மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

மாணவர் வருகைப்பதிவு: பெற்றோருக்கு எஸ்எம்எஸ்!

மாணவர் வருகைப்பதிவு: பெற்றோருக்கு எஸ்எம்எஸ்!

அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு விரைவில் சீருடைகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.

இன்று (ஜூன் 12) சென்னை வேளச்சேரியில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் மாணவ மாணவியருக்கு இலவசச் சீருடைகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், வரும் பட்ஜெட்டில் தனியார் பள்ளிகள் அஞ்சும் அளவுக்கு பள்ளிக்கல்வித் துறைக்குப் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாகக் கூறினார்.

“இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டும் இதேபோல 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். நாளை மாணவ மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் தொடங்கிவைக்கவுள்ளார். தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 70 லட்சம் மாணவர்கள் தமிழ் வழிக் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கி வருகிறோம். அதேபோல, தமிழை வளர்க்கும் நோக்கில் தனியார் பள்ளிகளுக்கு 7 லட்சத்து 40 ஆயிரம் பிரதிகள் இலவசமாக வழங்கியிருக்கிறோம்” என்று தெரிவித்தார் செங்கோட்டையன்.

மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா இல்லையா என்பதை க்யூ ஆர் கோடு உடன் கூடிய ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்ய முடியும். இதன் மூலமாக மாணவ மாணவியரின் வருகைப்பதிவு குறித்த தகவல்கள் பெற்றோருக்கு எஸ்எம்எஸ்ஸில் அனுப்பப்படவுள்ளன.

மாணவ மாணவியருக்கான சீருடைகள் தயாரிக்கும் பணிக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்காததால், இப்போது அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறினார் செங்கோட்டையன். விரைவில் சீருடைகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

செங்கோட்டையனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவி வழங்குமாறு, சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது. இது தொடர்பாகப் பேசிய செங்கோட்டையன், இதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்தார். இறுதி மூச்சு இருக்கும் வரை முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமைக்கு நேர்மையாக இருப்பேன் என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon