மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!

பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் அணியினர் சங்கத்தின் முன்னாள் தலைவரான விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ஆம் தேதியன்று அடையாரில் உள்ள ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி இந்த முறையும் போட்டியிடுகிறது. சங்கத் தலைவர் பதவிக்கு நாசரும், செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுகின்றனர். இவர்களை எதிர்த்து நடிகர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது.

இந்நிலையில், சுவாமி சங்கர தாஸ் அணியை சேர்ந்த பாக்கியராஜ், ரமேஷ் கண்ணா, ஐசரி கணேசன், பிரசாந்த், ஆர்த்தி உள்ளிட்ட நடிகர்கள், சங்கத்தின் முன்னாள் தலைவரான விஜயகாந்தை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். நடிகர் சங்க கட்டிடப் பணிகளை நிறைவேற்றுவது, நலிந்த கலைஞர்களுக்கு மாத ஊதியம் வழங்குவது போன்ற உறுதிமொழிகளை விஜயகாந்திடம் தெரிவித்து ஆதரவு கோரியுள்ளனர்.

மேலும், நடிகர் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் அட்டை பெறுவதற்கு ரூ.1 லட்சம் செலுத்த வேண்டியிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையை நலிந்த கலைஞர்களால் வழங்கமுடியாது என்பதால் கட்டணத்தை ரூ.25,000ஆக குறைக்கவும் உறுதிமொழியளித்துள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு பாக்கியராஜ் அணியினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஐசரி கணேசன், “எங்களுக்கு ஆதரவு வழங்கும்படி விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கோரினோம். அதற்கு காரணம், அவர் சங்கத் தலைவராக இருந்தபோது நடிகர் சங்கத்தின் கடன்கள் அடைக்கப்பட்டது. அந்த சென்டிமெண்டுக்காக அவரை சந்தித்து ஆதரவு கோரினோம்.

இதற்குப் பிறகும் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து ஆதரவு கோருவோம்” என்று கூறினார். அதற்குப் பின் பேசிய பாக்கியராஜ், “விஜயகாந்த் எங்களது கையைப் பிடித்து கண்டிப்பாக நீங்கதான் ஜெயிப்பீங்க என்று சொன்னார். அவர் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நலிந்த நாடக நடிகர்களுக்கு உதவிகரமாக சங்கத்தின் சார்பாக பணம் வழங்கப்படும் என்றுதான் கூறினோம். அது வாக்குக்கு பணம் கொடுக்கும் முயற்சியல்ல. நலிந்த கலைஞர்களுக்கான உதவி மட்டுமே” என்று கூறினார்.


மேலும் படிக்க

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


வியாழன், 13 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon