மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!

சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் ஜூன் மாதத்தில் சட்டமன்றம் கூடுவது வழக்கம். கடந்த வருடம் மே 29ஆம் தேதியே மானியக் கோரிக்கை கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய தாமதத்துக்குத் தேர்தல் ஒரு காரணம் என்றாலும்கூட இதுவரை சட்டமன்றக் கூட்டத் தொடருக்கான அறிவிப்பே வெளியாகவில்லை. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென முதல்வருக்கு வலியுறுத்தினார்.

ஏற்கனவே மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் சபாநாயகர் தனபால் மீது எதிர்க்கட்சியான திமுக சார்பாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியைக் கவிழ்ப்பது தொடர்பாக திமுக தரப்பிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாம் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். அப்படி ஒரு நிலை வரும்பட்சத்தில் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்குக் கூட வாய்ப்புள்ளது. இப்படியிருக்க சட்டமன்றம் தாமதமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிக்கலான சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் ஒரு மாத காலம் வரை சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்த திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதுதொடர்பாக கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 24ஆம் தேதி ஆரம்பித்து ஒரு மாத காலம் வரை சட்டமன்ற மானியக் கூட்டத் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக முக்கிய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் செய்த முதல்வர், அனைத்து துறை செயலாளர்களிடம் துறை ரீதியான விவரங்களைச் சேகரிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். விரைவில் கூட்டத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்றனர்.

இதற்கிடையே சட்டமன்றம் கூடும்போது திமுக, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் தந்தால் என்ன செய்வது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சிலர் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவரோ, “திமுகவினர் பிரச்சினை ஏதும் செய்யமாட்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விட விரைவில் வரவுள்ள மாநிலங்களவைத் தேர்தல் பெரிது. அமளியில் ஈடுபட்டால் அதைக் காரணம் காட்டி ஒரு சிலரை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாதபடி செய்யலாம். ஒருமுறை பட்டால்தான் அவர்களுக்குப் புரியும். இதனால் மற்ற எம்.எல்.ஏ.க்கள் பெரிய விவகாரமாக இருந்தாலும் வெளிநடப்பு செய்வதோடு முடித்துக்கொள்வர்” என்று தெம்பாகக் கூறியிருக்கிறார்.


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!

உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை


அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!


கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடிசெக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!


புதன், 12 ஜுன் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon