மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

குடிநீர்த் திட்டத்துக்காக ரூ.5,398 கோடி: தமிழகம் கோரிக்கை!

குடிநீர்த் திட்டத்துக்காக ரூ.5,398 கோடி: தமிழகம் கோரிக்கை!

ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டத்துக்காகத் தமிழகத்துக்கு 5,398 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் வேலுமணி.

நேற்று (ஜூன் 11) டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்தார் தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அப்போது, தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய குடிநீர்த் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அவரிடம் அளித்தார்.

அதில், மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஊரகப் பகுதியிலுள்ள வீடுகளில் 99.98 சதவிகித குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன எனவும், நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் தினமும் 4,505 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படுகிறது எனவும், தமிழகத்தில் மொத்தம் 600 நீர் விநியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன எனவும், இவைகளில் பெரும்பாலானவை தரைக்கு மேல் இருக்கும் நீரோட்டங்களைச் சார்ந்தவை என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 550 மில்லியன் லிட்டர் நீர் பெறும் வகையில் கடல் நீரைக் குடிநீராக்கும் 2 திட்டங்கள் ரூ.7,337.78 கோடி செலவில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இந்த திட்டங்கள் நிறைவடையும். ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஒருங்கிணைந்த குடிநீர்த் திட்டத்துக்காக ரூ.5,398 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

இதனால் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகள், மரக்காணம், விக்கிரவாண்டி பேரூராட்சிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்கள் பயனடையும். சிவகங்கை மாவட்டத்தின் 2,452 ஊரகப் பகுதிகள், 8 பேரூராட்சிகள் காவிரி நதியின் நீர் ஆதாரத்தைப் பெறுவதன் மூலம் 10.77 லட்சம் பேருக்குப் பயன் கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் வறட்சி ஏற்பட்டது என்றும், 2017இல் குறைவான மழையே பெய்தது என்றும், 2018ஆம் ஆண்டில் சராசரி மழையளவில் 24 சதவிகிதமே பெய்தது என்றும், இதனால் மக்களுக்கு நீர் பகிர்ந்தளிப்பதில் தமிழக அரசு சவாலைச் சந்தித்துவருகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் புதிய ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுதல், கிணறுகளைத் தூர் வாருதல், நீர் வினியோகத் திட்டங்களைப் புதுப்பித்தல், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்தல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்திவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வறட்சியை எதிர்கொள்ளும் பணிகளுக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.448 கோடி நிதி தேவைப்படுகிறது. மத்திய அரசின் தூய்மைத் திட்டங்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஊரகப் பகுதிகளில் 50 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகளிலும் கடந்த 5 ஆண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 12,524 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருகிறது. வீடு வீடாகச் சென்று கழிவுகளைப் பெற்று அவற்றை தரம் பிரித்துப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்காகத் தூய்மைக் காவலர்கள் என்ற பணிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கிவருகிறது” என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடிசெக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon