினசரி 9,100 லோடு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிராம பஞ்சாயத்துகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேவைக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.15,835 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்கள் நலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2017 முதல் 62 சதவிகிதம் மழை பொழிவு குறைந்துள்ளது. இந்த வறட்சிக்கு பிறகு 3 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 41,464 நீர் ஆதார புனரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன” என்றும் பட்டியலிட்டார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சரை சந்தித்து குடிநீர் திட்டத்திற்காக ரூ.5,000 கோடிக்கு மேல் நிதி தேவைப்படுவதாக வலியுறுத்தியிருப்பதாகவும், ஆந்திராவில் இருந்து கிடைக்க வேண்டிய நீரை பெற முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேசி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க

முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!

குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!


சனி, 15 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon