மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!

மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!

டி.எஸ்.எஸ்.மணி

அருவிகளுக்குப் பெயர்பெற்ற குற்றாலத்தில் தற்போது சில அருவிகளுக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கேரள மாநிலத்திலுள்ள அருவிகளுக்குச் செல்வதால் தமிழகத்துக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. தனியார் ஆதிக்கமும் சேர்ந்துகொள்ளும் நிலையில் தமிழகச் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

தேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, புதிய கரடி ஃபால்ஸ் என மொத்தம் ஒன்பது அருவிகள் அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ளன. ஐந்தருவிக்குச் செல்லும் சாலையில் இடதுபுறம் சிற்றருவி செல்லலாம். சிற்றருவியில் 40 ஆண்டுகளுக்கும் முன்பு, குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி வந்தார். அவருக்குக் குளிப்பதற்காக ஓர் அறை கட்டப்பட்டது. அதுவே பிற்காலத்தில், பெண்களுக்குத் தனி அறை, ஆண்களுக்குத் தனி அறை என மாற்றப்பட்டது.

அருவிகள் வீற்றிருக்கும் மலை

மென்மையாக விழும் சிற்றருவி நீரில் குளிக்கப் பலரும் ஆசைப்படுவார்கள். பேப்பர் ஃபால்ஸ் என்றும் சிற்றருவியை அழைப்பார்கள். செண்பகாதேவி அருவிக்குச் செல்ல மலைமேல் சில மைல்கள் ஏற வேண்டும். ஒருகாலத்தில் கரடு முரடாக இருந்த இந்தப் பாதையில் அரசு சாலை அமைத்திருக்கிறது. அந்த செண்பகாதேவி அருவிக்கும் மேலே சிறிது கஷ்டப்பட்டு ஏறிச் சென்றால், அது சில மைல்கள் கடந்து தேனருவியில் கொண்டுவிடும். தேனருவி, இரு பெரும் மலைகளுக்கு இடையே ‘ஓ’ என விழுகின்ற அழகே தனி அழகு. அருவி விழும் இருபுறமும் உள்ள இரு பெரும் மலைகளும் நல்ல உயரத்தில் இருக்கும். அதன் உச்சியில், பெரிய அளவில் தேன் கூடு தொங்கிக்கொண்டிருக்கும். சரியான வேகத்தில் தேனருவி வந்து விழும். அதில் குளிப்பது வீர சாகசமாகக் கருதப்படும்.

ஐந்தருவிக்கு மேலே இருப்பதுதான் பழத்தோட்ட அருவி. அதில் அரசாங்க (அதிகாரிகளின்) அனுமதி பெற்றவர்கள் தனியான குளியல் போட்டுக்கொள்வார்கள். மெயின் அருவிக்கு மேலே தண்ணீர் பெரும் நீர்த்தேக்கத்தில் தேங்கிச் செல்லும். அதற்குப் பொங்குமாங்கடல் என்று பெயர். அதற்கும் மேலே, செண்பகாதேவிக்குக் கீழே, மரப்பாலம் என்ற இடத்திலிருந்துதான் புலியருவி வழியாகக் குற்றாலத்துக்குக் குடிதண்ணீர் விநியோகம் வரும். செண்பகாதேவி அருவியும். தேனருவியும் வனவிலங்குப் பாதுகாப்புக்காகச் சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டன. அதாவது அவற்றுக்குச் செல்லும் வழி மூடப்பட்டுவிட்டது. பழத்தோட்ட அருவி சில ஆண்டுகளுக்கு முன்பே காரணம் எதுவும் இன்றி மூடப்பட்டுவிட்டது.

சிற்றருவியைப் பொறுத்தவரை யார் சொந்தம் கொண்டாடுவது என்ற சண்டையில் பேரூராட்சி நிர்வாகமும் வனத் துறை நிர்வாகமும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்காடினர். உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மக்கள் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். இப்படி ஒரு புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரை சிற்றருவிக்குச் செல்வதற்கான மெயின் கேட் திறக்கப்படவில்லை. இந்த அருவியில் உள்ள சிறப்பு, நாம் ஏற்கனவே கூறியபடி, பெண்களுக்குத் தனியான அறையிலும் ஆண்களுக்குத் தனியான அறையிலும் தண்ணீர் வரும். இதில் பெண்கள் பாதுகாப்பாகக் குளிக்க முடியும். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இது குழந்தைகள் குளிப்பதற்கான உகந்த இடம்.

புலியருவி, தியாகராஜர் பங்களாவுக்குள் இருந்தது. மதுரை தியாகராஜ செட்டியார் உருவாக்கிய அருவி இது. பொதுமக்கள் உபயோகத்திற்கும் பயன்பட்டுவந்தது. காலப்போக்கில் பராமரிப்பு இன்றிப் பாழ்பட்டுப்போனது. பிறகு அரசாங்கம் அந்த அருவியை எடுத்துக்கொண்டு பங்களா எல்லையைச் சுருக்கி, அதற்கு வெளியே புலியருவியைச் சில ஆண்டுகளாகப் பராமரித்துவருகிறது.

இதேபோல் ஐந்தருவிக்குச் செல்லும் வழியில், அரசாங்கம் உருவாக்கியுள்ள ஒரு புதிய அருவிதான் கரடி ஃபால்ஸ். பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி கிடையாது என வனத் துறை தடுக்கிறது. வனத் துறையில் இருக்கும் சில அதிகாரிகள் சிலர் காசு வாங்கிக்கொண்டு விஐபிக்களைக் கரடி ஃபால்ஸுக்கு அழைத்துச் செல்வார்கள்.

மக்கள் புழங்கிவந்த அருவிகளை இவ்வாறு மூடிவிடுவதால், குற்றாலத்தில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் அண்டை மாநிலமான கேரளத்துக்குச் செல்கின்றனர். அங்குள்ள பாலருவி, அச்சன்கோவில் அருவி, கும்பாவுருட்டி ஆகியவற்றுக்குச் செல்கிறார்கள். அந்த அருவிகள் இப்போது கேரள அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாயைத் தமிழ்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வருவாய் ஈட்டிக் கொடுக்கின்றன. தற்போது அச்சன்கோவில் அருவியில் மட்டும் குளிப்பதற்கு அனுமதிக்காமல் கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது. பாலருவியில் ஒரு நபர் குளிக்க 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குற்றாலத்திலிருந்து அங்கு போகும் வாகனங்கள் செக்போஸ்ட் வரை சென்று நின்றுவிடும். வனப்பகுதிக்குள் சுமார் நாலு கிலோ மீட்டர் பேட்டரி பொருத்தப்பட்ட சுராஜ் மாஸ்டா வேனில்தான் அழைத்துச் செல்வார்கள். அதற்கும் காசு வாங்கிக்கொள்வார்கள்.

சுமார் ஐந்து ஆண்டுகளாகத்தான் அருகிலேயே கேரளத்தில் இப்படி ஓர் அருவி உள்ளது என்பதே சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரியும். குற்றாலம் அருவிகள் மூடப்பட்டதன் விளைவாகவே கேரள அருவிகள் பயணிகளுக்கு அறிமுகமாகின.

தனியார் ஆக்கிரமிப்பு

இதேபோல் குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை செங்கோட்டை கண்ணுப்புலி மேட்டு பகுதிகளில் வனப்பகுதிக்குள் இருக்கும் தனியார் எஸ்டேட்டுகளில் மலைப்பகுதியிலிருந்து வரக்கூடிய நீர் ஓடைகளை மறித்துத் தனியார் அருவிகள் உருவாக்கப்பட்டு அங்கு சென்று குளிப்பதற்கு 1,000 முதல் 5,000 வரை தனியார்கள் வசூலித்து வருகிறார்கள். குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வராத காலங்களில், தனியாருக்குச் சொந்தமான அல்லது ஆக்கிரமிப்புக்கு உள்ள இந்த இடங்களில் இருக்கும் அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளிடம் அதிகமான பணம் வசூலிக்கப்படுவதுண்டு. அதில் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும் அடங்குவர்.

தனியார் அருவிகள் உள்ளே நுழையும் இடங்களில், அந்நியர்களை வரவிடாமல் தடுக்க கேமராக்கள் வைத்துள்ளனர். மேக்கரை பகுதியில் ஆதீனத்திற்குச் சொந்தமான இடத்தில் இதுபோலத் தனியார் எஸ்டேட்டுகள் 50, 100 ஏக்கர்களில் வாங்கப்பட்டு அனுபவிக்கப்படுகின்றன.

மலைகளிலிருந்து விழுகின்ற அருவிகள் எந்தத் தனியாருக்கும் சொந்தமல்ல. அரசாங்கத்திற்குத்தான் சொந்தம். ஆனால், வன இலாகாவினர் அவற்றைத் தனியார் அனுபவிக்க அனுமதிக்கின்றனர். சாமானிய மக்கள் மட்டும் வனப்பகுதிக்குள் போனால் அதற்குத் தடை உண்டு வசதி படைத்தவர்கள் ஜீப்பில் வனப்பகுதிக்குள் செல்லலாம். இது வன இலாகா அதிகாரிகள் செய்யும் சேட்டை.

குற்றாலத்தில் ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அருவியை மூடுவது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இனியாவது இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்குமா? தமிழ்நாட்டு மக்களின் சொத்துகளான மலையும் அருவிகளும் மக்கள் பயன்பாட்டுக்கென்று இனியேனும் ஒதுக்கப்படுமா? தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய சுற்றுலா வருமானம் அடுத்த மாநிலத்துக்குச் செல்வது தடுக்கப்பட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்படுமா?

(சிற்றருவிக்குச் செல்லும் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ள படம், 13-06-2019 அன்று காலையில் எடுக்கப்பட்டது.)


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி!

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!

ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்


வெள்ளி, 14 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon