மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

தாஜ்மஹால்: நேரம் செலவிட்டால் அபராதம்!

தாஜ்மஹால்: நேரம் செலவிட்டால் அபராதம்!

சுற்றுலாப் பயணிகள் மூன்று மணி நேரத்துக்கு மேல் தாஜ்மஹாலில் நேரம் செலவிட்டால் அவர்களிடம் இனி அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமாக நீண்டகாலமாக ஓங்கி நிற்கிறது. வெளிநாட்டுப் பயணிகளை அதிகமாக ஈர்ப்பதோடு, இதன் வாயிலாகச் சுற்றுலாத் துறைக்கும் வருவாய் கிடைக்கிறது. தாஜ்மஹாலில் தற்போது புதிய விதிமுறை ஒன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது சுற்றுலாப் பயணிகள் மூன்று மணி நேரத்துக்கு மேல் நேரம் செலவிட்டால் அவர்களிடம் அபராதமாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழையும்போது வழங்கப்படும் டோக்கன்களுக்கான செல்லுபடி காலம் இனி மூன்று மணி நேரங்கள் மட்டுமே.

இதுகுறித்து தொல்பொருள் ஆய்வு அமைப்பின் கண்காணிப்பாளரான பசந்த் சிங் பிசினஸ் டுடே ஊடகத்திடம் பேசுகையில், “தாஜ்மஹாலின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவுப் பகுதிகளில் ஏழு கேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5 கேட்கள் வெளியேறுவதற்கான பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் உள்நுழைவதற்குத் தனி கேட்கள் இருக்கும். உள்நுழையும் பயணிகள் டோக்கன்கள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதில் மூன்று மணி நேரம் காலக்கெடு உள்ளது. கூடுதல் நேரம் செலவழிக்க விரும்பும் பயணிகள் கேட்புகளுக்குச் சென்று அந்த டோக்கன்களை மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர அடிப்படையில் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போதைய அறிவிப்பு சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. சென்ற ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்ப்பதற்கான கட்டணம் ரூ.200 கூடுதலாக உயர்த்தப்பட்டது. உள்நாட்டுப் பயணிகளுக்கு ரூ.250 மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ரூ.1,300 தற்போது கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணம் ரூ.540லிருந்து ரூ.740 ஆக உயர்த்தப்பட்டது.


மேலும் படிக்க

பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!

வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon