மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

ஒற்றுத் தலைவலி!

ஒற்றுத் தலைவலி!

ஒரு சொல் கேளீரோ! – 18: அரவிந்தன்

அடிக்கடி நாம் பயன்படுத்தக்கூடிய சில சொற்களைப் பார்ப்போம்.

எடுத்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு கேட்டுக்கொண்டு போன்ற சொற்களில் ஒற்று மிகும்.

வந்துகொண்டு, சென்றுகொண்டு, தந்துகொண்டு போன்றவற்றில் மிகாது.

எடுத்து, பார்த்து, கேட்டு

ஆகிய சொற்களில் வல்லினம் இருப்பதைக் கவனியுங்கள்.

ந்து, மென்று, சென்று ஆகியவற்றில் மெல்லினம் இருப்பதைக் கவனியுங்கள்.

வல்லினம் வரும்போது ஒற்று மிகும். மெல்லினம் வரும்போது மிகாது.

இது பொது விதி.

கூட, கூடும், கூடாது, போல, போது, பிறகு என்று, என, இவ்வாறு... பின், போன்ற எனச் சில சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு ஒற்று மிகுமா, மிகாதா என்று பார்ப்போம்.

ஒற்று மிகும் சொற்கள்

அதைக்கூட, அவருக்குக்கூட,

சொல்லக்கூடும், இருக்கக்கூடும்,

பார்க்கக் கூடாது, செய்யக் கூடாது,

எனச் சொன்னாள்

அதைப் போல

செய்வதற்குப் பிறகு

கொடுத்ததற்குப் பிறகு

வந்ததற்குப் பின்

அதைப் போன்று

ஒற்று மிகாத சொற்கள்

அதுகூட, ஒன்றுகூட,

அதுபோல, பார்த்தபோது

செய்த பிறகு

கொடுத்த பின்

என்று சொன்னாள்

இவ்வாறு தெரிவித்தார்

போன்ற செயல்கள்

அதுபோன்ற

மேலே உள்ள உதாரணங்களில் ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள். அதுபோல, தந்த பிறகு, ஆகியவற்றில் ஒற்று மிகாது.

அதைப் போல, தந்ததற்குப் பிறகு என்று வரும்போது ஒற்று மிகும்.

இந்த இரண்டு உதாரணங்களையும் வாய்விட்டுச் சொல்லிப்பாருங்கள்; வித்தியாசம் புரியும். இதேபோன்ற பிற சொற்கள் விஷயத்திலும் முடிவெடுக்க உதவும்.

குழப்பம் வரக்கூடிய சொற்கள்

சிறைப்பிடித்தல், கடைப்பிடித்தல் இந்த இரு சொற்களிலும் ஒற்று மிகும். ஒற்று இல்லாவிட்டால் கடை - பிடித்தல், சிறை - பிடித்தல் எனத் தனித்தனியாகப் பிரிந்து வேறு பொருள் தந்துவிடும்.

கைப்பிடி - இதில் 'ப்' இல்லாவிட்டால் கையைப் பிடிப்பதாகப் பொருள் வரும் 'ப்' வரும்போது handle என்ற பொருள் வரும்.

போடக் கூடாத இடங்கள்

ஒற்று போட வேண்டிய இடங்களில் போடாவிட்டாலும் பரவாயில்லை. போடக் கூடாத இடங்களில் வந்துவிடக் கூடாது. அது வாசிப்புக்கு மிகுந்த இடைஞ்சலை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டு:

வந்தப்போது, தந்தப் பிறகு, பார்த்தப் பின்னால், கேட்டக் கதை, ஆணைப் பிறப்பித்தார் - இந்தச் சொற்களில் ஒற்று மிகாது.

வந்தபோது, கேட்ட கதை, ஆணை பிறப்பித்தார் என்று ஒற்று இல்லாமல் எழுத வேண்டும்.

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் இலக்கண விளக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தாலும், மிகவும் பிரபலமான இலக்கண விதி என்பதால் இது குறிப்பிடப்படுகிறது. ஒரு பெயர்ச் சொல்லுக்கு முன்பு எதிர்மறையான சொல் வரும் என்று இதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். இத்தகைய வாக்கியங்களில் ஒற்று மிகும்.

எடுத்துக்காட்டு:

வாராக் கடன், குறையாச் செல்வம், மீளாத் துயில், நம்பிக்கையில்லாத் தீர்மானம்

சொல்லிப்பார்த்தால் புரியும்

பொதுவாகவே வாய்விட்டுச் சொல்லிப்பார்த்தால் ஒற்று மிகுமா, மிகாதா என்பதைப் பெரும்பாலும் புரிந்துகொண்டுவிடலாம். கீழ்க்கண்ட வாக்கியங்களைச் சொல்லிப் பாருங்கள்:

வாய்விட்டு கதறினான்

கூட்டி சென்றான்

காதலை சொல்ல

மேசையை தட்டினான்

முதன்மையான படம்

தவறு புரிந்தோர்

வருகை தந்தார்.

இவற்றைச் சொல்லிப்பாருங்கள். எதில் இயல்பாக ஒற்று வருகிறது, எதில் வரவில்லை என்பதைக் கவனியுங்கள்.

முதல் நான்கு வாக்கியங்களில் ஒற்று மிகும். அடுத்த மூன்றில் மிகாது. சொல்லிப்பார்த்து

இவற்றைச் சரியாக உங்களால் சொல்ல முடிந்ததா?

நான்கு எழுத்துகள் படுத்தும் பாடு!


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடிசெக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon