மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?

அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.

ஒற்றை தலைமை பற்றிய விவாதத்தை முற்றிலுமாக தவிர்த்து விட்டு வழக்கமான சம்பிரதாய கூட்டமாகவே நடத்தப்பட்டது இந்தக் கூட்டம். அதேநேரம் ஊடகங்களிலும், பொதுவெளியிலும் கட்சி பிரச்சினைகள் பற்றி பேசக் கூடாது என்று அனைத்து நிர்வாகிகளுக்கும் வாய்ப்பூட்டும் போடப்பட்டுள்ளது.

வழக்கத்துக்கு மாறாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பேச்சு மட்டுமே சற்று வித்தியாசமாக இருந்ததாக கூறுகிறார்கள் நிர்வாகிகள்.

“அணிகளை இணைக்கும்போது பதினொரு பேர் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்னமும் அது அமைக்கப்படவில்லை. இந்த குழு அமைக்கப் பட்டால் தான் நிர்வாகிகள் நியமனம் உட்கட்சிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். எனவே அந்தப் பதினொரு பேர் கொண்ட குழு அமைப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் 15 நாட்களுக்குள் அந்தக் குழுவை அமைத்திட வேண்டும். இதை இணை ஒருங்கிணைப்பாளரிடமும் வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடியை பார்த்து பன்னீர் பேச, அப்போது மௌனமாகவே இருந்தார் எடப்பாடி.

11 பேர் கொண்ட குழு அமைத்தால், அந்தக் குழுவில் வைத்தே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அணிகள் இணைந்தபோது பன்னீர் வைத்த இந்த வேண்டுகோளை எடப்பாடி இன்னும் நிறைவேற்றவில்லை. அதனால்தான் முடிவுகள் எடப்பாடிக்கு சாதமகாக மேற்கொள்ளப்படுகின்றன என்று கருதுகிறார் பன்னீர். இதைத் தடுக்கும் விதமாகவே பன்னீர் இந்தக் குழுவை விரைவில் அமைக்க வலியுறுத்தியுள்ளார்.

11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டால், ஏற்கனவே இருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள், அவைத் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய 11 பேர் கொண்ட குழுவா அல்லது தனியாக பதினொரு பேர் கொண்ட குழுவா என்ற விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. பன்னீர் தனது ஆதரவாளர்கள் பலரையும் கட்சியின் இதயம் போன்ற இந்தக் குழுவில் இடம்பெற வைத்து தனது செல்வாக்கை நிரூபிக்க நினைக்கிறார்.

“துணை முதல்வர் பதவி, குடும்பம் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்தி வந்த பன்னீருக்கு, இப்போது திடீரென தொண்டர்கள். நிர்வாகிகள் மீது கவனம் திரும்பியிருக்கிறது. இது வரவேற்கத் தக்க விஷயம். இது தொடர்ந்தால் நல்லது” என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பன்னீர் ஆதரவாளர்கள்.


மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


வியாழன், 13 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon