மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!

தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமமுக படுதோல்வியடைந்ததை அடுத்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். அமைச்சர்கள் பலரும் தத்தமது மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகளை போட்டிப்போட்டுக்கொண்டு சென்னை அழைத்துவந்து முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைக்கிறார்கள். முக்கிய நிர்வாகிகளை இழுப்பதற்காக ரகசிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

அமமுக பொதுச் செயலாளர் தினகரனின் நம்பிக்கைக்குரிய இரு தளபதிகளில் ஒருவர் தங்க தமிழ்ச்செல்வன், இன்னொருவர் வெற்றிவேல். எந்த சவாலான பணியாக இருந்தாலும் இவர்கள் இருவரிடமும் ஒப்படைத்தால் சரியாக நடந்துவிடும் என்பதுதான் தினகரனின் நம்பிக்கை. அதற்கு உரியவர்களாகவே இருவரும் இருந்துவருகிறார்கள். இந்த நிலையில் தினகரனின் வலதுகரமாக செயல்பட்டுவரும் வெற்றிவேலுவுக்கு எடப்பாடி தரப்பிலிருந்து தூது அனுப்பப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்...

“ மக்களவைத் தேர்தலின்போது சென்னையிலுள்ள மூன்று தொகுதிகளிலும் அதிமுக பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதற்கு தொண்டர்கள் சரிவர பணியாற்றாததும் ஒரு காரணம். இதனால் சென்னை மாநகர், குறிப்பாக வடசென்னை பகுதியில் அதிமுக தொண்டர்கள் இன்னும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால், அதற்கு தொண்டர்களோடு நெருங்கிப் பணியாற்றும் வெற்றிவேல் போன்றவர்கள் அவசியம் என்ற முடிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருக்கிறார்.

மேலும் வெற்றிவேலுக்கு வடசென்னை பகுதிகளில் கணிசமான ஆதரவாளர்கள் உண்டு. அமமுகவில்தான் இருக்கும் அவர்கள் மீண்டும் அதிமுகவுக்கே வந்தால் சென்னையில் அதிமுக கூடுதல் பலம் பெறும். அது தினகரனுக்கு பெரியளவு இழப்பாகவும் இருக்கும் என்று நினைக்கிறார்.

இதுதொடர்பாக தி.நகர் எம்.எல்.ஏ சத்யாவை அழைத்துப் பேசியிருக்கிறார். இதனையடுத்து, எடப்பாடியின் தூதுவராக வெற்றிவேலிடம் பேசிய சத்யா. ‘அண்ணே... நீங்க மறுபடியும் தாய் கழகத்துக்கே திரும்பனும்னு எடப்பாடி அண்ணன் ஆசைப்படுறாரு’ என்று சமாதானம் செய்திருக்கிறார்.

இந்தத் தகவல் வடசென்னை அதிமுகவில் ஆதிக்கம் செலுத்திவரும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு செல்ல, அவர் எடப்பாடியிடம் இதுபற்றி நேரடியாகவே பேசியிருக்கிறார். “சென்னை மாநகரில் அதிமுக தொண்டர்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்கள். அப்படியிருக்கையில் வெற்றிவேல் எதற்கு தேவையில்லாமல் அதிமுகவுக்கு” என்று அப்போது அதிருப்தியும் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலேதும் சொல்லாமல் அவரை சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார் எடப்பாடி.

வெற்றிவேலை அதிமுகவுக்கு கொண்டுவர எடப்பாடி நினைப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதிமுகவில் மிகமுக்கிய அமைச்சர்களில் ஒருவராக எடப்பாடிக்கு நெருக்கமாக இருக்கிறார் ஜெயக்குமார். முதல்வர் ஆளுநரை சந்திக்க செல்லும்போதெல்லாம் அவருடன் செல்வதும் ஜெயக்குமார்தான். முதல்வருடன் இவ்வளவு நெருக்கம் காட்டுவதாலும், ஊடகங்களில் அனைத்து விவகாரங்களுக்கும் கட்சியின் சார்பாக பதில் சொல்வதாலும் ‘சென்னையின் முதல்வர் ஜெயக்குமார்’ என்றே அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். இதனால் ஜெயக்குமாருக்கு செக் வைக்கவே, அவருக்கு சிம்மசொப்பனமாக திகழும் வெற்றிவேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி.

ஆனால் எடப்பாடியின் தூதுவருக்கு இதுவரை வெற்றிவேல் பிடிகொடுக்கவே இல்லையாம்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!

மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!

பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

தண்ணீர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் மதிய உணவை நிறுத்த முடிவு!


வெள்ளி, 14 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon